"நம் அலுவலகத்தில் இரு குழுக்கள் இருக்கின்றனவே, அவற்றில் நீங்கள் எந்தக் குழு?" என்றார் குருமூர்த்தி. இருவரும் ஒரே அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இப்போதுதான் அவரை முதலில் சந்திக்கிறேன்.
"நான் எந்தக் குழுவிலும் இல்லை. நீங்கள்?" என்றேன்.
"நான் தேவராஜ் குழுதான். அவருக்குத்தான் மேலிடத்தில் செல்வாக்கு அதிகம். வெங்கடகிருஷ்ணன் குழு அவ்வளவு வலுவாக இல்லை. நீங்களும் தேவராஜ் குழுவில் சேர்ந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது."
"அப்ளிகேஷன் ஃபாரம் ஏதாவது இருக்கிறதா?" என்றேன் அப்பாவித்தனமாக.
அவர் என்னை முறைத்து விட்டுப் போய் விட்டார்.
நான் இரண்டு குழுவிலும் இல்லை என்றாலும் மூன்றாவது குழுவில் இருக்கிறேன். பரந்தாமன் குழு.
உண்மையில் பரந்தாமன் குழு என்று எதுவும் இல்லை!
எங்கள் அலுவலகத்தில் மேல் நிலையில் இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள். தேவராஜ், வெங்கடகிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி. யார் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்வதற்காக எப்போதுமே ஏதாவது போட்டிச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
சில சமயம் தேவராஜ் கை ஓங்கி இருக்கும், வேறு சில சமயம் வெங்கடகிருஷ்ணனின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். அநேகமாக அலுவலகம் முழுவதுமே இரண்டாகப் பிரிந்திருக்க, என் போல் ஒரு சிலர் மட்டும் இந்தக் குழு அரசியலில் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்போம்.
தேவராஜின் கை ஓங்கி இருந்தபோது அவர் வெங்கடகிருஷ்ணனின் குழுவைச் சேர்ந்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பார். தொல்லை என்பது சிறு தொந்தரவு முதல் பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுதல் போன்ற தீங்குகள் வரை பலவகையாக இருக்கும்.
ஒரு கட்டத்தில் தேவராஜ்தான் வெற்றி பெறுவார் என்று தோன்றியதால் வெங்கடகிருஷ்ணன் குழுவிலிருந்த சிலர் தேவராஜ் குழுவுக்கு மாறினர்.
திடீரென்று ஒருநாள் நிலைமை மாறி விட்டது. தேவராஜ் செய்த ஒரு தவறால் மேலிடத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டு வெங்கடகிருஷ்ணன் கை ஓங்கி விட்டது. இப்போது வெ.கி. தன் பழிவாங்கலைத் தொடங்கி விட்டார்.
இந்தப் பழிவாங்கலில் பாதிக்கப்பட்டவர்களில் குருமூர்த்தியும் ஒருவர். அவருக்கு வரவிருந்த பதவி உயர்வு பறிபோனதுடன் அவர் மீது பல புகார்கள் எழுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.
அவர் என்னிடம் புலம்பினார். "தப்புக் கணக்குப் போட்டு விட்டேன் ஐயா! இந்த தேவராஜை நம்பி மோசம் போய் விட்டேன். பேசாமல் வெங்கடகிருஷ்ணனிடம் சரணடைந்து விடலாம என்று பார்க்கிறேன்" என்றார்.
"மறுபடியும் தேவராஜ் கை ஓங்கினால் என்ன செய்வீர்கள்?" என்றேன்.
அவரால் பதில் சொல்ல முடியவில்லை. "ஆமாம் நீங்கள் இரண்டு குழுவிலும் இல்லையே, உங்களுக்கு எதுவும் பாதிப்பு இல்லையா?" என்றார்.
"இல்லை. பதவி உயர்வுப் பட்டியலில் என் பெயரும் இருப்பதாகச் சொல்கிறார்கள்" என்றேன்.
"அது எப்படி?" என்றார் குருமூர்த்தி வியப்புடன்.
"நான்தான் பரந்தாமன் குழுவில் இருக்கிறேனே!" என்றேன்.
"பரந்தாமன் எம்.டி. ஆயிற்றே? அவருக்கு ஏது குழு? அதுவும் அவர் எங்கோ தூரத்தில் தலைமை அலுவலகத்தில் இருக்கிறார்."
"ஆனால் அவருக்கு இங்கே நடப்பதெல்லாம் தெரியும். இந்த இரு குழுக்களின் சண்டையை அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னைப்போல் எந்தக் குழுவிலும் சேராதவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். இது தெரிந்துதான் வெங்கடகிருஷ்ணன் என் பதவி உயர்வைத் தடுக்க முயலவில்லை."
"தவறு செய்து விட்டேன். இவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் கம்பெனிக்கு விசுவாசமாக இருந்திருந்தால் விருப்பு வெறுப்பு இல்லாத எம்.டி.யின் துணை எனக்கும் கிடைத்திருக்கும்" என்றார் குருமூர்த்தி வருத்தத்துடன்.
உடனேயே சமாளித்துக்கொண்டு "இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இரண்டு குழுவிலிருந்தும் விலகிப் பரந்தாமன் குழுவில் சேர்ந்து விடப் போகிறேன். பரந்தாமன் குழுவில் சேர்வதற்கு அப்ளிகேஷன் ஃபாரம் இருக்கிறதா?" என்றார் சிரித்தபடி.
குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்:
விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் அடி சேர்ந்தவர்களுக்கு எப்போதுமே துன்பம் வராது.