ஆண்டாண்டு காலமாக காதல் திருமணம் என்பது நடைமுறையில் உள்ளது தான் . 90கள் வரை இவை பெருமளவு வெற்றிகரமான திருமண வாழ்க்கையை கொண்டவைகளாகவே இருந்தன . இதற்கு மிக முக்கிய காரணம் , இவர்கள், சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டிவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருந்தார்கள் .
தங்களின் அன்பினாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும், வாழ்ந்து காட்டும் மனத்திண்மையாலும் , தங்களை எதிர்த்த அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தி வாயை பிளக்க வைத்தார்கள் என்றால் மிகையில்லை . இதனால் காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிவது என்பது அரிதாகவே இருந்தது .
ஆனால் 90களுக்கு பிறகிலிருந்து இன்றுவரை இவ்வகை திருமணங்கள் ஒன்றிரண்டை தவிர அனைத்துமே விவாகரத்தில் மட்டுமே முடிகின்றன . மறுதிருமணம் (அவை 2 க்கு மேல் கூட சிலருக்கு தொடர்கின்றன ) என்பது மிக மிக சகஜமான ஒன்றாக மாறிவிட்டது இப்போது . இவைகளுக்கெல்லாம் முக்கியமான காரணங்கள், எதையும் யோசித்து முடிவெடுக்காமை , எடுத்தேன் , கவிழ்த்தேன் என்று செயல்படுதல், மிக முக்கியமாக சகிப்புத்தன்மை இல்லாமை , விட்டுக்கொடுக்காமை, அனுசரித்து செல்லாமை இவைகளே !
ஒரு சில இடங்களில், தம்பதிகளில் யாரேனும் ஒருவர் ஏமாற்று பேர்வழியாக இருப்பது , வன்கொடுமை , இவை இருப்பதை மறுக்க முடியாது . இந்த சந்தர்ப்பங்களில் அந்த திருமண பந்தத்திலிருந்து விடுபடுவதே உத்தமம் .
ஒரு ஆணும் பெண்ணும் கண்டவுடன் காதல் கொள்வது என்பதும், அதற்கு பின்னர் எக்காரணத்தை கொண்டும் அவர்களால் பிரியவே முடியாது என்பதும் , கதைகளிலும் , கற்பனைகளிலும் மட்டுமே காணக்கூடியவை . இதே போலத்தான் நிஜ வாழ்விலும் நடக்கும் என நீங்களே கற்பனை செய்து கொள்ளக் கூடாது .
ஆணும் பெண்ணும், அவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பதாலோ அல்லது கூட படிப்பதாலோ அல்லது கூட வேலை செய்வதாலோ ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர்; #கவனிக்கவும்... முதலில் ஈர்ப்பு மட்டுமே உண்டாகின்றது; அதாவது அவர்களின் அழகாலோ குணத்தாலோ ஈர்க்கப்படுகின்றனர் . உடனேயே ‘இவர் இல்லாவிட்டால் எனக்கு வாழ்க்கையே இல்லை’ என்ற நிலைமை இங்கே உண்டாவதில்லை. இதெல்லாம் கதைகளில் மட்டுமே வரும் கற்பனைகள் .
போகப்போக நாளடைவில் பழகப்பழக உண்டாவது தான் காதல். இந்த இடைவெளியை நீங்கள் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் .
எப்படியென்பதை காண்போம் :
1. முதலில், 20 வயதுக்கு முன்னர் தோன்றும் ஈர்ப்பை மேலும் தொடரவிடாமல், அப்போதைக்கு தள்ளிப்போட்டு, மேலும் ஒன்றிரண்டு வருடங்களில் சிறிதளவாவது சொந்தக்காலில் நிற்கும் திறன் வந்த பிறகும், சிறிதளவாவது மனமுதிர்ச்சி வந்த பிறகும் அதே ஈர்ப்பு தொடருகிறதா என்று பார்த்த பிறகு முடிவு செய்யவும் . சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படும் நட்பை நம்பி, கண்ணில் காணாதவரை நம்பி கண்டிப்பாக காதலில் இறங்கி அவதிப்பட வேண்டாம் .
2. அடுத்ததாக, காதலிக்க ஆரம்பிக்கும் முன் இருவருமே மற்றவரிடம், முதலில் சில காலம் நண்பர்களாக பழகிப்பார்த்து அனைத்து விஷயங்களும் இருவருக்கிடையில் ஒத்துப்போகும் பட்சத்தில் மட்டுமே இதை தொடரலாம் என்றும், ஒருவரின் குணங்கள் மற்றவருக்கு பிடிக்காவிடில் பிரிந்து விடலாம் என்றும், நிர்ப்பந்தத்தால் இணையும் வாழ்வு நிலைக்காது, இனிக்காது என்றும் பேசிக்கொள்ளுதல் மிக மிக அவசியம் . இந்தக் காலத்தில் இவ்விஷயங்களால் பல பெண்கள் தங்கள் உயிரை இழக்கும் நிலைக்கு கூட தள்ளப்படுகின்றனர் .
