Breaking News :

Monday, September 16
.

கழுத்தில் போட்ட எலுமிச்சம்பழ மாலையை கொடுத்த பெரியவா


"இதை எடுத்துண்டு போய், ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்குக் கொண்டு போய் கொடுத்துடறியா" - பெரியவா.

தன் கழுத்தில் போட்டு இருந்த எலுமிச்சம்பழ மாலையை கழற்றிக் கொடுத்த பெரியவா.

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை பூஜையறையில் வைக்க வேண்டும். பழங்கள் கெட்டுவிட்டால், ஏதாவது மரத்தினடியிலோ ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளிலோ போட்டுவிட வேண்டும். ஜூஸ் செய்தோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடக்கூடாது’ என்று பதிலளித்திருக்கிறார். இந்தப் பதிலை படித்ததும், எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

என் தந்தைக்கு, ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள்தான் குலதெய்வமே. அவர் எங்கு முகாமிட்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது தரிசிக்காமல் இருக்கமாட்டார். (1952ஆம் ஆண்டு ‘வியாஸ பூஜை’ ஆடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் (‘திருமூலர்’ சாத்தனூர் என்பார்கள்) எங்கள் கிரஹத்தில்தான் நடைபெற்றது! அநேக தடவைகள் எங்கள் கிராமத்தில் மகா பெரியவர் முகாமிட்டிருந்தாலும், அந்த முறை மூன்று மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம்போல் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்தபோது, அவர் ஆந்திர மாநிலம் ‘ரேப்பள்ளி’யில் முகாமிட்டிருந்தார். ‘ரேப்பள்ளி’க்கு நானும் என் தந்தையுடன் சென்று ஸ்ரீபெரியவரையும், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜையையும் இரண்டு நாள் தங்கி தரிசனம் செய்தோம்.

மூன்றாவது நாள் என் தந்தை வந்தனம் செய்து, ‘அப்ப நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா…” என்று பெரியவாளிடம் உத்தரவுக்காக பணிந்து நின்றார். உடன் அவர், “ஊருக்குத்தானே நேரே போகிறாய்…” என்றார்.

“ஆமாம்” என்று என் தந்தை கூறவும், தன் கழுத்திலிருந்த எலுமிச்சம் பழ மாலையை கழட்டி என் தந்தையிடம் கொடுத்து, இன்னும் ஒரு மாலையையும் கொடுத்து, “இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” என்றார். என் தந்தை உடனே “பெரியவா உத்தரவு” என்றபடி மாலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் கூட தங்காமல் சாத்தனூர் வந்து ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு கொடுத்தார்!

எலுமிச்சம் பழ மாலையைப் பார்க்கும் போதெல்லாம், பெரியவாளின் கருணை முகம்தான் பளிச்சிடும்!

சொன்னவர் - ஜி.நீலா சென்னை.
நன்றி;பால ஹனுமான். & தீபம் இதழ்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.