Breaking News :

Sunday, September 15
.

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம்?


பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இவர்களின் கணக்குப்படி பூமியில் ஒட்டுமொத்தமாக 8 கண்டங்கள் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை இவர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

 

இதற்கு முன்பு வரை பூமி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது, இதுவரை நாம் அறிந்திடாத புதிய நிலப்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு பசிபிக் கடலின் கீழ் சுமார் 3,500 அடி நீருக்கு அடியில் இந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. பூமியின் 8 ஆம் கண்டம் என்று கோரப்படும் இந்த கண்டம் இது வரை ஒரு சிறிய தீவாக நீருக்கு மேல் காட்சியளித்தது. இது அட்லாண்டிஸ் இல்லை ஸிலாந்தியா (Zealandia) என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

 

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நீருக்கடியில் மூழ்கி, பூமி இழந்த ஒரு மிக பெரிய கண்டமாக இந்த 'எட்டாவது கண்டம்' கருதப்படுகிறது. இந்த எட்டாம் கண்டத்தின் நிலப்பரப்பிற்கு ஸிலாந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஜி.என்.எஸ் சயின்ஸின் ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டத்தின் வடிவத்தையும் அளவையும் மிக விரிவாக வரைபடமாக்கியுள்ளனர்.

 

மேப்பிங்கிற்காக, ஆராய்ச்சியாளர்கள் பாத்திமெட்ரிக் (bathymetric) அளவீடு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். பாத்திமெட்ரிக் முறை கடல் நீருக்கு அடியில் ஒளிந்துள்ள நிலப்பரப்பைக் கண்டறியும் ஒரு ஸ்கேனிங் முறையாகும். ஸிலாந்திய கடல் தளத்தின் வடிவம் மற்றும் அதன் ஆழம் ஆகியவற்றைச் சுற்றி ஆய்வு செய்துள்ளனர். கூடுதலாக, டெக்டோனிக்-தட்டு எல்லைகளுக்குக் குறுக்கே ஸிலாந்தியவை துல்லியமாகக் கண்டறிய அதன் டெக்டோனிக் சுயவிவரத்தை ஆய்வு செய்துள்ளனர்.

 

புதிதாக உருவாக்கப்பட்ட வரைபடங்கள் ஸிலாந்திய உருவாக்கம் குறித்து முன்னர் அறியப்படாத தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அனைத்து பயனர் பார்வைக்காகக் கண்டத்தின் தகவல்கள் மற்றும் விரிவான வரைபடங்கள் இப்போது இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வரைபடத்தின் உதவியோடு, மக்கள் 8 ஆம் கண்டதை பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

 

முன்னணி ஆராய்ச்சியாளர் நிக் மோர்டிமர் கூறியது என்ன?

'நியூசிலாந்து மற்றும் தென்மேற்கு பசிபிக் பகுதியின் புவியியலின் துல்லியமான, முழுமையான மற்றும் புதுப்பித்த படத்தை வழங்குவதற்காக இந்த வரைபடங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் - இதற்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள வரைபடம் சிறந்தது' என்று முன்னணி ஆராய்ச்சியாளர் நிக் மோர்டிமர் தனது அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளார்.

 

8 ஆம் கண்டத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு தெரியுமா?

ஸிலாந்தியாவின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட 2 மில்லியன் சதுர மைல்கள், அதாவது சரியாகச் சொன்னால் 5 மில்லியன் சதுர கிலோமீட்டராகும். இந்த ஒட்டுமொத்த பரப்பளவையும் இந்த விஞ்ஞானி குழு ஆராய்ச்சி செய்து அதன் தோற்றத்தை வரைபடமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையில், ஸிலாந்தியா கண்டம் ஆஸ்திரேலியாவின் பாதி அளவு கொண்டது என்றும், இந்த கண்டத்தின் 6% மட்டுமே கடல் மட்டத்திற்கு மேல் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தண்ணீருக்கு மேலே உள்ள பகுதி நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு தீவுகள் மற்றும் நியூ கலிடோனியா தீவின் அடித்தளமாக அமைந்திருக்கிறது. மீதமுள்ள ஸிலாந்தியா நீருக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது, இதனால் அதன் கடல் தளத்திற்கும் வரைபடமாக்க வேண்டியிருந்தது, எனவே தான் விஞ்ஞானிகள் குழு ஒரு பாத்திமெட்ரிக் அளவீடு முறைப் படி மிகத் துல்லியமாக வரைபடத்தை உருவாக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாத்திமெட்ரிக் அளவீட்டு வரைபடத்தின் திடுக்கிடும் வெளிப்பாடு கண்டத்தின் செங்குத்தான மலைகள் மற்றும் நீரின் மேற்பரப்பை நோக்கி உயரும் முகடுகளைக் காட்டியுள்ளது. மலைகள் மற்றும் முகடுகளுடன் கூடுதலாக, வரைபடம்  கடற்கரையோரங்கள், பிராந்திய வரம்புகள், எரிமலைகள் மற்றும் முக்கிய கடலுக்கடியில் உள்ள அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறது.

 

விஞ்ஞானிகள் தயாரித்த மற்றொரு வரைபடம் நீருக்கடியில் கண்டத்தில் உள்ள மேலோடு வகைகளைக் காட்டுகிறது. இந்த வரைபடம் கண்டத்தின் வயது மற்றும் அதன் நிலப்பரப்பு தகவலைக் குறிக்கிறது. கண்ட மேலோடு அல்லது நிலப்பரப்புகளை உருவாக்கும் தடிமனான மேலோடு சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் காட்டப்பட்டுள்ளது. இளைய, கடல் மேலோடு நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. சிவப்பு முக்கோணங்கள் எரிமலைகளைச் சுட்டிக்காட்டுகின்றது.

 

ஆராய்ச்சியாளர்கள் டெக்டோனிக் இயக்கங்களின் கீழ் ஆய்வு செய்தனர் மற்றும் அவற்றின் அவதானிப்புகளை வரைபடத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். டெக்டோனிக் தகடுகளின் இத்தகைய இயக்கங்களைப் படிப்பது கண்டம் எவ்வாறு முதலில் உருவானது என்பதைக் கண்டறிய உதவும், அந்தவகையில் ஸிலாந்தியா சுமார் 30 மில்லியனிலிருந்து 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கியது என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த 8 ஆம் கண்டத்தின் முழு ஆராய்ச்சியையும் இந்த குழு முடித்துவிட திட்டமிட்டுள்ளது. இப்பொழுது இந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சியின் முதல் கட்டத்தை மட்டுமே ஆராய்ச்சி குழு முடித்துள்ளது என்றும், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் காலங்களில் வெளிவரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.