இல்லற, துறவறம் என்பதன் பொருள் பற்றி முதலில் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
இல்லறம் கொண்டு பொருளீட்டி, காத்து, தானும் துய்த்து, பிறருக்கும் கொடுப்பது இல்லறம்.
இல்லறம் என்றால் பொருளை அடிப்படையாகக் கொண்டது.
பொருளீட்டிக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு ஒரு இடம் வேண்டும். “திருமணம் செய்து கொண்டு இருவரும் வாழ்ந்தால்தான் இல்லறம்” என்பார்கள். அது தவறான கருத்து.
பொருளீட்டிக் காத்து அளவுமுறையோடு துய்த்து, அறம் செய்தல் இல்லறமாகும்.
பொருளீட்டும் தொழிலை விட்டு அகத்தவத்தின் சாதனையால் பிரபஞ்ச ரகசியம் அறிந்து, உடல், உயிர், மனம், அறிவு, சீவகாந்தம் உணர்ந்து, அறநிலை தெளிந்து, அறிவுத்துறையில் முழுமை பெற்று, நேர்மை தவறாது ஒழுக்கவழி வாழும் அறிவை மக்களுக்குப் புகட்டி, அதன்மூலமாகத் தொண்டு செய்து வாழக்கூடியவர்கள் “துறவறம்” என்ற நிலையை உடையவர்கள்.
துறவறத்தான் என்றால் பொருளீட்டிக் காப்பது தவிர்த்து, அறிவுத்துறையிலும் உயர்ந்து தொண்டாற்றிக் கொண்டு இருப்பவன்.
ஆனால் சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டிலுமே இருந்தார்கள். தங்களுக்கு வேண்டிய பொருட்களை அவர்களே ஈட்டி,
பிறருக்கும் உதவினார்கள்.
அதே போன்று அறிவுத்துறையிலும் மேன்மையடைந்து எல்லோருக்கும் அறிவுத்தொண்டாற்றினார்கள்.
அன்றும், இன்றும், என்றும் அவர்கள் தொண்டு எங்கும் ஏற்புடையதாக இருக்கின்றது.
சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டும் இணைந்த நல்லற ஞானிகள் ஆவர்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
- அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி