ஜூலியஸ் சீசர் இறந்த பின், அவரது வளர்ப்பு மகன் ஆக்டேவியஸ் .. இவர் அகஸ்டஸ் சீசர் என்றும் அழைக்கப்பட்டார். இவரது பெயரால் தான் ஆகஸ்டு மாதம் உருவானது.. சீசரின் தவிர்க்க இயலாத தளபதிகள் மார்க் ஆண்டனி, லெப்பிடஸ், ஆக்டேவியஸ் மூவரும் இணைந்து, ரோமப் பேரரசின் பகுதிகளை பிரித்து, ஆட்சி செய்தனர்.
மார்க் ஆண்டனி எகிப்து மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றை கவனித்து வந்தான்.. ( இந்த கால கட்டத்தில் தான் கொல்ல நினைத்த ஏரோதுக்கு ஜெருசலேமில் ஆட்சியைப் பிடிக்க படை உதவி ஆண்ட்டனியால் அளிக்கப்பட்டது) எகிப்தில் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி, ( மயக்கியது கிளியோபாட்ரா) அங்கேயே நிரந்தரமாக தங்க ஆரம்பித்திருந்தான்.. இந்த நிலையில் ரோமப் பேரரசு முழுவதையும் தானே ஆள வேண்டும் என்ற பேராசையால், அகஸ்டஸ் சீசர் மார்க் ஆண்டனி மீது போர் தொடுத்தார்.. விஷயம் கேள்விப்பட்ட ஆண்டனி கிளியோபாட்ரா இருவரும், தூதுவரை அனுப்பி, "எங்கள் இருவரையும் விட்டு விடுங்கள் போதும்..ஆட்சி வேண்டாம். நாங்கள் எங்கேயாவது சென்று விடுவோம் " எவ்வளவு பெரிய வீரன்! தான் நேசிக்கும் காதலிக்காக இப்போது கெஞ்சிக் கொண்டிருந்தான். கிளியோபாட்ரா வும், முதலில் ஆட்சிக்காக தனது 15 வயதான தம்பியை திருமணம் செய்திருந்தாள்.. சொத்து வேறெங்கும் போய் விடக் கூடாது என்பதற்காக, சிலர் சொந்த உறவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது போல, எகிப்தில் ஆட்சி வேறோருவரிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக உடன் பிறந்தோரை திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது.
அகஸ்டஸ் சீசர் இவர்களது கோரிக்கைகள் எதற்கும் மசியவில்லை ..' உலக மகா வீரர் ஜுலியஸ் சீசர், இப்போது மார்க் ஆண்டனி,. இந்த மாபெரும் வீரர்களை தன் காலடியில் வீழ்த்தி, ரோமப் பேரரசிற்கு தீராத தலை குனிவை ஏற்படுத்திய அழகி கிளியோபாட்ரா வை சிறைப்பிடித்து , ரோம வீதிகளில் அழைத்துச் செல்ல வேண்டும்.. எகிப்தில் கொட்டிக் கிடக்கும் செல்வங்களை எடுத்து வந்து, ரோமில் பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் " என்பதே இவரது கனவு .இப்போரில் ஆன்டனி தோல்வி அடையப் போவதை அறிந்து கொண்டாள் அவள். ஜூலியஸ் சீசருடனான வாழ்க்கையை அவள் ஒரு கசப்பான கனவாக மறந்து விட நினைத்தாள். தங்களுக்கு பிறந்த மகன் ஜூலியனை ரோமின் வாரிசாக அறிவிப்பார் என்று நினைத்திருந்தாள்.. ஆனால் அவரோ தனது வளர்ப்பு மகன் ஆக்டேவியஸ் தான் வாரிசு என்று அறிவித்ததும், அங்கிருந்து கிளம்பி வந்து விட்டாள்..என்ன இருந்தாலும் இந்த ரோமன் களுக்கு இனவெறி அதிகம் தான்.. ஜூலியஸ் சீசருக்கு பதவி வெறி அதைவிட அதிகம்.. கிளியோபாட்ராவும் ஆட்சிக்காக எதையும் செய்ய தயாராக இருந்தாள்..இதனாலேயே ஜூலியஸ் சீசரை ஆண் கிளியோபாட்ரா என கிண்டல் செய்தனர் . ஆனால் ஆண்டனியை உயிரினும் மேலாக அவள் நேசித்தது உண்மை..
