Breaking News :

Wednesday, April 24
.

ஓணம் பண்டிகை ஏன்? எப்படி?


உலகையே உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே! உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. மகாபலியின் தியாகம் அந்த பரந்தாமனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் ஒருநாள் மக்களை காண மகாபலிக்கு அனுமதி அளித்தார். ஓணம் பண்டிகை நாளில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு தங்களை காண வரும் சக்கரவர்த்தி மகாபலியை வரவேற்கின்றனர்!

ஓணம் திருவிழா அறுவடைத் திருவிழாவாகவும் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் திருவிழா ஓணம் பண்டிகை.

எலி செய்த காரியம்:

சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணியத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரித்தது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.

வாரி வழங்கும் வள்ளல் மகாபலி:

மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மகாபலியின் புகழ் பலதிசை எங்கும் பரவியது. தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் கேட்டதை வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் மகா விஷ்ணுவிடம் கூறினார்.

வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு:

மகாபலியின் புகழுடன் பல யுகங்களுக்கும் நிலைத்திருக்குமாறு செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். மகாவிஷ்ணு. மகாபலியிடம் சென்று தானம் கேட்டார் வாமனன். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார். வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும் என்று மகாபலியை எச்சரித்தார்! 

பகவானுக்கு தானம்:

மகாபலி மகிழ்ச்சியடைந்தார். என்னுடைய நல்லாட்சியை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது என்று மகிழ்ச்சியுடன் தயாரானார் மகாபலி. மகாபலியிடம் வந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார்.

சுக்கிரன் செய்த செயல்:

குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு என்றார் வாமனன். இடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார் தடுத்தார். மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார் சுக்கிரன்.

மகாபலி கமண்டலத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. உடனே வாமனன் தனது கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார் மகாபலி.

தலையை கொடுத்த வாமனன்:

குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று வாமனன் கேட்க, இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று தலைகுனிந்தார் மகாபலி. உடனே அவரது தலையில் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்திற்கு அனுப்பினார் வாமனன். கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார்.

மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகை:

மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. என் நாட்டு மக்களை நான் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது. ஆண்டு தோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும் என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி இந்த பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க நாம் தயாராவது போல மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.

விருந்துகளை தயார் செய்து உறவினர்களுடன் சாப்பிட்டு மகிழ்கின்றனர். 

திருவோணம்:

அஸ்வினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் இரு நட்சத்திரங்களுக்குத்தான் 'திரு' என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரம். மார்கழியில் இந்த நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இன்னொன்று பெருமாளுக்குரிய திருவோணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

பெருமாள் தரிசனம்:

ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவோணம் திருநாள் வாமன அவதார தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் வாமன அவதாரம் ஐந்தாவது அவதாரமாகும். பெருமாளின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் திருவோணம் நட்சத்திர நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கலாம்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.