கணவன் பிரிந்து போனதில் இருந்து ராகினி, தனது தாயுடன் வசித்து வந்திருந்தாள். அவள் அழகானவள் என்று சொல்லித்தான் அவளை உருகி உருகிக் கட்டாயப்படுத்திக் காதலிக்க வைத்தான் நிமலன்.
ஆனால், திருமணமாகி ஒருவருடத்திலேயே அவளை விட்டுப் பிரிந்தும் சென்றிருந்தான்.
ஆரம்பத்தில் காதலிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்த ராகினியும், அவனின் தொல்லையால் ஏற்பட்ட அன்பு காதலாகி, அவனில் உயிரையே வைத்திருக்கும் அளவிற்கு அவனை நேசிக்கத் தொடங்கியிருந்தாள்.
இப்படிச் சென்ற காதல், ஒரு கட்டத்தில் நிமலனின் வீட்டினரை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்டார்கள். நிமலனுடனான வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், போகப் போக அவள் மேல் சந்தேகப் படத் தொடங்கினான் அவன்.
அவனோடு எங்கு சென்றாலும் ராகினியின் அழகை எல்லோரும் பாராட்டும் போதும், அவளின் அழகைச் சில உறவினர் ஆண்கள் இயல்பாக வர்ணிக்கும் போதும் , நிமலனின் கறுப்பு நிறத்தைச் சுட்டிக் காட்டி, அவளோடு ஒப்பிட்டுப் பேசியபோது , நிமலனின் கோபம் தலைக் கேறியிருந்தது.
பொறுமையாக இருந்தவன், வீட்டிற்கு வந்தவுடன் அவளைக் கேள்வி கேட்டு அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினான்.
ஆரம்பத்தில் ஒரு அடியோடு தொடங்கிய பிரச்சனை, போகப் போக அவளை அடித்து உதைத்துக் காயப்படுத்தும் அளவுக்குச் சென்றது.
இப்போதெல்லாம் ராகினியால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. யாரோடும் பேசக் கூட இயலவில்லை. உறவினர் ஆண்கள் வீட்டிற்கு வந்தாலும் சந்தேகத்துடன் அவளைப் பார்க்கத் தொடங்கியிருந்தான் நிமலன்.
ஒரு கட்டத்தில் எந்த ஆண்களையும் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அவள் மனதால் நொந்து போயிருந்தாள்.
அவளின் அழகு ஒருபுறம் நிமலனின் கண்ணை உறுத்தி,எங்கே அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ? என்று அவனாகவே சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவளைத் துன்புறுத்தி வந்த வேளையில் , ஒருநாள் அவளின் அழகினால்தான், தான் நிம்மதியை இழக்கிறேன் என்று கூறி, அவளின் முகத்தில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி விட்டுத் தப்பி ஓடிப் போயிருந்தான்.
அந்த வேளை சற்றுத் திரும்பியதால், முகம் பாதிப் பகுதி எரிந்த நிலையில் துடித்துப் போன ராகினி, வலியில் கத்தியவாறு, அங்குமிங்குமாக ஓடத் தொடங்கினாள்.
அதற்குள் அயலவர்கள் வந்து சேர்ந்து அவளை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்.
அதன்பின்னர் காயங்கள் ஆறித் தாயாரோடு வாழத் தொடங்கியிருந்தாள் ராகினி.
பாதி எரிந்த முகத்துடன் பல மாதங்களாக வெளியிலேயே போகாமல் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தாள் ராகினி.
ஒருநாள் தாயாரும் இறந்து போக, தனித்துப் போனாள் ராகினி. அவ்வப்போது அவளுக்கு காய்கறிகளை வாங்கி வந்து கொடுத்துக் கொண்டிருந்த உறவினர் மற்றும் நண்பர்களை அவளோடு இணைத்து மறுபடியும் ஊர்மக்கள் பேசத் தொடங்கியபோது, மனமுடைந்து போனாள் ராகினி.
அந்த நிலையில்தான், இனித் தானே தனது வேலைகளைச் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு , தலையில் முக்காடு ஒன்றைப் போட்டுத் தனது ஒருபக்க முகத்தை மறைத்துக் கொண்ட ராகினி, வேலை ஒன்றில் இணைந்து கொண்டதோடு, வரும் வழியில் சமையலுக்குத் தேவையான காய்கறிகளையும் வாங்கி வந்தாள்.
