Breaking News :

Sunday, April 28
.

நீ பெரியவனா? நான் பெரியவனா? மகா விஷ்ணு பக்தர் கதை


மகாவிஷ்ணுவின் தீவிர பக்தர் ஒருவர் தனது பூலோக வாழ்வை முடித்துக்கொண்டு வைகுண்டம் சென்றார். அங்கு தான் வழிபட்ட மகாவிஷ்ணுவைக் கண்டார்.

பகவான் அவரது பூலோக வாழ்க்கையில் செய்த நன்மைகளைப் பாராட்டி, "நீ செய்த நன்மைகளால் உனக்கு வைகுண்ட வாழ்வு கிடைத்திருக்கிறது. இங்கு நீ மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்று அருளினார்.

 

அந்த பக்தர் சிந்தித்தார். "என்ன பக்தா ஏதேனும் சந்தேகமா?" என மகாவிஷ்ணு வினவினார். அவர் பகவானிடம், "இறைவனே! எனக்கு பூலோகத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் என் மனம் குறைபாட்டுடன் இருக்கிறது. அந்த குறையை நீங்கள்தான் போக்கி அருள வேண்டும்" என்றார்.

 

அனைத்தும் அறிந்த பெருமாளுக்கு அவருடைய மனக்குறை தெரியாதா என்ன? இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அப்படியா? வைகுண்ட வாழ்வைப் பெற்ற உனக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது. உனது மனக்குறையைச் சொல். அதை உடனே தீர்த்து வைக்கிறேன்" என்றார்.

 

"பகவானே! நான் பூலோகத்தில் இருந்தபொழுது மக்களிடம் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்கிற நிலையே அதிகமாக இருந்தது. இந்தக் கேள்வியால் அவர்களுக்கிடையே மோதல்கள் கூட தொடர்ந்து இருந்து கொண்டிருந்தன. இன்னும் அப்படித்தான் இருக்கிறது. பூலோகத்தில் கடல், மலை என்று பெரிது பெரிதாக எத்தனையோ இருந்தபோதிலும், மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று போற்றிக் கொள்கிறார்களே. தாங்கள்தான் உண்மையைச் சொல்ல வேண்டும். பூலோகத்தில் உயர்ந்தவர் யார்?" என்று கேட்டார்.

 

மகாவிஷ்ணுவோ சிரித்தபடி, "நீ சொல்வது உண்மைதான். கடலும், மலையும்தான் பெரியவை" என்றார்.

 

அதைக் கேட்ட அந்த பக்தர், "நீங்கள் சொல்வது சரியென்றாலும் குறுமுனிவரான அகத்தியர் கடலையே வாரிக் குடித்து விட்டார். கிரௌஞ்ச மலையையே முருகன் தகர்த்து எறிந்து விட்டார். பூலோகத்தில் நடந்த இந்தச் செயல்களை பார்க்கும்போது, அவை பெரியவை என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றார்.

 

மகாவிஷ்ணுவின் திருவிளையாடல் தொடர்ந்தது. "சரி அப்படியானால் நீ யார் பெரியவர் என்று நினைக்கிறாய்?" என்றார்.

 

"பூலோகத்தைப் பொறுத்தவரை இறைவனாகிய தாங்களே பெரியவர்" எனக் கூறி வணங்கி நின்றார் பக்தர்.

 

உடனே மகாவிஷ்ணு அவசர அவசரமாக அதை மறுத்தார். "இல்லையில்லை… உன்னுடைய கருத்தில் உண்மையில்லை" என்றார்.

 

"ஏன் இல்லை? தாங்கள் வாமன அவதாரம் எடுத்தபோது, விண்ணையும், மண்ணையும் தங்களுடைய சிறு பாதத்தால் ஒரே அடியில் அளந்து விட்டீர்கள். எனவே நீங்கள்தான் பெரியவர்" என்றார் பக்தர்.

 

மகாவிஷ்ணு புன்முறுவல் புரிந்தார், "பொறு பக்தா, உனது கேள்விக்கான பதில் இதுதான். உலகில் பெரியவர்கள் என்று போற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் யாரென்றால், உன்னைப் போன்ற பக்தர்கள்தான். உலகில் யார் மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதி என்று இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் ஏற்பட்டாலும் அது என்னால்தான் வந்தது என்று நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர்" என்றார்.

 

அதை அந்த பக்தரால் நம்ப முடியவில்லை. "சரி பகவானே, உங்களையே நம்பினாலும் உங்களை விட தங்களை வணங்கக்கூடிய பக்தர்கள்தான் பெரியவர்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?"என்று கேட்டார்.

 

அன்றாட பிரச்னைகள் 4; தீர்வு 1: என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

 

உடனே மகாவிஷ்ணு அங்கிருந்த தேவலோகக் கண்ணாடியை எடுத்து வரச் சொல்லி, "பக்தா, அந்தக் கண்ணாடியில் உனது மார்புப் பகுதியை பார்" என்றார் பகவான்.

 

அந்தக் கண்ணாடிக்குள் தெரிந்த அவரது மார்புக்குள் மகாவிஷ்ணுவின் உருவம் சிறிய அளவில் தெரிந்தது. அதை ஆச்சரியமாகப் பார்த்த பக்தரிடம், பகவான் "கண்ணாடியில் பார்த்தாயா? உலகையே ஒரு அடியில் அளந்த என்னை உன் இதயத்திற்குள் சிறியதாக அடைத்துக் கொண்டு விட்டாய். அப்புறம் எப்படி நான் பெரியவனாக இருக்க முடியும்? எனவே, நீதான் உலகின் மிகப்பெரியவன். உன்னைப் போன்ற பக்தர்கள்தான் மிகப்பெரியவர்கள்" என்றார்.

 

அதைக் கேட்ட அந்த பக்தர் அகமகிழ்ந்து பகவானை வணங்கி நின்றார்.

 

ஓம் நமோ நாராயணா. ...


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.