ஒரு உயிர் உடலைவிட்டு பிரிஞ்சதும் உடனே சொர்க்கமோ நரகமோ போறதில்லை. உயிர் உடலிலிருந்து பிரிஞ்சு மூன்று நாள்வரை நீரிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு நெருப்பிலும், அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் இருக்கும். இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தான் இருந்த தன் வீட்டிற்குள் என்ன நடக்குது?!
யார் அழறாங்க? யார் மகிழ்ச்சியடையுறாங்கன்னும் துக்கம் கேட்கப்போவோர் வருவோரையும் அட்டெண்டஸ் எடுக்குறமாதிரி வந்து பார்த்துக்கிட்டு வாசலியே நிக்கும். 10வது நாளில் தன் வீட்டிற்குள் அந்த உயிர் வரும். அதனால்தான் பத்தாம் நாள் காரியம் செய்வது முக்கியம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. ஆனா, இப்பலாம் ஐந்து நாட்களிலேயே காரியம் செஞ்சுடுறாங்க. இது தப்பு.
11,12வது நாளில் நாம் கொடுக்கும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாளில்தான் எமதூதர்கள் கயிற்றால் கட்டி உயிரை இழுத்துச்செல்ல, தன் வீட்டை பார்த்தபடியே நாள் ஒன்றுக்கு 247 காததூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்போது அந்த உயிருக்கு பசி, தாகம் அதிகம் ஏற்படும். பசியோடு நடந்து செல்லும் அந்த உயிர், மாதத்தில் ஒருநாள் அதாவது அந்த உயிர் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுக்க அனுமதி அளிக்கப்படும். அதனாலதான், ஒரு உயிர் இறந்தபின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்கும் வழக்கம் உண்டானது. இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த உயிரின் பசியை போக்கனும். இப்படியே ஒரு ஆண்டுக்காலம் நடந்து செல்லும் அந்த உயிர் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் எமலோகத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா எமலோகம் செல்ல ஓர் ஆண்டுகாலம் பிடிப்பதால்தான் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் நடத்தக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்லுது.
அதுக்கப்புறம்தான் அந்த உயிர் பாவம் செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று எமலோகம் செல்லும். அந்த உயிர் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமா பிரம்மலோகம் செல்கிறதுன்னு புராணங்கள் சொல்கிறது.