இந் நிலையில்தான் ஒன்று விட்ட சகோதரனின் திருமணம் நடைபெற உள்ளதாக அவளிடம் சொல்லப்பட்ட நிலையில், தனக்கென ஒரு தங்கச் சங்கிலி வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு, வேலை முடித்து வரும் வழியில் , தங்க நகைக் கடைக்குள் நுழைந்தாள் ராகினி.
அங்கு தனக்குப் பிடித்த நகையை நீண்ட நேரமாகத் தேடியும், எதுவுமே அவளிற்குப் பிடித்தது போல் இல்லாததால், அடுத்த கடைக்குச் செல்லலாம் என முடிவெடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் அவள்.
ராகினி கடைக்கு வெளியே வந்தபோது, அப்போது கடையில் இருந்து ஓடி வந்த ஒருவன், அவளின் முன்வந்து அவளை உள்ளே வந்து விட்டுச் செல்லுமாறு அழைத்தபோது, "தனக்குப் பிடித்த டிசைனில் நகை இருக்கிறது போல...?" என்று எண்ணிக் கொண்டவாறு, மறுபடியும் அதே கடைக்குள் நுழைந்தாள் ராகினி.
ஆனால் அவள் உள்ளே சென்றதும், அவளைச் சுற்றி வளைத்த அங்கு வேலை செய்யும் பெண்கள் இருவர், அவளைப் பரிசோதனை செய்ய வேண்டு்ம் என்று கேட்டார்கள்.
"எதற்காக என்னைப் பரிசோதிக்க வேண்டும்?" என்று ராகினி கேட்டபோது, தங்க நகை ஒன்றைக் காணவில்லை என்றும் அதனை அவள்தான் எடுத்திருப்பதாக அவர்கள் சொன்னபோது, அதிர்ந்து போனாள் ராகினி.
தான் எடுக்கவில்லை என்று அவள் எவ்வளவோ கூறியும், அவள்தான் முகத்தை மறைத்து இருப்பதாகவும் அவளில்தான் சந்தேகம் இருப்பதாக அங்கு இருப்பவர்களும் கூறியபோது, அழுகையுடன் மறுத்தாள் ராகினி.
கண்காணிப்புக் கருவியின்(கேமரா) உதவியுடன் பார்த்தால் உண்மை தெரியும் என்று ராகினி கூறியபோது, அது முதலாளியின் அறையில்தான் உள்ளது. ஆனால் அவர் தற்போது இல்லாத காரணத்தினால் அதனை இப்போது பார்க்க முடியாது என்று அவர்கள் விளக்கம் கொடுத்தபோது, மறுபடியும் தான் எதனையும் திருடவில்லை என்று கண்ணீருடன் வாதிட்டாள் ராகினி.
அப்போது அங்கு நகை வாங்க வந்திருந்த ஒரு பெண்ணும், இவள் எடுப்பதைத், தான் பார்த்ததாகச் சொல்ல, ராகினியின் கைப்பையைப் பறித்துப் பரிசோதனை செய்தனர் அவர்கள்.
அதில் எதுவும் இல்லாததால், அவளை உள்ளே அழைத்துச் சென்ற இரு பெண்கள், அவளை நிர்வாணமாக்கிப் பரிசோதனை செய்தனர் .
அதற்கு முதலில் ராகினி எதிர்ப்புத் தெரிவித்தாலும், தன்னை நிரூபிக்க அது ஒரு வழிதான் இருப்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாள்.
ஆனால் அந்தப் பெண்கள் பரிசோதனை என்ற பெயரில் அவளைத் தொட்டுச் சீண்டிச் சிரித்தபோது, மனம் வெறுத்துப் போனாள் ராகினி.
பின்னர் அவள் வெளியில் வந்தபோது, வெளியில் போகும் போது அவள் தங்க நகையை எறிந்து விட்டதாகவும், அதனை எடுத்துத் தருமாறும் அவர்கள் வற்புறுத்திய போது, விரக்தியின் உச்சத்திற்கே சென்றாள் ராகினி.
பின்னர் அவளை விடுவித்த போது, அவளைத் "திருடி" என்ற பட்டப் பெயர் சொல்லி அவர்கள் கலாய்த்தார்கள்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ராகினி, கண்ணீர் விட்டவாறே வீடு வந்து சேர்ந்தாள்.
அதேசமயம் கடைக்கு வந்திருந்த முதலாளியிடம் நடந்த சம்பவங்களை ஊழியர்கள் கூறியபோது, உடனடியாகத் தனது அறைக்குள் சென்று பதிவு செய்யப்பட்ட கண்காணிப்புக் கருவிப் பதிவுகளை ஆராய்ந்தார் அவர்.
