Breaking News :

Friday, July 19
.

கணவனின் அன்பை பெறாத மனைவியின் நிலை?


துரியோதனன்  பற்றியும், அவனது தம்பிமார்கள் பற்றி தெரிந்த அளவுக்கு  அவனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரியாது.

 கர்ணன் படத்தின்மூலமாக அவன் மனைவி பானுமதின்னும், யாரையுமே நம்பாத துரியோதனன் தன் மனைவிமீது அபார நம்பிக்கை வைத்திருந்தான். அதுக்கு உதாரணமா ஒருநாள் கர்ணனும், பானுமதியும் தனித்து தாயம் விளையாடி கொண்டிருக்கும் போது, துரியோதனன் அங்கு வர அவனை கண்டதும் மரியாதை நிமித்தமாய் பானுமதி எழுந்துக்கொள்ள, தோல்வி பயத்தில் எழுந்துக்கொள்வதாய் தவறாய் நினைத்து எங்கே ஓடுகின்றாய் என அவளது முந்தானையை பிடித்து கர்ணன் இழுக்க, சேலையில் கோர்க்கப்பட்டிருந்த முத்துக்கள் சிதறி ஓடியது. முத்துக்கள் சிதறியபின்தான் அங்கு துரியோதனன் நின்றுக் கொண்டிருப்பதை கர்ணன் கண்டு, எங்கே துரியோதனன் தவறாய் நினைத்துவிடுவானோ என கர்ணன், பானுமதி இருவரும் விக்கித்து நிற்க,  சிந்திய முத்துக்களை எடுக்கவோ? கோர்க்கவோ? என ஒற்றை வார்த்தையில் இருவரையும் தவறாய் நினைக்காததை துரியோதனன் உணர்த்தி விடுவான். இந்த காட்சி படத்துல வரும்போது நட்பின்மீதும், மனைவிமீதும் எத்தனை பாசம், அன்பு, புரிதல் இருந்தால் இப்படி ஒரு வார்த்தை வரும்ன்னு சிலாகித்தோம்.

புரிதல் இருந்தால்தான் நட்பு மலரும். ஆனால், இருவேறு சூழலில், பழக்கவழக்கத்தில் வளர்ந்து ஒன்று சேர்ந்த  கணவன், மனைவிக்குள் புரிதல், அன்பு வருவது அவ்வளவு சுலபமல்ல.   அந்த மாதிரி புரிதல் வர பானுமதி ரொம்பவே மெனக்கெட்டாள். அந்த கதையினைதான் இன்றைக்கு  பார்க்கப்போறோம்.

துரியோதனன் - பானுமதி திருமணம் காதல் திருமணம். காதலுக்கு உதவியது கர்ணன்.  பானுமதி கலிங்க நாட்டை ஆண்ட சித்ரங்கதனின்  மகள்.  பானுமதி பருவ வயதை எட்டியவுடன்  சுயம்வரத்துக்கு ஏற்பாடு  செய்தனர். இளவரசனாக முடிசூட்டப்பட்டிருந்த துரியோதனன் சகுனியின் அறிவுரையின்படி பானுமதியின் சுயம்வரத்தில் கலந்துக்கொள்ள தன் நண்பன் கர்ணனுடன் சென்றான்.

அந்த சுயம்வரத்தில் சிசுபாலன், ஜராசந்தன், பிக்ஷமகன், வக்ரன் போன்ற மாவீரர்களும் கலந்துக்கொண்டனர். சித்ரங்கதன் ஏற்பாடு செய்திருந்த சுயம்வர விதிகளின்படி இளவரசர்கள் அனைவரும் வரிசையாக நிற்க, அரங்கத்திற்குள் வந்த பானுமதியின் அழகினை கண்டு அனைவரும் அதிசயித்து நின்றனர். ஒவ்வொருவரையும் பானுமதிக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தனர்.  

ஒவ்வொருவராக  பார்த்து வந்த பானுமதி துரியோதனனை கண்டதும், சட்டென அவனின் எதிர்திசையில் திரும்பி கொண்டாள். இந்த நிராகரிப்பு துரியோதனனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. பானுமதி தன்னை  நிராகரித்ததை துரியோதனனால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால், கோபமடைந்த துரியோதனன் பானுமதியை கடத்தி செல்ல முடிவெடுத்தான். இதனை தன் நண்பன் கர்ணனிடம் கூற,  நண்பனின் சொல்லை தட்டி பழக்கமில்லாத கர்ணன் அதற்கு ஒப்புக்கொண்டு,  இருவரும் அங்கிருந்த மற்ற இளவரசர்களுடன் போர் புரிய தொடங்கினர். சிசுபாலன், ஜராசந்தன் மாதிரியான பெரிய ஜாம்பவான்களால்கூட கர்ணன் மற்றும் துரியோதனனின் வீரத்தின் முன் எதிர்த்து நிற்க முடியாமல் திணறினர்.

