"பொண்டாட்டி செத்தா புருசன் புது மாப்பிள்ளை" என நம்ம ஊரில் ஒரு பழமொழியே உண்டு.மனைவி இறந்துவிட்டால் இன்னொரு பெண்ணை மணப்பதில் ஆணுக்கு வானளாவிய சுதந்திரமும், கலாச்சார பாதுகாப்பும் உண்டு. அதுவும் மனைவியின் தங்கையையே கூட திருமணம் செய்துகொள்ள முடியும். ஒருவேளை முதல் மனைவிக்கு குழந்தை இருந்தால் அவள் இறந்த பின் அவளின் தங்கையை திருமணம் செய்துகொள்ள கூடுதல் வாய்ப்பாக அமைந்துவிடும்! ஏனெனில் அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை.
இதே கணவன் இறந்து போனால் அந்த பெண்ணிற்கு இன்னொரு திருமணம் அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை! அதுவும் அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை இருப்பின், அண்ணனின் குழந்தையை தன் குழந்தை போல் பார்த்துக்கொள்வான் என அந்த பெண்ணின் கொழுந்தனை யாரும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். ஆண்கள் மட்டும் சந்தர்ப்பம் அமைந்தால் கொழுந்தியாளை திருமணம் செய்துகொள்ளாலாம் ஆனால் பெண் மட்டும் கொழுந்தன்களை திருமணம் செய்து கொள்ள முடியாது. என்னங்க சார் உங்க சட்டம்!?
அப்பா ஏதோ ஓர் சந்தர்பத்தில் இறந்து விட்டால் அம்மா இன்னொரு திருமணம் செய்துகொள்ள முதல் தடையாய் இருப்பது பிள்ளைகளாகிய நீங்கள்தான். அம்மாவிற்கு இன்னொரு வாழ்க்கை அரிதாக கிடைத்தாலும் கூட "எனக்கு என் சந்தோசம் பெரிதில்லை என் பிள்ளைகளின் சந்தோசம் தான் முக்கியம் எனக்கு திருமணம் வேண்டாம்" என்பது தான் அம்மாவின் பதிலாக இருக்கும்! இருக்க வேண்டுமென நீங்களும் இந்த சமூகமும் எதிர்பார்ப்பீர்கள். ஒரு வேளை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்பது பதிலாக இருக்குமேயானால் அடுத்த விநாடியே "அவளுக்கு அப்படியென்ன ஆம்புள சுகம் கேட்குது" என்ற வார்த்தைககளால் அவள் மனதை குத்திக்கிழிப்பார்கள்... காரணம் அம்மா மேல் சுமத்தி வைத்திருக்கும் தேவையில்லாத புனித பிம்பம்.
அம்மா என்றாலே எந்த உணர்ச்சிகளும் அற்ற ஜடமாய்தான் இருக்க வேண்டுமென்ற உங்களின் அற்பத்தனமான வரையறை. கடைசி வரை அம்மா என்பவள் உங்களுக்கு ஒரு Sentimental Slave ஆகவே வாழ்ந்து மறைந்துவிட வேண்டும் என்பது தான் உங்களின் சுயநலம். நீங்கள் இப்படி நினைத்துபாருங்களேன், உங்கள் விதவைத் தாய் தன்னுடைய காதலையும் தாம்பத்யத்தையும் உங்களுக்காக தியாகம் செய்து மறுமணமே செய்யாமல் உங்களின் அம்மாவாக மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகிறார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னர் என் தாய் எனக்காக தன் காதலையும் தாம்பத்ய சுகத்தையும் தியாகம் செய்த மாதிரி பதிலுக்கு நானும் என் தாய்க்காக என் காதலையும் தாம்பத்யத்தையும் தியாகம் செய்கிறேன். என் இறுதி நாள் வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் என் தாயின் மகனாக/மகளாக மட்டுமே வாழுவேன் என்ற தியாகத்தை உங்களால் செய்ய முடியுமா? முடியாது தானே! விடலைப்பருவத்தை தொட்ட அடுத்த நாளே உங்கள் காதலன்/லி உடன் தியேட்டர் பக்கமோ பீச் பக்கமோ ஒதுங்குவீர்கள் தானே! அதுதானே காதலின் யதார்த்தம் இதே யதார்த்தம் உங்கள் அம்மாவிற்கும் பொருந்தும் தானே! ஏனென்றால் காதல் என்ற உணர்வு அனைவருக்கும் பொதுவானது. தாய்மை என்பது ஒரு பெண்ணின் பல்வேறு உணர்வுகளில் ஒரு உணர்வு! அந்த ஒரு உணர்வு மட்டுமே அவளின் மொத்த உலகமாக இருக்க வேண்டும் என்பது எத்தனை அபத்தமான சுயநலம்.
என்றாவது ஒருநாள் அம்மா அப்பாவின் படுக்கை அறையை எதேச்சையாக கடக்கும் போது அம்மாவின் மகிழ்ச்சியுடன் கலந்த இலேசான சிரிப்பு சத்தம் பூட்டிய அறைக்கதவுகளையும் தாண்டி மெலிதாக வெளியே கேட்கும். அந்தச் சிரிப்பொலியில் அத்தனை காதல் கலந்திருக்கும். அந்த அறைக்குள் இருக்கும் உலகம் அவர்களுக்கானது. அங்கே அவர்கள் உங்களின் பெற்றோர்கள் கிடையாது. அங்கே அவர்கள் காதலர்கள். காதலும் காமும் சேர்ந்த அவர்களின் அந்த உலகம் அத்தனை அழகானது! அங்கே வேறு யாருக்கும் இடமில்லை. அந்த உலகம் அவர்களுக்கு அள்ளித்தரும் காதலின் சுகம் அலாதியானது! அப்படி ஒரு காதலுக்காக தானே நாம் அனைவரும் ஏங்கிக் கிடக்கிறோம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென அந்த உலகம் இருண்டு போனால்!!......?
நீங்கள் மீண்டும் அப்படி உலகத்தை உங்கள் தாய்க்கு உருவாக்கி தரவில்லை என்றால் கூட பரவாயில்லை... உங்கள் அம்மாவே வேறொரு நபருடன்(காதலன்) சேர்ந்து அந்த உலத்திற்குள் திரும்ப நுழைய முனைந்தால் அந்த யதார்த்தமான உணர்வை கள்ளக்காதல் என்று கொச்சை படுத்தாமலாவது இருங்களேன் பிளீஸ்!
-நன்றி ஈசன் சித்தன் மீள்...