அப்போது, ராகினி தங்க நகைகளைத் திருடவில்லை என்பதையும், அவள் மேல் குற்றஞ் சாட்டிய அந்தப் பெண் ஒருத்தி தனது தலைக் கொண்டையில் தங்கச் சங்கிலியை ஒளித்து வைப்பதையும் அவதானித்தார் அவர்.
அதேநேரம் ராகினியைத் தனது ஊழியர்கள் நடத்திய விதத்தையும் அவதானித்த அவர், அவளைக் கஷ்டப்படுத்தியதற்காக அவளிடம் நேரில் சென்று மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.
அவள் பட்ட துன்பத்துக்கும், தனது ஊழியர்கள் அவளை அவமானப்படுத்தியதற்கும் பிராய்ச் சித்தமாக, அவளுக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசளிக்க வேண்டும் என்று எண்ணிக் கொணடு கீழே வந்தார் அவர்.
கீழே வந்தவர், தனது ஊழியர்களிடம் தனது கோபத்தைக் காட்டி அவர்களைக் கண்டித்தார். தவறு செய்யாதவளைத் தண்டித்துத் திருடியவளைத் தப்பிக்க விட்டுவிட்டதாக அவர்களைத் திட்டித் தீர்த்தார்.
தனக்கு ராகினியைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்றும், பாதி எரிந்த முகத்தோடு அவள் பட்ட துயரங்களும் தெரியும் என்று கூறியவர், வாடிக்கையாளரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வகுப்பும் எடுத்தார்.
பின்னர் ஒரு தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு ராகினியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார் அவர் .
அதேசமயம் தனது அழகினால் சந்தேகப்பட்டுத் தனது முகத்தை அழகற்றவனாக்கித் துன்பத்தைக் கணவன் தந்து விட்டுப் போன நிலையில், இப்போது திருடிப் பட்டமும் தந்தது ராகினியை நிலை குலைய வைத்திருந்தது.
ஏற்கனவே வாழவே பிடிக்காத நிலையில் இருந்த ராகினிக்கு, இன்றைய சம்பவம், இனி வாழவே கூடாது என்ற முடிவை எடுக்க வைத்தது.
"எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல...!" என்று எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டி இறந்து போயிருந்தாள் ராகினி.
நகைக் கடை முதலாளி அவளின் வீட்டிற்கு வந்தபோது, அவள் இந்தப் பொல்லாத உலகத்தை விட்டே நீங்கியிருந்தாள்.......!
கதை முற்றும்....!
ராகினியின் முடிவு தவறானதுதான் என்றாலும் அவள் அனுபவித்த வேதனை அவளுக்கு மட்டுமே தெரியும்.
அவள் இன்னும் வாழ்ந்திருக்கலாம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், அவள் இந்த நிலைக்குப் போகக் காரணமான காரணங்களில்தான் பிழை உள்ளது.
ஒரு பெண் கணவன் இன்றித் தனியே வாழ்வதென்பது முள்ளின் மேல் நடப்பது போன்றதாகி விட்டது. அதற்குக் காரணம், எமது குமுகாயமே!( சமுதாயம்)
ஒரு பெண்ணைத் தனியே வாழ விடாமல், அவளின் கற்பைப் பரிசோதித்துப் பார்க்கவே குமுகாயம் விரும்புகின்றது.
அவள், தான் விரும்பியபடி எதையும் சுதந்திரமாகச் செய்ய விடுவதில்லை. யாருடனும் பேசிடவும் அவளால் முடியவில்லை.
ஒரு கணவன் இல்லாத பெண், அடங்கியே இருக்க வேண்டும் என்றே குமுகாயம் விரும்புகின்றது. அவளுக்கான விருப்பு வெறுப்புகளை அவளால் தீர்மானிக்க முடியாமல் புறணி கூறுகின்றது.
இனியாவது அவர்களின் மனங்களை வேதனைப் படுத்தாமல், அவர்களின் மனதை விரக்தியுறச் செய்யாமல், அவர்களையும் அரவணைத்துச் செல்லுங்கள். அவர்களின் உணர்வுகளையும் மதியுங்கள்.
பெண்ணுக்குப் பெண்தான் அதிகமான இடங்களில் எதிரியாக உள்ளாள். அதனைத் தயவு செய்து தவிர்க்கலாமே!
நன்றி: வசந்தமுடன் வசந்தன்