கிளியோபாட்ரா — படி தாண்டினாலும் பத்தினி : தன் கண் முன்னே போரில் ஆண்ட்டனி தோல்வி அடைந்து கொண்டிருந்த ஆண்ட்டனியை , யுத்த களத்தில் பார்த்து, திரும்பியவள், அவன் தோல்வி அடைந்து விட்டதாக தவறாக நினைத்த கிளியோபாட்ரா. தனக்கான முடிவை தேர்ந்தெடுத்திருந்தாள். அக்காலத்தில் எகிப்தில் ஆட்சியாளர்கள் தாங்கள் இறக்கும் முன்பே, தங்களது சமாதியை கட்டிவிடுவார்கள்.. அதாவது தங்களுக்கான பிரமிடு.. அதனுள் அரண்மனையில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வைத்தாள்.. அவற்றுக்கு தீ வைத்து விட்டு, தானும் அதற்குள்ளேயே உயிரை விடப் போவதாக அறிவித்தாள்.. விஷயம் அகஸ்டஸ் சீசருக்கு எட்டியது..
எங்கே தனது கனவை தவிடு பொடியாக்கி விடுவாளோ என்ற பயம் மனதைத் தாக்க, தோல்வியில் இருந்து மீண்டு கொண்டிருந்த ஆண்ட்டனியின் படைமீது ஆக்ரோஷமான தாக்குதல் நடத்த, போதிய படைபலம் இல்லாத ஆண்டனியால் தோல்வி அடைவது தவிர்க்க இயலாததாயிற்று..
ஆண்டனி தோல்வி அடைந்ததும், கிளியோபாட்ரா வை சந்திக்க அரண்மனைக்கு வந்தான்...இதே நேரத்தில் ஆக்டேவியனுக்கு அதிர்ச்சி கொடுக்க யோசித்த கிளியோபாட்ரா, தனது நினைவிடத்திற்கு தீ வைத்துக் கொண்டு இறந்து விட்டதாக ஒரு வதந்தியைப் பரப்ப, நடந்ததோ வேறு.. தனது ஆசைக்கிளி இறந்து விட்டதாக கேள்விப்பட்ட ஆண்டனி, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, கத்தியை தன் மார்பில் ஆழமாக இறக்கினான். கத்தி உடலை ஊடுருவிப் பாய, வலியால் அலறினான்.. காவலன் ஒருவன் ஓடி வந்து, கிளியோபாட்ரா உயிருடன் இருப்பதாக கூறவே, " ஏன்டி இப்படி என்னை வதைக்கிறாய்? " அலறியது அரண்மனை முழுவதும் எதிரொலித்தது. தனது உயிரை எப்படியாவது மீட்டெடுத்து மீண்டும் அவளுடன் வாழ வேண்டுமே ..என தவித்தான்...
ஆழமாக பாய்ந்திருந்த கத்தியை உருவி எடுக்க முடியாத நிலையில், எப்படியாவது சாவதற்கு முன் அவளைப் பார்த்து விட வேண்டும்..உயிரை தாங்கிப் பிடித்துக் கொண்டு, காவலர்கள் உதவியுடன் கிளியோபாட்ரா இருந்த கல்லறைக்கு சென்றான். தான் இந்த நிலையில் ஆண்டனியை சந்திப்போம் என எதிர்பார்க்காத கிளியோபாட்ரா உறைந்து போனாள்..சில வீரர்கள் உதவியுடன் அவனை , மூடியிருந்த கல்லறையின் உச்சிப் பகுதியை நீக்கி, பணிப்பெண்கள் உதவியுடன் உயரே தூக்கி, மீண்டும் உள்ளே இறக்கினாள். தனது மடியில் கிடத்திக் கொண்டு அலறினாள்..தோல்வியுற்ற பின் ஆண்டனி மீண்டும் அலெக்ஸாண்ட் ரியா திரும்புவான் என கனவிலும் நினைக்கவில்லை..
