வங்கியில் கூட்டம் அதிகம் இல்லை. சேமிப்புக் கணக்குப் பிரிவுக்கு முன் அந்தப் பெரியவர் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து, "என்னோட பாஸ் புக் என்ட்ரி போடக் கொடுத்திருந்தேனே?" என்று பணிவாகக் கேட்டார். சாளரத்துக்குப் பின்னிருந்த இளைஞனுக்குக் கோபம் வந்து விட்டது.
"இங்க பாருய்யா, இந்த மாதிரி பிஸியான நேரத்தில பாஸ் புக் என்ட்ரி போடச் சொல்றதே தப்பு. அதிலேயும் ஒரு அஞ்சு நிமிஷம் கூட வெயிட் பண்ண முடியாம இப்படி நச்சரிக்கிறியே!"
'பெரியவர் வயதுக்குக் கூடவா மரியாதை கொடுக்கக்கூடாது?' என்று நினைத்துக் கொண்டார் பக்கத்தில் நின்ற இன்னொரு வாடிக்கையாளர். ஆனால் பெரியவர் எதுவும் சொல்லவில்லை.
ஐந்து நிமிடங்கள் கழித்து லெட்ஜரைத் திறந்து பாஸ் புக்கில் என்ட்ரி போடத் துவங்கிய அந்த இளஞன் சற்றே ஆச்சரியத்துடன் பெரியவரைப் பாத்தான், "இது யாரோட அக்கவுண்ட்? உங்க முதலாளியோடதா?" என்றான்.
"என்னுடையதுதான்" என்றார் பெரியவர். கணக்கில் இருந்த பெருந்தொகைக்கும், அந்தப் பெரியவரின் எளிய தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைத்த இளைஞன் மௌனமாக என்ட்ரி போட்டு அவரிடம் கொடுத்தான்.
"தேங்க்ஸ்" என்றார் பெரியவர்.
இளைஞன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் மௌனமாக இருந்தான்.
பெரியவர் பாஸ் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது மானேஜர் அறையைக் கடந்துதான் போக வேண்டி இருந்தது. பெரியவரை கவனித்து விட்ட மானேஜர் எழுந்து வெளியே வந்து, "சார்! உள்ள வாங்க" என்று தன் அறைக்குள் அழைத்துச் சென்றார்.
பெரியவரிடம் பாங்க் மானேஜர் பேசிக்கொண்டிருந்தபோது பாஸ் புக் என்ட்ரி போட்டுக் கொடுத்த இளைஞன் ஒரு விளக்கம் கேட்பதற்காக மனேஜரின் அறைக்குள் வந்தான். பெரியவரைப் பார்த்ததும் சற்றுத் தயங்கினான்.
"வாங்க பாஸ்கர்" என்று அவனை உள்ளே அழைத்த மானேஜர், அவன் உள்ளே வந்ததும், "பாஸ்கர், சார் ஒரு தொழிலதிபர். அவர் கம்பெனிக் கணக்குகள் வேறு வங்கியில் இருந்தாலும் அவரோட எஸ் பி அக்கவுன்ட் நம்ம பாங்க்கிலதான் இருக்கு. அவர் குடும்பத்தில இருக்கறவங்களோட அக்கவுண்ட்ஸ், அதைத் தவிர நெறைய ஃபிக்ஸட் டெபாசிட் எல்லாம் வச்சிருக்கார். அவரைப் பாத்தா ஒரு கோடீஸ்வரர்னு தெரியாது. அவ்வளவு எளிமை. எல்லார்கிட்டயும் ரொம்ப மரியாதையாப் பேசுவார். அவரை ஒரு சாதாரண ஆளா நெனச்சு ஏமாந்தவங்க எத்தனையோ பேர். முதல்ல சின்னதா தொழில் ஆரம்பிக்கச்சே எப்படி இருந்தாரோ அப்படியேதான் இருக்கார் இப்பவும்! இவரைப் பத்திச் சொல்லிக்கிட்டே போகலாம். 'சார்! நீங்க பாங்க்குக்கு வர வேண்டிய அவசியமே இல்ல. உங்க டிரைவரையோ வேலைக்காரனையோ அனுப்பினா போதும்'னு நான் நெறைய தடவை அவர் கிட்ட கேட்டுக்கிட்டுருக்கேன். ஆனா அவர் கேக்க மாட்டார்" என்றவர், பெரியவரிடம், "சார், இவர் பாஸ்கர். இப்பதான் டிரான்ஸ்ஃபர்ல நம்ம பிராஞ்சுக்கு வந்திருக்கார். இவர்தான் எஸ்.பி. அக்கவுண்ட் பாத்துக்கறார்." என்றார்.
"தெரியுமே! இப்ப கூட இவர்கிட்டதான் என்ட்ரி போட்டுக்கிட்டு வரேன்" என்று சொன்ன பெரியவர் இளைஞனைப் பார்த்துப் புன்னகை செய்தார்.
குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
பொருள்:
பற்றுக்களைத் துறந்து வாழ்பவர்களின் பெருமையைக் கூறுவது இவ்வுலகில் இதுவரை (பிறந்து) இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கூறுவது போல் ஆகும் (அவ்வளவு கடினமானது!)