விதியை மதியால் வெல்லலாம் என்றால் அது விதி மீறல் இல்லையா? மார்க்கண்டேயர்.
விதி என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. தங்களது வினாவில் அதன் இரண்டு - வேறுபட்ட - அர்த்தங்கள் இணைக்கப் பட்டுள்ளன. அவ்வாறு இல்லாது, அச்சொல்லின் ஒரு அர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், இந்த வினாவின் பொருள் மாறிவிடும்!
விதி என்பதை விதிமுறை (rule) / ஒழுங்குமுறை / கட்டுப்பாடு என்ற அர்த்தத்தில் நோக்கினால், விதியை மதியால் வெல்வது என்பது சாமர்த்தியமாகவோ அல்லது விதிமீறலாகவோ இருக்கலாம். இது சமூக சூழல், குறிப்பிட்ட சூழ்நிலையின் தேவை, அச்சூழல் நிகழும் இடத்தின் சட்ட ஒழுங்கு போன்றவற்றைச் சார்ந்தது.
ஆனால், 'விதியை மதியால் வெல்லலாம்' என்பதில் உள்ள 'விதி' பொதுவாக ஊழ் அல்லது கர்மவினை என்பதைக் குறிக்கின்றது. அவ்வாறெனில், எப்படிக் கர்மவினையை அறிவால், அதாவது ஞானத்தால் [அ] மெய்யறிவால் வெல்ல முடியும் என்றாகிவிடும் இவ்வினா. எனவே, நாம் இந்த நோக்கிலேயே விடையைப் பார்க்கலாம்.
மார்க்கண்டேயர், பல காலம் குழந்தைப் பேறு இல்லாதிருந்த, சிவனடியார்களான அவருடைய பெற்றோருக்கு இறையருளால் பிறந்தவர்.
குழந்தைப்பேறு அருளும்போது இறைவன் அவர்களிடம் ஒரு வினாவைக் (trick question) கேட்கிறார். 'மந்தமாக நூறாண்டுகள் வாழும் குழந்தை வேண்டுமா, அல்லது சிறந்த அறிவாளியான பதினாறே ஆண்டுகள் மட்டும் வாழும் குழந்தை வேண்டுமா?' அப்பெற்றோர் வேண்டிப் பெற்றது பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய புத்திசாலிக் குழந்தையை.
தன்னுடைய பெற்றோரைப் போலவே மார்க்கண்டேயரும் சிறந்த சிவபக்தராக இருந்தார். அவரது ஆயுள் முடியும் நேரமும் வந்தது. பெற்றோர் கலங்கித் தவித்தனர். இறைவனது கருணையால் பிறந்த தவப்புதல்வன், இறைவனுடைய வரத்தின்படி இறப்பதைச் சாதாரண மானிடர்களான அவர்களால் எப்படித் தடுக்க முடியும்? மார்க்கண்டேயர் அவர்களது கலக்கத்தைக் கண்டார். 'அஞ்சேல், இதுவே இறைவனின் தீர்வு எனில் நம்மால் ஆவது என்பது எதுவுமில்லை. எனவே, நாம் சிவபூஜை செய்து அவரைத் தொழுவோம். எது நிகழ்ந்தாலும் அவரது திருவுளப்படியே நிகழ்ந்தது என்று ஏற்றுக் கொள்வோம்,' என்று பெற்றோருக்கு ஆறுதலளித்து, சிவபெருமானைத் தொழத் துவங்கினார்.
எந்தை ஈசன் அருளால் பிறந்த அருட்ச்செல்வர் என்பதால் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்கத் தன் கணங்களை அனுப்பாமல், யம தர்மராஜனே நேரில் வந்தான். குறித்த நேரத்தில் பாசக் கயிற்றை அவர் மீது வீசினான். மார்க்கண்டேயர் தாவி எழுந்து தான் தொழுத சிவலிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டார். பாசக் கயிறு அவரையும், அவர் தழுவிய ஈசனின் திருவுருவத்தையும் சேர்த்து இழுத்தது. அங்கு ஒரு பெரும் ஓங்கார ஒலி கேட்டது. நிலம் நடுங்கியது. வான் இருண்டது.
உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் அக்கணத்தில் தாங்கள் ஒரு கயிறால் கட்டுண்டது போல உணர்ந்தனர். லிங்கத்திலிருந்து பொன்னார் மேனியனான சிவபெருமான் பெரும் ஒளியுடன் தோன்றினார். பாசக் கயிற்றை வீசிய யமராஜனை எட்டி உதைத்தார். பரம பக்தனான மார்க்கண்டேயரின் தலையில் தன் திருக்கரத்தை வைத்து 'மார்க்கண்டேயா, உன் தூய்மையான பக்தியை மெச்சினோம். இனி உனக்கு மரணமே கிடையாது. இன்றிலிருந்து நீ மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் சிரஞ்சீவி ஆவாய்' என்று அருளி மறைந்தார். அவரது பெற்றோர் அகமகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர்.
அனைவரும் கருணைப் பெருங்கடலான ஈசனைப் பணிந்து வணங்கினர். அன்றிலிருந்து அவரை 'என்றும் பதினாறு மார்க்கண்டேயர்' என்று உலகோர் போற்றித் தொழுகின்றனர்.
