Breaking News :

Saturday, January 18
.

கன்னிகாதானம் என்றால் என்ன?


வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். 

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்! 

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்! 

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி. 'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மமஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது. 

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள். 

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது. 

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்! 

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் உணர்த்துகிறது. 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.