ஒரு குரு இருந்தார்.
ஒரு நாள் அவரை தேடி ஒருவன் வந்தான்.
ஐயா நான் ரொம்ப துன்பத்திலே இருக்கிறேன்.
அதிலிருந்து விடுதலையடைய ஆசைப் படுகிறேன்.
துன்பத்திலிருந்து நான் விடுதலை அடைந்து புத்தராக மாற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் என்றான்.
அவ்வளவுதான் உடனே அந்த குரு மற்ற சீடர்களைக் கூப்பிட்டார்.
உடனே இந்த ஆளை இங்கிருந்து விரட்டுங்கள் என்றார் .
எல்லோரும் சேர்ந்து அந்த ஆளை ஓட ஓட விரட்டி அடித்தார்கள்.
அவன் ஓடிப் போய் விட்டான்.
என்ன இது அவன் எதுவும் தவறாக கேட்டு விடவில்லையே ஒரு சாதாரண மனிதத் தன்மையுள்ள கேள்வியை உண்மையிலேயே ரொம்ப ஆர்வத்தோடு தான் கேட்டிருக்கிறான்.
எதற்காக இப்படி அவனை விரட்டி அடித்தார்கள்.
அநியாயம் என்றார் அங்கு இருந்த ஒருவர்.
அந்த குரு சொன்னார் அந்த ஆள் கேட்டது ரொம்ப முட்டாள்தனமானது. அதற்காகத்தான் அவனை விரட்டி அடித்தேன் என்றார்.
என்ன சொல்கிறீர்கள் என்று இழுத்தார் இவர்.
ஆமாம் அவன் ஏற்கனவே புத்தராகத்தான் இருக்கிறான்.
அதனால் அவன் புத்தராக மாற வேண்டும் என்று ஏதாவது முயற்சி செய்தால் அதை இழந்து விடுவான். நாங்கள் எதற்காக அவனை விரட்டினோம் என்பதை அவன் புரிந்து கொண்டால் அதன் பிறகு அவன் சகல முயற்சிகளையும் கைவிட்டு விடுவான்.
முயற்சி செய்து அடைவதற்கு அது ஒன்றும் உலகப் பொருள் அல்ல.
அவன் எப்படி இருக்கிறானோ அப்படி இருந்தால் போதும் அவ்வளவுதான் என்றார்.
புத்தரை யாரும் அடைய வேண்டியதில்லை. அவர்களுக்குள்ளேயே இருக்கிறார். எப்பவும் இருந்து கொண்டிருக்கிறார் .
அதுதான் உங்களுடைய இயற்கைத்தன்மை.
அதைப் பற்றி விசாரிக்கவும் வேண்டாம்.
அதை அடைவதற்கு முயற்சி செய்யவும் வேண்டாம்.
விரட்டியடித்த அந்த ஆள் இன்னொரு குருவிடம் போய் அவரிடம் நடந்த விபரத்தை சொன்னான்.
அதன் பிறகு அவரிடம் அதே கேள்வியைக் கேட்டான்.
நான் புத்தராக மாற ஆசைப்படுகிறேன் என்ன செய்யலாம் என்றார்.
அவரும் இவனை விரட்ட ஆரம்பித்துவிட்டார்.
அங்கே இருந்தும் ஓடினான்.
இவர்களுக்கு எதிராக உள்ள இன்னொரு குருவிடம் போனான்.
இதே கேள்வியைக் கேட்டான்.
அவரிடம் இருந்த வாளை எடுத்துக் கொண்டு இவனை வெட்ட வந்துவிட்டார்.
மறுபடியும் அங்கிருந்து தப்பித்து ஓடினான்.
இவனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இப்படி எல்லோரும் விரட்டுகிறார்கள்.
நாம் என்ன தப்பாக கேட்டுவிட்டோம் என்று யோசித்தான்.
அதன்பிறகு ஒருவரிடம் இதைப் பற்றி சொல்லி புலம்பினான்.
அவர் சொன்னார் நீ மறுபடியும் அந்த முதல் குருவிடம் போ.
அவர் ரொம்ப நல்லவர் பயப்படாமல் போ என்றார்.
இவனும் மறுபடியும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் போனான்.
எதற்காக திரும்பி வந்தாய் என்று கேட்டார் அந்த குரு.
இவன் மெதுவாக ஆரம்பித்தான்.
ஐயா நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை.
விரட்டியதோடு விட்டீர்கள்.
மற்றவர்கள் எல்லாம் என்னை கொலை செய்யவே வந்து விட்டார்கள்.
அதனால் உங்களிடமே திரும்பி வந்து விட்டேன் என்றான்.
இப்போது அந்த குரு சொன்னார் தம்பி இது ஏற்கனவே எங்களுக்குள்ளே இருக்கிற ஒரு ஒப்பந்தம்.
நாங்கள் மூன்றுபேரும் பேசி வைத்துக்கொண்டு தான் இதுமாதிரி உன்னை விரட்டினோம்.
சரி அது போகட்டும் .
இனிமேல் நீ இங்கேயே இரு. ஆனால் அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்காதே.
ஏனென்றால் நீ எப்பவுமே அதுவாகத் தான் இருக்கிறாய்.
நீ புத்தர் மாதிரி வாழ்ந்தால் போதும் புத்தர் மாதிரி ஆக வேண்டும் என்று நினைக்காதே என்றார்.
அதன் பிறகு அந்த மனிதன் ஞான நிலையை அடைந்தான்.
புத்தத்தன்மை என்பதே நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான்.
நீங்கள் இன்னொருவராக மாறுவது புத்ததன்மை இல்லை.
நீங்கள் உங்கள் தன்மையில் வாழும் போது எல்லாம் உங்களை வந்து சேரும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் அந்த வெறுமையை உங்களால் பிடிக்க முடியும் என்கிறார் ஓஷோ.
இன்றைக்கு பல சந்தர்ப்பங்களில் நாம் நாமாக இருப்பதில்லை அதுதான் வேதனை