"கடவுள் நமக்கு ஐந்து புலன்களைக் கொடுத்திருப்பதே அந்தப் புலன்களின் மூலம் நாம் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே? பின் ஏன் புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்?"
நான் மதித்துப் போற்றும் ஆன்மீகப் பெரியவரிடம் நான் கேட்ட கேள்வி இது.
"சர்ர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் கூறும் ஆலோசனை என்ன?" என்று என்னைக் கேட்டார் அவர்.
"குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது என்பார்கள். பலவித உணவுக் கட்டுப்பாட்டுக்களை விதிப்பார்கள்."
"நோய் வந்தால் உணவுக் கட்டுப்பாட்டுகளை ஏற்றுக் கொள்கிறோம். முதலிலேயே கட்டுப்பாட்டோடு இருந்தால் நோய் வருவதற்கான வாய்ப்பே குறைவாகத்தானே இருக்கும்? எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏன் வருகின்றன? புலன்களைக் கட்டுப்படுத்தாததால்தானே?"
"ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாயிற்றே?"
"அதற்குத்தான் இறைவனின் துணையை நாட வேண்டும்?"
"கடவுளால் நம் புலன்களைக் கட்டுப் படுத்த முடியுமா?"
"புலன்களைக் கொடுத்தவனால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதா? ஆனால் நாம் விரும்பினால்தான் கடவுள் நமக்கு உதவுவார்."
"கடவுள் பக்தி உள்ளவர்கள் பலபேர் சாப்பாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும், கேளிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்களே!"
"அவர்கள் பக்தி உண்மையான பக்தி இல்லை. பொதுவாகவே நம் மனத்தை ஒரு திசையில் செலுத்தினால், அது மற்ற திசைகளில் போகாது. நீ சைக்கிள் ஓட்டும்போது சாலையை நேராகப் பார்த்து ஓட்டினால் சைக்கிள் நேராகப் போகும். பக்கவாட்டில் பார்த்துக் கொண்டே ஓட்டினால் சாய்ந்த பாதையில்தான் போகும். ஒழுக்கம் என்றால் சாயாமல், வளையாமல், விலகாமல் நேர்ப் பாதையில் போவது என்று பொருள்.
"யாராவது ஒருவர் அவரது பொருளை நம்மிடம் கொடுத்துப் பாதுகாக்கச் சொன்னால் அதை நாம் தவறாகப் பயன்படுத்துவோமா? எச்சரிக்கையுடன் பாதுகாப்போம் அல்லவா? இந்த உடல் இறைவனின் சொத்து. அதைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையது என்று உணர்ந்தால் புலன்களைக் கட்டுப்படுத்துவது கை கூடும். இந்த உணர்வு வருவதற்கு இறைவனிடம் பக்தி வேண்டும். இறைவனிடம் பக்தி செலுத்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் புலன்களை நாம் கட்டுப்படுத்தலாம். நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்."
அந்தப் பெரியவர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.
பொருள்:
ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்த இறைவனை வணங்கி, பொய் கலவாத ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் நீண்ட காலம் நலமாக வாழ்வார்கள்.