Breaking News :

Thursday, January 23
.

மனைவி சொல்லே மந்திரம், ஏன்?


ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.. அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக, மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது...

 

கொல்லப் பட்டறை தொழில் ஒரு சமயம் நலிவுற்றது. அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. கொல்லன் சோகமே உருவாகி விட்டான். அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "எதுக்கு கலங்குறீங்க இந்த தொழில் இல்லைன்னா என்ன பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே.. அதை வெச்சு ராஜாவாட்டம் வாழலாமே" என்றாள்.

 

புது நம்பிக்கை, புது உற்சாகம்  கொல்லன் உள்ளத்தில்.  கொல்லன் இப்போது விறகுவெட்டி ஆனான். அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல்.. கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும் சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

 

ஒருநாள்...

ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள் "மாமோய் இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே".

 

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்... "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில், நம்ம வீட்டில் தினந்தினம்

நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும் இப்போ இப்படி வயிற்றைக்கட்டி வாழுறோமே அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு"..

 

"கண்ணு கலங்காதீங்க என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம் காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம் கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.

 

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில் விறகு வெட்டியானவன் இப்போது விறகுக்கடை முதலாளியானான். வருமானம் பெருகியது. அப்புறமென்ன வீட்டில் கறிசோறு தான் ஆனால்...,

 

வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன? வந்தது கெட்ட நேரம் விறகு கடையில் தீ விபத்து.. அத்தனை மூலதனமும் கரிக் கட்டையாகி விட்டது தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,

"கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து

எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும்" என்றார்கள்....

 

மனைவி வந்தாள் கண்ணீரை துடைத்தாள் அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள். கண்ணீர் மல்க சொன்னாள் "இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு கரியாத்தானே ஆகியிருக்கு நாளைலயிருந்து கரி வியாபாரம் பண்ணுவோம்"..

 

தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.

'ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் அன்பு செலுத்தவும்' அன்பான மனைவி அமைந்தால் முடங்கி கிடக்கும் முடவனும் கூட  எவரஸ்ட் சிகரம் தொடுவான்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.