அங்கிருந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து பானுமதியை அஸ்தினாபுர கோட்டைக்கு அழைத்து வந்தான் துரியோதனனன்.   துரியோதனனின் வீரத்தினை கண்கூடாய் கண்ட பானுமதி அவன்பால் காதல் கொண்டாள். பீஷ்மர் இந்த செயலை கண்டித்தார்.  

கர்ணன் மீதான அவரின் வெறுப்பு அதிகமானது.  தாங்களும் தங்கள் தம்பி விசித்திரவீரியனுக்காக  அம்பை உட்பட மூன்று பெண்களை காசியிலிருந்து கடத்தி வந்தவர்தானே?!  என அவரின் வாயை அடைத்துவிட்டான். பானுமதி தன்னைப்போலவே சிவபக்தியில் சிறந்து விளங்குபவள் என அறிந்ததால் பானுமதியை காந்தாரிக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அனைவரின் பீஷ்மரின் சம்மதத்துடன் பானுமதியை மணந்தான் துரியோதனன்.

திருமணம் ஆனதே தவிர, பானுமதி, துரியோதனனுக்கு இடையில் ஒட்டுதலும், புரிதலும் இல்லாமலே காலம் கடந்தது. பானுமதி சுயம்வரத்தில் செய்த அவமதிப்பும்,  பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதிலுமே குறியாக இருந்ததால்,  மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனால் இயலவில்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், கணவனின்  அன்புக்காக பானுமதி ஏங்கினாள். எல்லா தெய்வங்களையும் வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்க  மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.

பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும்  முனிவர் தந்த வேரையும் அதில் சேர்த்து, துரியோதனின் வருகைக்காக பானுமதி காதலுடனும், காமத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அன்றைய இரவினை நல்பொழுதாக்க காத்திருந்தாள். அன்றைய தினம் பௌர்ணமி. இரவின் இரண்டாம் ஜாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்ததாலும், மனைவிமீது கொண்ட கோவத்தினாலும் ஆசையுடன் பானுமதி நீட்டிய பால் கிண்ணத்தை தட்டிவிட்டான்.

தூர விழுந்த கிண்ணத்திலிருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அந்த பக்கமாய்  சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ன்ற பாம்பு அந்தப் பாலை குடித்தது. தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதிமீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் பானுமதி முன், தஷகன்  தோன்றி,  தன் காதலை வெளியிட்டான். இது முறையற்ற காமம் என பானுமதி வாதாடினாள். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்று தஷகன் வாதாடினான். பதிவிரதையான பானுமதி  இந்நிலைக்காக பதறினாள்; துடிதுடித்தாள்.

பானுமதியின் அவமதிப்புதான்  துரியோதனன் மனதை உறுத்தியதே தவிர, தன் மனைவியின் கற்புநெறிமீது எந்தவித சந்தேகமும் இல்லை.  தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான்.

தக்ஷகன் பாம்பு எனினும் பண்புமிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. ஆனாலும்,  பானுமதியின் உள்ளத்தினையும், துரியோதனின் தவிப்பினையும் உணர்ந்த அவன் அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.

அதேநேரம், பானுமதியின் அன்பை இழக்கவும்  தஷகன் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனையை தஷகன் விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன்.

பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு தக்ஷகன் மறைந்தான் .

அன்றிலிருந்து  பௌர்ணமிதோறும் தஷகனுக்கு  பாலூற்றி வணங்கி வந்தாள்.  பானுமதியோடு  துரியோதனனும் பயபக்தியோடு தஷகனை காண செல்வான்.  இந்த நிலைக்கு தானே காரணமென்பதை உணர்ந்த  துரியோதனன், அன்றிலிருந்து பானுமதிமீது அன்பு செலுத்த ஆரம்பித்தான்.  இருவருக்குள்ளும் புரிதலும் நெருக்கமும் அதிகமானது.

துரியோதனன் மற்றும் பானுமதியின் காதலின் அடையாளமாக அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். பெண் குழந்தைக்கு லட்சுமணா என்றும் ஆண் குழந்தைக்கு லட்சுமணகுமரன் என்றும் பெயர் வைத்தனர். துரியோதனனின் மகள் கிருஷ்ணரின் மகன் சம்பாவை திருமணம் செய்து கொண்டாள்.

மகன் லட்சுமணகுமாரன்  குருஷேத்திர போரில் அர்ஜுனனின் மகன் மாவீரன் அபிமன்யு கையால் கொல்லப்பட்டான். குருஷேத்திர போரில் துரியோதனன் வீழ்ந்ததும், அவனோடு பானுமதியும் இறக்கும்வரை பானுமதி-துரியோதனனுக்கு இடையிலான காதலும், நெருக்கமும், புரிதலும் தொடர்ந்தது..

எத்தனைதான் ஆஸ்தி, அந்தஸ்து, ராஜபோக வாழ்க்கை இருந்தாலும் கணவனின் அன்பு ஒரு பெண்ணுக்கு கிடைக்கலைன்னா என்னகதி நேருமென்பது பானுமதி கதையின் மூலமாக தெரிஞ்சுக்கலாம்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.