Breaking News :

Wednesday, October 16
.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது பாஞ்சாலி சிரித்தது?


பிதாமகர் பீஷ்மர், அம்புப் படுக்கையில் படுத்தவாறே புண்ணிய காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். பீஷ்மர் மரணம் அடைவதற்கு முன்பாக அவரிடமிருந்து நீதி, நேர்மை , அரசியல் , தர்மம் ஆகியவற்றை கேட்டு தெரிந்துகொள்ள தர்மர் நினைத்தார், பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியுடன் பிதாமகர் பீஷ்மரிடம் சென்றனர். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி ,நேர்மை, அரசியல், தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டினர். பாஞ்சாலி மட்டும் பலமாக சிரித்தார். அதில் கேலி கலந்திருப்பதை தர்மர் உணர்ந்தார். தர்மர்,” நம் தந்தைக்கு இணையான பிதாமகரை பார்த்து ஏன் சிரிக்கிறாய்?” என்று கடுமையாக கேட்டார்

“துரியோதனன் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்த பொழுது, கண்ணன் மட்டும் வந்து என்னை காத்திருக்கா விட்டால் என் கதி என்னவாயிருக்கும்?. தர்மம் அறிந்த பீஷ்மர் அச்சபையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்படிபட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தை பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது" என்று பாஞ்சாலி கூறினார். பாண்டவர்கள் அமைதி காத்தனர்.

அப்பொழுது பீஷ்மர் பேசினார், "பாஞ்சாலி கூறுவது முற்றிலும் உண்மை. பாஞ்சாலியின் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கும் உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களுக்கு வயிறு நிறைய உபசரிப்பான். ஆனால், துரியோதனன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டது அல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு அவர்களை தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான்.

அன்னம் உண்டவர்கள் “செஞ்சோற்றுக் கடன் தீர்க்க” வேறு வழியில்லாமல் அவன் சொற்படி நடப்பார்கள். இதற்கு சல்லியன் ஒரு உதாரணம், ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்து விடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால், எனக்குள் அவனது தீய குணம் குடிகொண்டு விட்டது. ஆதலால்தான், பாஞ்சாலியை மானபங்கம் செய்த பொழுது எதுவும் பேச இயலாது வாயடைத்து அமர்ந்திருந்தேன்.

ஆனால், இப்பொழுது அர்ஜுனன் அமர்த்தி கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பின் எனது உடலில் இருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறிவிட்டது. அத்தோடு தீயசக்திகளும் வெளியேறிவிட்டன. இப்பொழுது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும் தான் உள்ளது. எனவே நான் அரசியல் தர்மத்தை பற்றிப் பேச தகுதியுள்ளவன், கேளுங்கள்" என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசித்தார். அதனால் தான் அந்தக் காலத்தில் விவரம் அறிந்த சான்றோர், சாதுக்கள், பண்டிதர்கள் வெளியில் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.