எப்படி வாழ வேண்டியவன்? தன்னால் இந்த நிலைக்கு வந்ததோடு, தனக்காக உயிரை விடத் துணிவான் என நினைத்து பார்க்கவில்லை..சீசரைப்போல இவனும் பக்கா ரோமானியனாக நடந்து கொள்வான் என்றே நினைத்திருந்தாள். இப்போது தன்னிலிருந்து அனைத்தும் சென்றுவிட்டதாக உணர்ந்தாள். " எனக்கு சிறிது ஒயின் வேண்டும்" ஆண்டனி அரற்றினான்... பணிப்பெண் எடுத்து வந்த ஒயினை சிறிது அருந்த அவனுடைய உயிர், கிளியோபாட்ரா வின் மடியிலேயே பிரிந்தது. " ஆக்டேவியசுடன் சமாதானமாகப் பேசி போரைத் தவிர்த்து விடு. என் இறப்புக்கு பின்னும் என் காதலி நீ சந்தோஷமாக வாழ வேண்டும்". அவனது கடைசி வார்த்தை இதுவே..
இதற்குள் அலெக்சாண்ட்ரியா முழுவதும் கைப்பற்றப்பட்டது.. இன்னும் ஒன்றே ஒன்று.. கிளியோபாட்ராவை சிறைபிடிக்க வேண்டும்.. வீரர்கள் கல்லறைக்குள் இறங்க இயலவில்லை..கல்லறை மூடப்பட்டிருந்தது.. அகஸ்டஸ் சீசர் இதில் தோற்க விரும்பவில்லை.. சற்று உயரத்தில் இருந்த சன்னலை உடைத்து, உள்ளே பாய்ந்து, குத்துவாளால் தற்கொலைக்கு முயன்றவளது , வாள் பிடுங்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு.. அவள் வாழ்நாளில் நினைக்காததெல்லாம் நடந்தது.
அரண்மனை கிளி: கிளியோபாட்ரா கைது செய்யப்பட்டு அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்தாள்.. ஆண்டனி சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டான். "ஆண்டனி என்னை மன்னித்துவிடு .. நான் அன்றே உன்னுடன் வந்திருப்பேன். என்ன செய்வது? இப்போது சிறையில் நான் நினைத்ததை செய்ய முடியாமல் காவல் வைக்கப் பட்டுள்ளேன்.." அரற்றிக் கொண்டு அழுதாள்.. உண்ணாமல், நீர் அருந்தாமல் அப்படியே சென்று விட வேண்டும்.. கழுதைப் பாலில் குளித்து, மின்னிய அவளது உடலில் கிழிந்த ஆடைகள்.வாடி வதங்கிய முகம்.
தன்னைக் கொன்று விடும்படி கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தாள்.. இப்படியே விட்டால் எதுவும் நல்லது நடக்காது..நேரே அவளிடம் சென்று '" நீ உணவு எடுத்துக் கொள்ளாவிட்டால் உனது குழந்தைகள் கொல்லப்படுவார்கள் ..எனது பேச்சை கேட்டால் உன்னையும் உன் குழந்தைகளையும் சிரியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கிறேன் " அகஸ்டஸ் உறுதி அளித்தார்.
இறுதிப் பயணம்: அகஸ்டஸ் கூறியதை ஏற்றுக் கொண்டாள்.. ஆனால் ஒரு முறை ஆண்டனியின் கல்லறைக்குள் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தாள்..ஆவன செய்யப்பட்டது. அழகிய ஆடைகளை அணிந்து, தன்னை அலங்கரித்து கொண்டு, தேவதை போல அலங்கரித்துக் கொண்டு, ஆண்டனியின் கல்லறைக்கு வந்து கதறி அழுதபடி, இறுதி மரியாதை செலுத்தினாள்.
