Breaking News :

Sunday, September 15
.

கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது?


உப்பின் சிறப்பு பற்றி யாரும் நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உப்பில்லாத உணவை நம் வாழ்வில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த உப்பு கடலில் இருந்து கிடைக்கிறது என்று நம்  எல்லாருக்கும் தெரியும். சரி. கடல் நீர் ஏன் இவ்வளவு உப்பாக அதாவது உவர்ப்புத் தன்மையுடன் உள்ளது?

 நிலத்தில் விழும் மழை நீரில், வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் (Carbon dioxide) சிறிதளவு கலக்கிறது. இதனால் மழை நீர், சிறிதளவு கார்பானிக் அமிலத் (Carbonic Acid) தன்மையை அடைகிறது. சிறிதளவு அமிலத் தன்மை உடைய மழை நீர் பாறைகளின் மீது கடந்து வரும் போது, பாறைகளை அரிக்கிறது.

இந்நிகழ்வின் போது ஏற்படும் வேதி மாற்றத்தால் (Chemical Reaction), மின்னூட்டம் பெற்ற அணுத்துகள்கள் அதாவது அயனிகள் (Electrically charged atomic particles or Ions) உருவாகின்றன. இந்த அயனிகள் மழை வெள்ளத்தில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, இறுதியில் கடலில் கலக்கின்றன. இந்த அயனிகளில் ஒரு பகுதியை கடலில் உள்ள உயிரினங்கள் பயன்படுத்திக் கொண்டாலும், பெரும்பான்மையான பகுதி கடலிலேயே தங்கி விடுகிறது.

இந்த அயனிகளில் 90% (90 விழுக்காடு) சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றை உள்ளடக்கியது. சோடியம் மற்றும் குளோரைடு உப்புத் தன்மை உடையது.பல கோடி ஆண்டுகளாக, இவ்வாறு, ஆறுகளில் இருந்து, கடலுக்கு அடித்து வரப்படும் அயனிகள், கடலிலேயே தங்கி விடுவதால், கடல் நீர் உப்பாக இருக்கிறது. மேலும், கடல் நீர் ஆவியாகும் போதும், கடலில் உள்ள உப்பு வெளியேறாமல் கடலில் தங்கி விடுகிறது.

ஏன் உப்பை எடுத்துச் செல்லும் ஆற்று நீரில் உப்பு இல்லை, ஆனால் கடல் நீரில் மட்டும் உப்பு உள்ளது?

ஆற்று வெள்ளம் கடலுக்கு உப்பை அடித்துக் கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. அதனால் கடல் நீர் உப்பாக உள்ளது என்பது பற்றி இதற்கு முன் ஏன்? ஏப்படி?  பகுதியில் பார்த்தோம். சரி. உப்பைக் கொண்டு செல்லும் ஆற்று நீர் ஏன் உப்பாக இருப்பதில்லை? கடல் நீர் மட்டும் ஏன் உப்பாக உள்ளது?

ஆற்றில் நீர் நிரந்தரமாக தேக்கி வைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு முறை மழை வெள்ளத்துடன் கலந்து வரும் உப்புகள் மற்றும் தாதுக்கள் (Salts and Minerals), ஆற்றில் இருந்து மொத்தமாக கடலுக்கு புது வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனால் ஆற்றில் உப்பு தங்குவதில்லை. அதனால் தான் ஆற்று நீர் தெளிவாக உப்பின்றி தூய்மையாக இருக்கிறது.

வேகமாக செல்லும் ஆற்று நீரின் அளவு அதிகமாக இருப்பதாலும், அதில் கரைந்துள்ள உப்பின் அளவு நீரின் அளவை ஒப்பிடும்போது, மிகக் குறைவான அளவாக இருப்பதாலும், ஆற்று நீரை எடுத்து நாம் சுவைத்தால் உவர்ப்பாக இருக்காது.

ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக கடலில் சென்று, தொடர்ச்சியாக, நீண்ட காலமாக சேமித்து வைக்கப்படும் போது கடல் நீரின், உப்புத் தன்மை அதிகரிக்கிறது. ஆகவே, கடல் நீர் உப்பை நிரந்தரமாகத் தேக்கி வைக்கும் இறுதி இடமாக இருப்பதாலும், கடலில் நீர் வெளியேறிச் செல்லும் போக்கி (Outlet) இல்லாததாலும், கடல் நீர் மட்டும் என்றும் உப்பாக இருக்கிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.