அந்த ஓட்டு வீட்டுக்குள் ஆங்காங்கே ஒழுகிக் கொண்டிருந்த மழை நீரைப் பாத்திரங்களை வைத்துத் தரையில் வழியாமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் பார்வதி. அவள் முயற்சி படுதோல்வி அடைந்து விட்டதைக் கண்டு தரையில் ஓடிக் கொண்டிருந்த நீர் எள்ளி நகையாடியது.
தன் பக்கத்தில் மழை நீர் ஓடுவதைப் பொருட்படுத்தாமல் மண் தரையில் மல்லாந்து படுத்தபடியே உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தான் சிவக்கொழுந்து.
"ஏன்யா, நான் ஒத்தி இங்க மழைத்தண்ணி ஒழுகுதேன்னு தவிச்சுக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு மல்லாக்கப் படுத்துக்கிட்டு உல்லாசமாப் பாடிக்கிட்டிருக்கே?" என்றாள் பார்வதி எரிச்சலுடன்.
"ஒழுகினா ஒழுகிட்டுப் போவட்டும் புள்ள. இப்ப அதுக்கு என்ன பண்ண முடியும்? மழை நிக்கட்டும். நானே ஓடு மாத்தி ஒழுகலை நிறுத்திடறேன்" என்றான் சிவக்கொழுந்து சிறிதும் அசையாமல்.
"ரெண்டு வருசமா மழை இல்லையே, அப்ப ஓடு மாத்தி இருக்கலாம் இல்லே?"
"ரெண்டு வருஷமா ஒழுகலியே? அப்புறம் எதுக்கு ஓடு மாத்தணும்?"
பார்வதி தன்னால் வீட்டுக்குள் மழை நீர் ஒடுவதைத் தடுக்க முடியாது என்று உணர்ந்து, கணவனின் தலைமாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலைப் பையைப் பிரித்தாள்.
"சும்மா பாக்கு திங்காதே! சோகை புடிக்கும்" என்றான் சிவக்கொழுந்து.
"சோகை புடிச்சவங்களுக்குத்தான் அடிக்கடி பாக்கு போடத் தோணுமாம்."
"யார் சொன்னது உனக்கு?"
"டி.வியிலே சொன்னாங்க."
"டிவியிலே இதைத்தான் பாப்பியா?"
"வேறு எதைப் பாக்கணும்? ஒனக்கு வேணும்னா 'வயலும் வாழ்வும்' பாரு. அந்த நேரத்தில நான் டிவி பாக்காம இருக்கேன்!"
"ரெண்டு வருஷமா மழை இல்ல. ஆத்துல தண்ணி இல்ல. பம்ப் செட் போட்டுப் பயிர் செய்யறத்துக்கும் நமக்கு வசதி இல்ல. வெவசாயமே இல்லேங்கறப்ப 'வயலும் வாழ்வும்' பாத்து என்ன பிரயோசனம்?"
"அப்ப நான் மட்டும் வீட்டுல ஒக்காந்து என்ன செய்யறது? ஒடம்பைப் பத்தியும் வியாதிகளைப் பத்தியும் வர நிகழ்ச்சியைக்கூடப் பாக்கக் கூடாதா?"
"சரி சரி கோவிச்சுக்காதே. நான் மழை பெய்யுதேங்கற சந்தோஷத்தில இருக்கேன். வீடு ஒழுகுதேன்னு இப்ப கவலைப்பட வேண்டாம். ரெண்டு நாள்ள மழை நின்னதும் அதெல்லாம் சரி பண்ணிடலாம். ரெண்டு வருஷமா மழை பெய்யாம எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு நெனச்சுப் பாரு."
"எனக்குத் தெரியாதா, மழை பெய்யாதப்ப எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு? நம்ம நெலத்துலேயும் பயிர் பண்ண முடியல. ஊர்ல நாலஞ்சு பேருதான் பம்ப்பு செட்டை ஓட்டி வெவசாயம் பண்ணினதால மீதி எல்லோரும் கூலி வேலைக்கு வந்துட்டதால கூலி வேலையும் சில நாள்தான் கெடைக்கும்னு ஆயிப் போச்சு. எப்பவுமே வராத அளவுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் வந்து, புள்ளைங்களும் நம்மளோடு சேந்து பட்டினி கெடக்க வேண்டாமேன்னுட்டு அதுங்களை எங்க ஆத்தா வீட்டுக்கு அனுப்பி.. புள்ளைங்க மொகத்தைப் பாத்தே மாசக்கணக்குல ஆச்சு.
அதுங்களும் பாவம் நம்மளைப் பாக்காம ஏங்கிக் கிட்டு இருக்குங்க."
பார்வதியின் கண்களில் தண்ணீர் வந்து விட்டது.
"அழாதே பார்வதி. நம்ம கஷ்டம் எல்லாம்தான் தீரப் போகுதே. இன்னும் ரெண்டு நாள்ள மழை நின்னுடும்னு சொல்றாங்க. உடனேயே பெருந்தனக்காரங்கள்ளாம் அவங்க நெலத்தில உழவு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க. ஒரு பத்து நாளைக்குக் கூலி வேல கெடச்சாப் போதும். அப்புறம் நாமளும் நம்ம நெலத்துல வேலையை ஆரம்பிச்சுடலாம்."
"அது இருக்கட்டும். மொதல்ல ஊருக்குப் போயிப் புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு வந்துடு. வேலைக்குப் போவ ஆரம்பிச்சுட்டேன்னா அப்புறம் போவ முடியாது."
"சரி. நாளைக்கே போயி அழைச்சுட்டு வந்துடறேன்."
"மழை நிக்கறத்துக்குள்ளேயா?"
"மழை நிக்காட்டி என்ன? மழை நமக்கு நல்லதுதானே பண்ணிக்கிட்டிருக்கு! மழையில நனைஞ்சா எனக்கு ஒண்னும் ஆயிடாது. புள்ளைங்களை அழைச்சுக்கிட்டுக் கெளம்பறபோது மழை நின்னிருக்கும்."
"என்ன மழையோ! ரெண்டு வருஷமா பெய்யாம நம்மளை வாட்டி எடுத்துச்சு. இப்ப நல்லாப் பேஞ்சு நம்ம வயத்தில பாலை வாத்திருக்கு!" என்று கையெடுத்துக் கும்பிட்டு மழையை வணங்கினாள் பார்வதி.
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பொருள்:
பெய்யாமல் உலக மக்களின் வாழ்க்கையைக் கெடுப்பதும் மழைதான். மழை பொய்த்ததால் வளம் குன்றித் தவிக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பெய்வதும் மழைதான்!