3. நீங்கள் விரும்பும் நபர் மாற்று மதத்தை சேர்ந்தவரா? உங்களுக்கு இதில் ஏதும் ஆட்சேபணை அல்லது தயக்கம் உண்டா என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் . உங்களால் மற்றொரு மதத்தை ஏற்க முடியுமா அல்லது ஒரே வீட்டில் மற்றொரு மத நடவடிக்கைகளை அனுசரித்து போக முடியுமா, இருவரும் அவரவர் மத நம்பிக்கைகளை ஒரே வீட்டில் கடைபிடிக்க மனம் ஒத்துக்கொள்ளுமா என்பதையெல்லாம் பலமுறை யோசித்துக்கொள்ள வேண்டும் . ஒருவேளை மதம் மாற வேண்டியிருந்தால் , சிறுவயதிலிருந்து கடைபிடித்த கடவுள் மற்றும் மத நம்பிக்கைகளை திடீரென்று உங்களால் மாற்றிக்கொள்ள முடியுமா என்பதை பலமுறை எண்ணிப் பார்க்க வேண்டும் .
4. நீங்கள் விரும்பும் நபர் உங்கள் மதத்தை சார்ந்தாலும் வேறு ஜாதியை சார்ந்தவராக இருந்தால், அந்தப் பெண் வேறு ஜாதியை சேர்ந்த கணவரின் வீட்டில் , அவரது வீட்டினரின் சமய சாஸ்திரங்களை , பழக்கங்களை ஏற்று நடக்க மனதளவில் முதலில் தயாராக வேண்டும் . இங்கே கடவுள் வழிபாடு பெரியளவில் வித்தியாசப் படப்போவதில்லை. நமது இந்திய கலாச்சாரத்தில் பொதுவாக ஒரு பெண்தான் கணவன் வீட்டில் சென்று இருக்கப்போகிறாள்.
அதனால் அவள்தான் தன் புகுந்த வீட்டினரின் மனம் கோணாவண்ணம் நடந்து கொள்ள தன்னை தயார் படுத்திக் கொள்ளவேண்டும் . அதே சமயம் அந்த ஆணும் பெண்ணின் சமய பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டும் . ஒருவர் மற்றொருவரின் ஜாதியை மட்டம் என்றோ உயர்ந்தது என்றோ இழிவு படுத்துதல் கூடவே கூடாது. இது பரஸ்பரம் இருக்க வேண்டும் . இதை குடும்பத்தினர் சொல்லிக்காட்டினாலும் அவர்களை தள்ளி வைப்பதோ அல்லது அவர்களிடமிருந்து தள்ளி இருப்பதோ தான் நலம் பயக்கும் . இதை நீங்கள் முதலிலேயே மனதில் ஏற்றிக் கொண்டு விட்டால் , பின்னர் யார் உங்கள் மனதை மாற்ற முயன்றாலும், திடமாக இருக்கலாம் .
5. உங்கள் இருவருக்கிடையில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருந்தால், சில நாள் பழக்கத்திலேயே உங்கள் இருவருக்கும் ஒத்துப் போக முடியுமா என்பது புரிந்து விடும் .ஆண் வசதிப்படைத்தவராக இருந்துவிட்டால் பெரிய பிரச்சனையில்லை . அந்தப் பெண் அந்த வசதிக்கேற்ப தன் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளலாம் . ஆனால் எக்காரணம் கொண்டும் மேல் சமூகத்தினரின் வேண்டாத கெட்ட பழக்கங்களை பழக்கிக் கொள்ள வேண்டாம் .
அதே அந்தப் பெண் வசதியுள்ளவளாக இருந்தால் கொஞ்சம் கஷ்டம்தான் . வாழ்க்கை துணையின் வசதியின்மைக்கு ஏற்ப தன்னால் மாற முடியுமா, வரவிற்குள் செலவு செய்ய முடியுமா, கடன் சுமையை ஏற்றிக்கொள்ளாமல் வாழ்க்கை நடத்த முடியுமா, பிள்ளைகள் பிறந்தால் பொருளாதாரத்தை சமாளிப்பது எப்படி, அந்த ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்குமா என பலவற்றையும் ஆராய்ந்த பிறகே திருமண பந்தத்தில் நுழையலாம் .
6. இதே போலத்தான் படிப்பிலும் உத்தியோகத்திலும் உள்ள வித்தியாசமும் . பெண் அதிகம் படித்திருந்தாலோ, ஆணை விட உயர் பதவியில் இருந்தாலோ, பொதுவாக பெரும்பாலான இந்திய ஆண்களுக்கு பொறாமையும் தாழ்வு மனப்பான்மையும் உண்டாக வாய்ப்புகள் அதிகம் . இதையும் முதலிலேயே பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும் .
