Breaking News :

Thursday, February 06
.

பறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகளை என்ன செய்வாங்க?


பொதுவாகவே தொலைதூரப் பயணங்கள் பஸ்ஸில் செல்வதற்கு பெரும்பாலானோர் தயக்கம் காட்டுவதே கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காகத் தான். பஸ்ஸில் நெடுந்தூரப் பயணம் செல்கின்ற பொழுது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்படும். அந்த நேரத்தில் தான் நாம் நம்முடைய வேலைகளை முடிக்க முடியும். இதில் ஆண்களுக்குக் கூட பெரிதாகப் பிரச்சினைகள் இருப்பதில்லை. பெண்கள் என்றால் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அதனாலேயே தொலைதூரப் பயணங்கள் என்றால் ரயில்களையும் விமானங்களையும் அதிகமாகத் தேர்வு செய்கிறோம்.

 

ரயில் கழிவுகள்:

 

அப்படி ரயில்களில் நாம் செல்கின்ற பொழுது, கழிவறைகளைப் பயன்படுத்துவோம். போதிய தண்ணீர் வசதி இருக்கும். அதைவிட அந்த கழிவுகள் ஓடும் ரயிலில் அப்படியே குழாய்களின் வழியே பூமியிலேயே வெளியேற்றப்பட்டு விடும். அதேபோல் ரயில் நிலையங்களில் தண்டவாளங்களில் நிற்கின்ற பொழுது, அந்த குழாயின் வழியாக அங்கிருக்கும் பகுதியிலேயே வெளியேறும். அப்படி ரயில் நிலையத்திலேயே சுத்தம் செய்யப்பட்டும் விடும்.

 

விமானத்தில் என்ன ஆகும்?:

 

இதுவே விமானத்தில் மேலே பறந்து கொண்டிருக்கும் போது, விமானங்களில் பயணங்கள் செய்வோர் கழிவறையைப் பயன்படுத்தினால் அது என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதிலும் விமானங்களிலும் கூட அதே வெஸ்டர்ன் டைப்பான உட்காரும் கழிவறை தானே இருக்கிறது. அந்த கழிவுகள் எங்கு போகின்றன, 

 

விமான கழிவறைகள்:

 

ஒரு விமானம் அமெரிக்கா, துபாய் என எங்கு சென்றாலும் ஒரு பன்னாட்டு விமானத்தின் ஒரு முறை பயண நேரத்தில் சுமார் ஆயிரம் டாய்லெட்டுகள் பயன்படுத்தப்பட்டு ஃபிலெஷ் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறதாம். அப்படி உள் தள்ளப்படுகின்ற இந்த கழிவுகள் எங்கே சென்று சேருகின்றன என்பது தெரியுமா உங்களுக்கு? விமானத்தில் உள்ள மனிதக் கழிவுகள் அத்தனையும் விமானத்தின் பின்பகுதியில் அடிப்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நீலநிறக் கழிவறைத்தொட்டி (blue sanitary tank) பகுதிக்குத்தான் இது செல்கிறது.

 

வேக்யூம் டாய்லெட்:

 

பொதுவாக விமானங்களில் வேக்யூம் டாய்லெட் என்று சொல்லப்படுகின்ற வெற்றிடக் கழிவறைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையினால் தான் விமானத்தில் தண்ணீரின் தேவை என்பது குறைவாகவே இருக்கிறது. இந்த டாய்லெட் நான்ஸ்டிக் மெட்டீரியலில் உருவாக்கப்பட்டது. இதை நாம் ஃபிளஷ் செய்கின்ற போது ஒரு வால்வு திறந்து கீழே உள்ள குழாயை நோக்கி கழிவுகள் செலுத்தப்படுகிறது. உடனடியாக ஒரு வெக்யூம் குழாயும் அதை உள்ளிழுத்துக் கொள்கிறது. இப்படி இழுக்கப்படும் கழிவுகள் ரேஸ் கார் செல்கின்ற அளவுக்கு வேகமாகச் சென்று ஸ்டெயின்லஸ் டீலாலால் உருவாக்கப்பட்ட அந்த நீலநிறத் தொட்டியில் சென்றடைகிறது.

 

விமானம் தரையிறங்கிய பின்:

 

ரயிலில் இறுதி நிறுத்தத்தில் சுத்தம் செய்யப்படுவது போல, விமானத்தில் அந்த கழிவுகள் சேரும் நீலநிற சானிடரி தொட்டி விமானம் ஒவ்வொரு முறை தரையிறக்கப்பட்டதும் சுத்தம் செய்யப்படுகிறது.

 

ஹனி டிரக்:

 

விமானம் தரையிறங்கிய பின் முதல் வேலையாக இந்த கழிவுகள் தான் சுத்தம் செய்யப்படும். இதை ஒரு இயந்திர வாகனம் கொண்டு செய்யப்படுகிறது. இந்த வண்டியின் பெயர் தான் ஹனி டிரக். இந்த டிரக் விமானத்தின் பின்பகுதியில் உள்ள அந்த நீலநிற டேங்க்குக்கு கீழ் நிறுத்தப்பட்டு, இந்த வண்டியில் உள்ள குழாயுடன் பொருத்தப்படும். இந்த வண்டியில் இரண்டு டேங்குகள் இருக்கின்றன. ஒன்று கழிவுகள் சேர்க்கிறது, மற்றொன்று தண்ணீர்.

 

கழிவுகள் வெளியேற்றம்:

 

பட்டனை அழுத்தியதும் கழிவுகள் ஒரு டேங்கில் சேர்க்கிறது. அதன்பின் மற்றொரு பட்டனைத் தட்டினால் குழாயின் வழியே தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு ப்ளூ டேங்க் சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வளவு வேலையையும் வெறும் பத்து நிமிடத்தில் இந்த வாகனம் செய்து முடித்து விடுகிறது.

 

எங்கே போகிறது?:

 

அதன்பிறகு ஹனி டேங்க் வெளியே கொண்டு வரப்பட்டு நம்முடைய கார்ப்பரேஷன் கழிவுகள் எப்படி சப்வே டிரெயினேஜில் கலக்கப்படுகிறதோ அதேபோல தான் இந்த கழிவுகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.