Breaking News :

Wednesday, October 16
.

பிறப்பும் இறப்பும் இயற்கை ஏன்?


ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது.  ஒரே ஒரு குழந்தை.

கணவனுடன் உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் குழந்தை தடுத்துவிட்டது. அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும்.
பின்னர் அந்த சின்ன குழந்தையும் கொஞ்ச நாளில் இறந்து விடுகிறது. இவளுக்கு பாதிப்பு அதிகமாகிவிட்டது. பைத்தியமாகவே மாறிவிட்டாள்.

இந்தக் குழந்தையை யாராவது உயிர்ப்பித்துக் தரமுடியுமா? என்று ஊரெல்லாம் அலைய தொடங்கிவிட்டாள். அப்போது அந்த வழியாக புத்தர் வந்தார்.  அவருக்கு முன்னால் தன்னுடைய குழந்தையை கிடத்தி இந்தக் குழந்தையை உயிர்ப்பித்து தாருங்கள் என்று கேட்டாள்.
உயிர்ப்பித்து தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்றார்.

என்ன என்று கேட்டாள் அவள்.

நீ இந்த ஊருக்குள் சென்று யார் வீட்டில் இறப்பு நிகழவில்லையோ அவர் வீட்டில் ஒருபிடி கடுகு வாங்கிக்கொண்டு வா நான் உனது குழந்தையை உயிர்ப்பித்து தருகிறேன் என்றார்.

அது ஒரு சிறிய கிராமம்.

அங்கு ஒரு வீட்டிற்குச் சென்று கடுகு கேட்டாள் அவள்.  அந்த வீட்டாரோ உன் குழந்தையை புத்தர் உயிர்ப்பித்து தருவார் என்றால் ஒரு பிடி கடுகு என்ன ஒரு மாட்டு வண்டி கடுகு தருகிறோம். ஆனால் நிபந்தனை தடுக்கிறது என்றனர்.

இன்னொரு வீட்டிற்கு சென்று கேட்டாள் அங்கேயும் அதே நிலைதான். அப்போதுதான் அவளுக்கு புத்தருடைய நிபந்தனையின் அர்த்தம் புரிந்தது இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

மாலையில் வரும்போது புன்னகையுடன் அவள் புத்தரிடம் திரும்பி வந்தாள். காலையில் அழுதவண்ணம் வந்தவள் இப்போது சிரித்தபடி இருந்தாள். நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள்.

பிறக்கும் யாவரும் இறக்கத்தான் வேண்டும்.
இந்த கிராமத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே இறப்பு நிகழாத குடும்பமே கிடையாது.

அதனால் நான் எனது மகனை உயிர்ப்பித்து கேட்கப்போவதில்லை.
அப்படி உயிர்ப்பித்தால் இன்னும் சில தினங்களிலேயோ அல்லது சில வருடங்கள் கழித்து எப்படியும் அவன் இறந்து விடுவான். பிறக்கின்ற எல்லோரும் இறந்துதான் ஆகவேண்டும் என்ற விடயம் எனக்கு இப்போது புரிந்துவிட்டது என்றாள் அந்தப் பெண்.

ஒரு குழந்தை பிறக்கையில் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம், அதை எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல் இறப்பையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

இழந்ததை நினைத்து வருந்துவதை விட எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவில்லாததை நாம் தேட வேண்டும் என்கிறார் புத்தர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.