தனது அறைக்கு திரும்பி பணிப்பெண்கள் இருவருடன், அறைக்கதவை சாத்தி, அகஸ்டசுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.." எனது உடலை ஆண்டனியின் கல்லறைக்கு அருகில் புதைக்கவும்.இதுவே எனது கடைசி விருப்பம்.". கிளியோபாட்ரா விடமிருந்து கடிதம் என்றதும் பதறிப் போய், கடிதத்தை பறித்து வாசிக்க, நடக்க போவதை அறிந்து கொண்டு, " யாரங்கே!! அவளை தடுத்து நிறுத்துங்கள்" அரண்மனை முழுதும் எதிரொலித்தது..
கிளியோபாட்ரா வின் அறை திறக்கப்பட்டது.. படுக்கையில் அவளது உடல்.. பணிப்பெண் ஒருத்தி அவளது தலையில் மலர்கிரீடம் வைத்து அலங்கரித்து கொண்டிருந்தாள்..மற்றொரு பணிப் பெண் உடல் கட்டிலின் அருகில் கீழே கிடந்தது. எப்படி நடந்தது இது? அதுவும் இத்தனை பாதுகாப்புக்கிடையே…அகஸ்டஸ் இடிந்து போனார்.
மர்மம் என்ன: கிளியோபாட்ராவின் அறையை சல்லடை போட்டு சலித்தார்கள்.. அவளது கைகளில் இரண்டு ரத்தப் புள்ளிகள் இருந்ததை அகஸ்டஸ் கண்டார்..ஏதும் புலப்படாத நிலையில். இருளான ஒரு பகுதியில் இருந்து, ஒரு சிறிய பாம்பு சன்னல் வழியாக வெளியேறிச் கொண்டிருந்தது..
பாம்பின் விஷம்.? .பாம்பு எப்படி கிளியோபாட்ரா வின் அறைக்குள் வந்தது? ….
சற்று நேரத்திற்கு முன்.. ..கிளியோபாட்ரா இருக்கும் பகுதிக்கு ஒரு பழக்கூடை வருகிறது. காவலர்கள் தடுத்து நிறுத்த " மகாராணிக்கு ஃபிக் பழம் மிகவும் பிடித்தது..அவருக்காக எடுத்துச் செல்கிறேன் " கூடை பரிசோதிக்கப்பட்டது..ஃபிக் பழங்கள். மேலே இலைகளால் மூடப்பட்டிருந்தது.. காவலர்கள் அனுமதி அளிக்க பழக்கூடை அறைக்குள் கொண்டு வரப்பட்டது.. பழங்களின் அடியில் ஒரு சிறிய பாம்பு சுருண்டு படுத்திருந்தது.
விஷப் பரீட்சை:
கிளியோபாட்ரா தனது அரண்மனையில் சில குறிப்பிட்ட சோதனைகளை செய்து வந்ததாக தெரிகிறது.. ஆப்பிரிக்க காடுகளில் அலையும் ஒருவகை சிறிய பாம்பு..அதிக விஷமுடையது. . அதன் விஷம் கடித்தவரின் உடலில் சென்ற அடுத்த சில நொடிகளில் உயிர் பிரிந்து விடும்.. கிளியோபாட்ரா, கைதிகளை இவ்வாறு பாம்பை கடிக்கச் செய்து, அடிக்கடி சோதனை செய்வதும், அந்த வழியாக இறந்தவர்களின் உடல்கள் வெளியே எடுத்துச் செல்லப்படுவதும்..நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது..
பரிசோதனையில் இறந்த உடல்கள்.. வலியில்லா மரணம்.. பாம்பின் விஷம் என்பதை கிளியோபாட்ரா நன்கு அறிந்தே இருந்தாள்..
பின் குறிப்பு: ஆண்டனி தற்கொலை செய்யவில்லை என்றும், ஆக்டேவியஸால் விலைக்கு வாங்கப்பட்ட எகிப்து மத குரு ஒருவர், ஆண்டனியை தந்திரமாக குத்திக் கொன்றதாகவும் கூறப்படுவதுண்டு. கிளியோபாட்ரா விஷம் தடவப்பட்ட தங்க ஊசியால் கையில் குத்திக் கொண்டு இறந்தாள் என்றும் கூறுகின்றனர்..