பூர்வாசிரமத் தமையனாராகிய கணபதி சாஸ்திரிகள் - உடன் நடந்த ஒரு அரிய சம்பவம். (மாலை சந்த்யாவந்தனம் பற்றி)
ரா.கணபதி எழுதியது. (வலையில் காபி செய்யப்பட்டது சுருக்கமான ஒரு பகுதி)
“அண்ணா வந்திருக்கச்சேயும் நான் வெளிலேயே ஸந்தி முடிச்சுட்டு நன்னா இருட்டினவிட்டு ஆத்துக்கு வந்து சேர்ந்தேன்.
“அவருக்கு மஹா கோவம் வந்துடுத்து. ‘பெரிய தொரெ! ஆடிப் பாடிண்டு இருட்டி ஏழு ஜாமத்துக்கு வரே! தண்டத்துக்கா ஒனக்கு உபநயனம் பண்ணினது? ஸந்தியை விட்டுட்டு அப்படி என்ன வெளயாட்டு? ஹா,ஹூ!”ன்னு அதம்பிண்டு ஏகமாப் பேசிப்பிட்டார்.
“பண்ணாத தப்பைச் சொல்றானேன்னு எனக்கு ரோஸம் தாங்கல. ஆத்துல ரொம்ப செல்லம். அப்பா—அம்மா அதுந்து ஒரு வார்த்தை சொன்னதில்லே. அதனால, பொத்துண்டு வந்துடுத்து. கண்ணைப் பொத்துண்டு ஜலம் கொட்ட ஆரம்பிச்சுடுத்து. ஆனா, என்னவோ, வாய்லேந்து வார்த்தையைக் கொட்டிடலே. [அந்த சிறு வயதில் சீறியிருக்க நியாமிருந்த சமயத்திலும் தாம் காட்டிய அடக்கப் பண்பையும் அடக்கிப் பேசிகிறார்!] ‘காலத்துல ஸந்தி பண்ணாம விடலாமா-ங்கிற நல்ல எண்ணத்திலதானே கோச்சுக்கறான்?”னு, பதிலுக்குக் கோச்சுக்காம இருந்தேன். ஆனாலும் ‘நம்ம மேல இல்லாத குத்தம் எடுக்கறானே’ன்னும் இருக்கத்தான் இருந்தது.
அதையும் கொஞ்சம் அடக்கிண்டு நாலு வார்த்தைதான் கேட்டேன். ‘டயத்துக்கு ஸந்தி பண்ணனுன்னு எனக்கும் தெரியும். காவாயில பண்ணிட்டுதான் வரேன். நான் வரதுக்கு முந்தி, ’காலம் தப்பிப் போச்சே’ன்னு ஒனக்குக் கோவம் வந்தது ந்யாயந்தான். ஆனா வந்தவிட்டு ஆளைக் கூட ஸரியாப் பாக்காம நிதானம் தப்பிப் பேசினா எப்படி? நெத்தியை பாத்தாத் தெரியலே? ன்னேன்…
…”
ஆஹா! பால் வடியும் அந்தக் குமாரஸ்வாமியின் முகம் ரோஷத்தில் சிவப்பேற, அதன் பரந்த நெற்றியில் பளிச்சிட்ட திருநீற்றுக் கீற்றுகள் தமையனாருக்கு என்ன பெருமையை உணர்த்தினவோ? ஆனாலும், தாம் அப்படி ஏதும் உணர்த்துவித்ததாக நம்முடைய விநயவடிவர் ஜாடைமாடையாகக்கூடத் தெரிவிக்காமலே பேசிப் போனார்.
“இவ்வளவுதான் நான் சொன்னது, அண்ணா –- வயஸுல நன்னாவே மூத்தவர்; திட்ட, அடிக்க, எதுவும் பண்ண ரைட் இருக்கிறவர் –- என்னவோ பண்ணப்படாத மஹா தப்புப் பண்ணிட்ட மாதிரி சட்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டார்……..”
இதுவரை இன்முகத்துடன் உற்சாகமாகக் கதை கூறிவந்த மஹா பெரியவாளின் குரல் ‘சட்னு’ இங்கே தழதழத்துவிட்டது. தழதழப்பு உள்ளுறையத் தொடர்ந்தார்.
“இந்த நாளாட்டம் பெரியவா சின்னவா வித்யாஸமில்லாம எடுத்ததுக்கெல்லாம் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ சொல்ற வழக்கம் அப்ப கெடயாது. ஃபீலிங் இருக்கணும்னே இல்லாம, ஒரு கர்ட்டிஸிக்காக இப்படிச் சொல்றதா இப்ப ஏற்பட்டிருக்கு. அண்ணாவுக்கு அத்தனை ஃபீலிங் இருந்தும் -– எத்தனைன்னு நேர்ல பாத்த எனக்குத்தான் தெரியும். இத்தனை வருஷங் கழிச்சு இப்பவும் மனஸுலே நிக்கற அளவுக்கு ஃபீலிங் இருந்தும் -– அந்த மாதிரி [‘மன்னிப்பு வாசகம்’ என்ற சொற்றொடரை நம் பண்புச் செல்வர் சொல்லவில்லை] எதுவும் சொல்லலே. சொல்லியிருந்தா அது அழகும் இல்லே. ஆனா அதுக்கு எத்தனையோ மேலே, என்ன சொன்னார்னா, ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிடறேம்பா’ ன்னு மனஸு கொழஞ்சு சொன்னார். சொல்லிட்டு அப்படியே பண்ணினார்…..”
இப்படி முடிக்கும்போது ஸ்ரீ மஹா பெரியவாளும் குழைந்தே விட்டார். அப்போதுதான் அவரது நாத் தழுதழுப்பு கண்ணில் பளபளக்கும் நீராகப் பரிணமித்தது.