அன்பின் துவக்கம் காதலாக இருக்கும் போது அரவணைப்பின் உச்சம் காமத்தில் தான் முடியும். சங்க கால இலக்கியம் தொடங்கி சினிமா பாடல்கள் வரை காதலை துவக்கும் வரிகள் எல்லாமே காமத்தை நோக்கி தான் நகர்கிறது.
கண்ணதாசன் தன்னுடைய வரிகளில் காதலை கவிதையாக்கி காமத்தின் பிரதிபலிப்பை பிள்ளையாக்கி கவிப்படுத்தி இருப்பார்.
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா…
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா…
டி.ஆர். அற்புதமான காதல் பாடலில் கூட “கருவண்டு நடனம் தளிகின்ற நடனம் இதயத்தில் சலனம் அம்மம்மா...” என்று காதலியை நினைத்து காதலில் உருகி துவங்கியவர் கடைசியில் “தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுதடி...” என்று முடித்து கடைசியில் அந்த இதழ்கள் வார்த்தையை கூட பிரித்து இதழ், கள் ஊறுதடி என்று ஒரு வார்த்தையை இரட்டை அர்த்தம் கொண்ட இரு வார்த்தையாக்கி காமத்தில் முடித்திருப்பார்.
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே..
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற...
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா...
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா…
போன்ற வரிகள் எல்லாமே தன் துணையின் பால் கொண்ட காதலின் உச்சத்தை காமமாக்கி தருவித்து தான் புலமைப்பித்தன், கங்கை அமரன் போன்ற கவிஞர்கள் எழுதி இருப்பார்கள்...
இதில் வாலி, டயமண்டார் எழுதிய பாடல்களை எல்லாம் காதலில் துவங்கி காமத்தில் முடியும் பாடல் வரிகளை உவமையாக சொன்னா கன்னித்தீவு மாதிரி எத்தனை எபிசோட் போகும்னு சத்தியமா சொல்ல முடியாது...
ஒரு படத்தில விஜயண்ணா சொல்லீருப்பாரு. “காதல்ங்கிறது காக்கா குருவிக கிட்ட கூட இருக்கும்” அப்படீன்னு... அந்த மாதிரி ஐந்தறிவு ஜீவன்களே ஒன்னை ஒன்னு மனசு கண்ணு இதயம் கிட்னி இத்தியாதிகளோட பார்த்து பேசிய பிறகு நைசா ரெண்டும் தங்களுக்கு தகுந்த சூழலான இடத்துக்கு சென்று மேட்டர் செஞ்சிக்கிறது தான் நம்ம அறிந்த வகையில் உண்மை.
ஆளானப்பட்ட ஐந்தறிவு ஜீவன்களுக்கே இந்த விதி தான் நடைமுறையில் இருக்கிற பொழுது ஆறதிவு ஜீவனாகிய மனிதர்க்கு எப்படி இது வெறும் காதல்ல மட்டும் முடியும்னு தெரியல. மனிதனின் உடலில் காதல் உணர்வை கொடுக்கும் ஹார்மோன்கள் தான் காம உணர்வுக்கும் ஒரு மூலதனமாக இருந்து அடுத்த கட்டத்தில் நகர்ந்து அது காம ஹார்மோனாக சுரந்து மனிதனை மோகத்தின் இச்சையில் மூழ்கடிக்கிறது. இது தான் உலக உயிர்களின் பரிமான வளர்ச்சியின் நியதி.
காஷ்மீர்ல காதலியை நினைச்சி உருகி உருகி காலம் பூராவும் கன்னியாகுமரியில உக்கார்ந்துகிட்டு காதலன் கையில தடவிகிட்டே இருந்தா அதற்கு பேர் முழுமை பெறாத காதல் தானே தவிர முற்று பெற்ற காதல்னு நிச்சயம் சொல்ல முடியாது.
வருசம் 16 போன்ற முற்றுப்பெறாத காதலோ, செண்டிமெண்டா உடல் உறுப்புகளை துறவறம் கொள்ள செய்யும் காதலோ, இல்லை ஒரு துணையை தேடி வரும் வயது முதிர்ந்த முதல் மரியாதை காதலோ சமூகத்தில் சில சதவீதம் விதிவிலக்காக இருக்குமே தவிர பெரும்பான்மையான காதலானது இருவரின் அன்பும் காதலில் தொடங்கி காமத்தில் கலப்பதே காலம் வகுத்து தந்த கட்டமைப்பாக இருக்கும் என்பதே இங்கு நாம் புரிந்து கொள்ள தகுந்த உண்மை.
பை தி வே.... ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ வாழ்நாள் முழுக்க தத்தமது துணையை மட்டும் எண்ணி அன்பால் காதல் கொண்டு இதயத்தில் வாசம் செய்து காமத்தில் முழுமை பெறும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர தினமும் மாற்றும் மேல் மற்றும் உள் ஆடைகளை போல அடிக்கடி மாற்றி கொள்ளும் துணைகளின் காதல் கத்திரிக்காய்களுக்கு இந்த பதிவு நிச்சயம் பொறுந்தாது என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி: நடராஜன்