"கலெக்டர் கேட்ட கையெழுத்து."
(மைனர்) பெரியவாளிடம்
மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருந்தன. இதோ,அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை....இன்னும் மகானுக்கு பதினெட்டு வயது ஆகி,அவர் மேஜர் ஆகவில்லை.அதனால், மடத்து தஸ்தாவேஜுகளில் யார் கையெழுத்துப் போடுவது என்பதில் சிக்கல்.ஒரு மைனர் ரிக்கார்டுகளில் கையெழுத்து இட முடியாதே!
அப்போது நடப்பது ஆங்கில சர்க்கார் .மகானிடம் இதுபற்றிப் பேச, அப்போது இருந்த கலெக்டர் மடத்துக்கு வந்தார். அவரை வரவேற்று எதிரில் அமர வைத்தார் மகான்.
அவரிடம் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன், ஒரு பழுத்த பழமான அடியவர் மகானைத் தரிசிக்க வந்து,தட்டுத்தடுமாறி அவருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார். இது அவர் மடத்துப் பீடாதிபதிக்குக் கொடுக்கும் மரியாதை! பீடாதிபதி எந்த வயதினராக இருந்தால் என்ன? அவர்தானே பீடாதிபதி! அவருக்குத்தான் முதியவர் மரியாதை செலுத்துகிறார்.
கலெக்டர் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார் மகான்.
"பெரியவா இன்னமும் மேஜராகவில்லை .அதனால் மடத்து ரிக்கார்டுகளில் எப்படிக் கையெழுத்திட முடியும் என்பதை விசாரிக்கத்தான் வந்தேன்!" என்றார் கலெக்டர்.
அந்தச் சிறுவயது பெரியவா மெதுவாகத் தன் பேச்சை ஆரம்பிக்கிறார்.
"இந்த ஊருக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆயிற்று?"
"பதினைந்து வருடங்களுக்கு மேலாயிற்று .இப்போது இங்கே கலெக்டராக இருக்கிறேன்!"
"இத்தனை வருடங்கள் ஆனபின், உங்களுக்கு எங்கள் மடத்துச் சம்பிரதாயங்கள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டுமே! எங்கள் சம்பிரதாயத்தில் வயதானவர்கள் சிறியவர்களை நமஸ்காரம் செய்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?"
"இல்லை! எங்கள் வழக்கப்படி சிறியவர்கள் தான் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்...." என்றார் கலெக்டர்.
"அப்படியா! சரி..வீட்டில் அண்ணன்,அண்ணி இவர்களுக்கு நமஸ்காரம் செய்வது நமது மரபுதானே?"
"ஆமாம்!"
"அதாவது, அண்ணி நம்மைவிட வயதில் இளையவராக இருந்தாலும், அந்த ஸ்தானத்துக்கு நாம் மரியாதை செலுத்துகிறோமா, இல்லையா?"
"ஆமாம்!"
"இந்த இடத்தில் வயது வித்தியாசம் எங்கே வருகிறது?"
கலெக்டர் யோசித்தார்.
மகான் தொடர்ந்தார்.
"இப்போது உங்களுக்கு எதிரில்தானே ஒருவர் எனக்கு நமஸ்காரம் செய்தார்.அவருக்கு என்ன வயது இருக்கும்?"
"எண்பதுக்கும் மேலே இருக்கலாம். அவரை இருவர் பிடித்துக் கொண்டல்லவா வந்தார்கள்?" என கலெக்டர் பதில் சொன்னார்.
"எனக்கென்ன வயது?"
"பதினைந்து வயது!"
"என் வயதென்ன,அவரது வயதென்ன? எனக்கேன் அவர் நமஸ்காரம் செய்கிறார்? என் வயதுக்கு அவர் மரியாதை தரவில்லை நான் இருக்கும் இடத்துக்கு! அதாவது, மடாதிபதி ஸ்தானத்துக்கு!. ஆக, இங்கே மடாதிபதியாக யார் இருக்கிறார்களோ, அவர்கள்தான் கையெழுத்துப் போட வேண்டுமே தவிர, அவர் இன்ன வயதில் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் இங்கே பொருந்தாது. தெரிகிறதா?"
"வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!" என்றார் கலெக்டர். மகான் லேசாகப் புன்னகை புரிந்தார் .கலெக்டர் தொடர்ந்தார்..
"நான் புரிந்துகொண்டதை எங்கள் மேலிடத்துக்கு எழுதி விளங்க வைத்து, பிரிவி கவுன்சிலின் அனுமதியை வாங்கி விடுகிறேன்!" என்று கலெக்டர் சொல்ல .பெரியவா அவரிடம் உத்தரவு கேட்பது போல் பேச ஆரம்பிக்கிறார்.
"இங்கே காஞ்சியில் உள்ள தெய்வமான சந்திரமௌலீஸ்வரரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தெய்வம்.அவருக்கு வயதே கிடையாது. அவரை நான் தினமும் பூஜித்து வருகிறேன்,இல்லையா? எனக்கு வயது பதினெட்டு ஆகும்போதும் இதே தெய்வம் அப்போதும் இங்கேதான் இருப்பார். இல்லையா?.
அதனால், எனக்குப் பதினெட்டு வயதாகும்வரை அந்தத் தெய்வத்தின் பெயரால் கையெழுத்திடுவதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன். நீங்கள் லண்டனுக்கு எழுதி, அவர்கள் புரிந்து கொள்ளாமல் கேள்விமேல் கேள்வி கேட்டு உங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க, இது ஒன்றுதான் வழி. எனக்குப் பதினெட்டு வயது ஆன பிறகு, நான் என் பெயரில் கையெழுத்திடுகிறேன்.." என்று சொல்லி அந்தக் கையெழுத்து விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கு மேல் பேசுவதற்கு கலெக்டருக்கு விஷயம் இருக்கவில்லை.
"இது ஒரு நல்ல ஏற்பாடு" என்றுதான் அவரும் முடிவு செய்தார்.
இதைவிட விளக்கமாக மகானைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்.
வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!"- கலெக்டர்
கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்
தட்டச்சு;வரகூரான் நாராயணன்