7. அடுத்த பிரச்சனை – சைவம் , அசைவம் என்கிற சாப்பாட்டு பிரச்சனை . இருவரும் ஒரே சாப்பாட்டு முறையை கடைபிடிப்பவர்களாக இருந்துவிட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை . ஆனால் ஒருவர் சைவமாகவும் , மற்றவர் அசைவமாகவும் இருந்துவிட்டால், யார் எப்படி விட்டுக்கொடுக்க போகிறீர்கள், எப்படி அனுசரித்து போகப்போகிறீர்கள் என்பதை முதலிலேயே தீர்மானமாக பேசிக்கொள்வது நலம் . இதுவும் பின்னர் பெரிய பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம் .
8. பழகப் பழக ஒருவரது பழக்க வழக்கங்கள் (முக்கியமாக ஏதேனும் கெட்ட பழக்கங்கள் – ஏமாற்றுவது , குடிப்பது , புகைப்பது , பெண் சகவாசம், திருடுவது , ரவுடியிசம் ) இவை போன்று ஏதேனும் இருப்பின் சில நாள் பழக்கத்திலேயே பிரிந்து விடுவது நலம் . பிறகு இப்பிரச்சனைகளால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படாமல் இருப்பது அவசியம் . திருத்தி நல்வழிக்கு கொண்டு வருகிறேன் என்று அந்தப் பெண் அசட்டுத் துணிச்சலில் இறங்குவது வியர்த்தமே.
9. முடிந்தவரை பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்வதே நலம் . நாளை நல்லது கெட்டதுக்கு அவர்கள் தயவு உங்கள் இருவருக்கும் மிகவும் அவசியம் .
10. இருவருமே சிறந்த குணமுள்ளவர்களாக இருந்தும் , அனைத்து வகையிலும் மனப்பொருத்தம் இருப்பவர்களாக இருந்தும் பல விதத்திலும் எதிர்ப்புகள் இருந்தால் , அதை தைரியமாக எதிர் கொள்ள முடியும் என்று இருவருக்குமே துணிவு இருந்தால் , யார் தயவும் இல்லாமல் உங்கள் சொந்தக்காலில் நின்று குடும்பம் நடத்த முடியும் என்கிற அளவுக்கு பொருளாதார பின்னணி இருந்தால் (இது மிகவும் முக்கியம் . ஒரு நல்ல வேலை இல்லாமல் திருமணம் செய்து கொள்ளவே கூடாது ) நீங்கள் தாராளமாக திருமண பந்தத்தில் நுழையலாம் .
11. இருவரும் ஒரு விஷயத்தில் மிகத் தீவிரமாக இருக்க வேண்டும் . இரண்டு பேருடைய பக்கத்தில் இருந்தும் சில புல்லுருவிகள் இருந்து உங்கள் மனத்தை கலைக்க முற்படலாம் . இது திருமணத்திற்கு பிறகும் தொடரலாம். இதனால் எல்லாம் மன சஞ்சலம் அடையாமல் , உங்கள் துணையை பற்றி நன்கு அறிந்த நீங்கள் எக்காலத்திலும் , எக்காரணம் கொண்டும் அவரை விட்டுக்கொடுக்காமல் , பிரியாமல் தொடர்ந்து மணவாழ்க்கையை தொடர வேண்டும் என்று உறுதியாக இருத்தல் வேண்டும் .
12. காதலிக்கும் போது ஒருவருக்காக ஒருவர் மணிக்கணக்கில் காத்திருப்பதும் , அப்படியே உருகி வழிவதும் சகஜம் தான் . ஆனால் இதுவே கல்யாணத்திற்கு பின்னரும் தொடரும் என்று (மிக முக்கியமாக பெண்கள் ) எதிர்ப்பார்க்கவே கூடாது . பொறுப்புகள் அதிகம் ஆகிவிட்ட திருமண வாழ்வில் பழைய காதல் பட்டாம்பூச்சிகளாகவே பறந்து கொண்டிருக்க முடியாது . எல்லாவற்றையும் அதன் போக்கில் சகஜமாக எடுத்துக்கொள்ள பழகி விட்டால் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையும் இனிக்கும் .
13. திருமண வாழ்வில் மனமுதிர்ச்சியுடன் எதையும் எதிர்கொள்ளுதல் மிக முக்கியமான அம்சமாகும் .
14. திருமணத்திற்கு முன்னர் மிக மிக முக்கியமானது உடலளவில் நெருங்கிப் பழகுதலோ , தாம்பத்திய உறவில் ஈடுபடுவதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் . இதனால் மிக அதிகமாக பாதிக்கப்படப்போவது அந்தப்பெண் தான் . அதீத டெக்னாலஜி வளர்ச்சியை மனதில் கொண்டே பழகுங்கள் .
15. இவையெல்லாவற்றையும் நீங்கள் இருவரும் தனித்தனியாக சில நாட்களாவது யோசித்து பார்த்து, எல்லாவற்றையும் சமாளிக்கலாம் , ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழலாம் , எதிர்கொள்ள நேரும் எவ்வித விஷயத்தையும் அனுசரித்து போவதன் மூலம் சமாளித்து விடலாம் என்று உறுதியாக தீர்மானித்த பின்னரே உங்கள் காதலை நல்ல விதத்தில் தொடர்ந்து திருமண பந்தத்தில் நுழைந்து நீடூழி வாழலாம் .