சிரஞ்சீவித்துவம் அல்லது 'மரணமில்லாப் பெருவாழ்வு' என்பதை, சாவே இல்லாமல் உருவோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வது என்று நேரடி அர்த்தமாகப் பெரும்பாலோர் எடுத்துக் கொள்வர். இது அறியாமை.
மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் அருளியது முக்தி எனும் வீடுபேற்றை. தன் கர்மவினையின் காரணமாகப் பல பிறவி எடுத்து வந்து, பின்னர் குருவருளால் முக்தி நோக்கி வழிகாட்டப்பட்டு, ஏதோ ஒரு பிறவியில் இறையருளால் அடைய வேண்டிய அப்பேரானந்தப் பெருநிலையை, பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து பெறும் இறுதி விடுதலையை, மார்க்கண்டேயருக்கு ஈசன் அப்பிறவியிலேயே அளித்தருளினார். மார்க்கண்டேயர் அக்கணமே ஜீவன்முக்தர் ஆனார். இதுவே அந்நிகழ்வில் மறைபொருள்.
அற்புதமான இப்புராண நிகழவே, 'விதியை மதியால் வெல்லலாம்' என்பதற்கும் சிறந்த உதாரணமாக விளங்குகின்றது.
மார்க்கண்டேயரின் விதி, அதாவது கர்மவினைப் பயன், அவர் அப்பிறவியில் பதினாறு வயதிலேயே மரிப்பார் என்பது. தன்னுடைய மரண காலம் வந்ததை அறிந்தபோதிலும் மார்க்கண்டேயர் கலங்கிப் புலம்பவில்லை. தெளிவாகச் சிந்தித்து, தன்னுடைய பிறப்பிற்கு காரணமான ஈசனே கதி என்று இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டார்.
இது நிச்சயமாக மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டுச் செய்த செயல் அல்ல. ஆனால், 'ஆறாவது அறிவு' என்று நாம் ஓயாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் புத்தியை, சரியான நேரத்தில், முறையாகப் பயன்படுத்திய செயலே.
சிவனடியாரான மார்க்கண்டேயர் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தார். ஏனெனில், அவரது புரிதலில், பதினாறு வயதில் மரணம் என்பது இறைவனின் திருவுளச் செயலே. எனவே, உடலின் மீதிருந்த பற்றை உதறிவிட்டு, மரணம் பற்றிய சிந்தனையை ஒதுக்கிவிட்டு, அதாவது மனத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, 'நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல,' என்ற தெளிவுடன், முழுமையான விழிப்புணர்வோடு தன் இறுதிக் கணத்தை எதிர்கொண்டு, எல்லாம் வல்ல இறைவனையே தன்னுடைய இறுதிக்கு கணத்தில் சரணடைந்தார்.
எந்தை ஈசன் அங்கு தோன்றி யம தர்மராஜனைத் தண்டித்து மார்கண்டேயருக்கு சிரஞ்சீவித்துவம் அளித்தது, யமன் மீதுள்ள குற்றத்தாலல்ல. அவனும் தன் கடமையைத்தானே செய்ய முயன்றான்.
அதில் தவறேதுமில்லையே. மேலும், ஒரு பிறவியில் உடல் மரிக்கவில்லை எனில், கர்மவினையின் தொடர்ச்சி அறுந்துபோக, உலகம் உயிரினங்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தால் திண்டாட்டத்திற்கு உள்ளாகிவிடும். ஆனால், ஆதியோகி மற்றும் ஆதிகுருவாகிய எந்தை ஈசன் இவ்வாறு திருவிளையாடல் புரிந்த காரணம், பக்தி யோகத்தின் முக்கிய அம்சமான 'முழுமையான சரணாகதி' என்பதன் பெருமையை உலகிற்கு உணர்த்துவதே ஆகும்.
விதி, அதாவது கர்மவினை என்பது நம்முடைய செயல்களின் விளைவே. ஒரு உயிரானது பல பிறவிகளை எடுக்க, முற்பிறவிகளில் அது செய்த கர்மங்கள், அதாவது செயல்களே காரணம்.
எனவே, தன்னுடைய செயல்களின் விளைவை அனுபவிப்பதில் இருந்து விடுபடவும் அவ்வுயிரால் இயலும். இதற்கான வாய்ப்பு [அ] சாத்தியம் மனிதராகப் பிறவியெடுத்து எல்லா உயிர்களுக்குமே உள்ளது. தனக்கு வழங்கப்பட்ட பெருங்கொடையான அறிவை, தக்க சமயத்தில், முறையாகப் பயன்படுத்தி, 'நான் இன்னார்' என்ற புற அடையாளத்திலிருந்து விடுபட்டு, படைப்பிலுள்ள உயிராகிய தானும், படைப்பின் மூலமாகிய இறைவனும் வெவ்வேறல்ல, ஒன்றே என்ற உயிர்மெய் அறிந்து, அதாவது ஞானோதயம் அடைந்து, பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு முக்தி என்ற வீடுபேற்றை அடைவதற்கான வாய்ப்பையே 'விதியை மதியால் வெல்லலாம்' என்பது குறிக்கின்றது.
'அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது,' என்று ஒளவையாரால் புகழ்ந்து கூறப்பட்ட பிறவியை எடுத்த நாம், இந்த அரிய + (மெய்) அறியும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இப்பிறவியிலேயே முக்தியை அடைவது என்பது அவரவர் சாமர்த்தியம்!