நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நண்பன் இளங்கோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சியை விட ஆச்சரியமே அதிகம் ஏற்பட்டது எனக்கு. காரணம் இளங்கோவை நான் சந்தித்தது ஒரு கோவிலில்.
இளங்கோ என் பள்ளித் தோழன். பள்ளி நாட்களில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. இத்தனைக்கும் அவன் பெற்றோர் இருவரும் பக்தியில் ஊறியவர்கள். அவர்களது அதீத பக்தியே இளங்கோவிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ!
பள்ளி நாட்களில் அவன் கோவிலுக்குப் போக மாட்டான்.தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று பெருமையாகக் கூறிக்கொண்ட அவன், எங்களை எல்லாம் மூட நம்பிக்கை கொண்டவர்கள் என்று கிண்டல் செய்வான்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவன் பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டான். நான் பி.காம் படித்துப் பிறகு சி.ஏ படித்து சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகத் தொழில் செய்து வந்தேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக இளங்கோவைக் கோவிலில் சந்தித்ததும் ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?
கோவிலிலேயே நாங்கள் சந்தித்துச் சுருக்கமாகப் பேசிக் கொண்டோம். கோவிலிலிருந்து வெளியே வந்ததும் அவனிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். "நாத்திகனாக இருந்த உனக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி வந்தது?"
"பொறியியல் படித்த பிறகுதான்" என்று விளக்கினான் இளங்கோ.
"பொறியியல் வல்லுநர்கள் மின்சாரம் முதலிய சக்திகளைப் பயன்படுத்திப் பல அற்புதமான இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றைப் பற்றியெல்லாம் படித்தபோது இந்த உலகில் இயற்கையாக அமைந்திருக்கும் பல பொறியியல் அற்புதங்களைப் பற்றி நினைத்து வியந்தேன். மனித உடலையே எடுத்துக் கொள்ளேன். எந்த ஒரு விசையின் உதவியும் இன்றி நம் இதயத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பம்ப், உடலின் பல நுண்ணிய உறுப்புகளை இணைக்கும் ரத்தக் குழாய்கள், நாளங்கள், கோடிக்கணக்கான நரம்புகளால் உருவாக்கபட்டுள்ள பிரமிக்க வைக்கும் தகவல் தொடர்பு அமைப்பு, மூளை என்னும் அற்புத ரோபோட் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் உருவாக்கப் பட்டதன் பின்னணியில் ஒரு மிக உயர்ந்த அறிவு இருக்க வேண்டும் அல்லவா? அந்த அறிவை இறைவன் என்று பாவித்து அதை வியந்து வணங்காவிடில் நான் படித்த படிப்புக்கே அர்த்தம் இல்லை என்று தோன்றியது."
தான் கற்ற கல்வி அளித்த அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துக் கடவுளை உணர்ந்த இளங்கோ உண்மையிலேயே ஒரு பகுத்தறிவுவாதிதான்!
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள்:
நிறைவான, தூய அறிவு படைத்த இறைவனின் திருவடிகளை வணங்குவதே கல்வி கற்பதன் பயன் ஆகும்.