Breaking News :

Friday, November 08
.

அருள்மிகு வெற்றிவேல் முருகன் கோயில், கோத்தகிரி, நீலகிரி


இத்தலம் சோமாஸ் கந்த சொரூபத்தில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் பல சிறப்புகளைத் தனக்கென கொண்டு உள்ளது. பொதுவாக முருகன் தண்டாயுதத்துடன் நிற்பது போல் தான் சிலை வடிக்கப்பட்டிருக்கும். இங்கு மாறாக முருகன் வேலுடன் இருப்பதைப் போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது அபூர்வமானது.வேல் என்பது ஞானம், ஞானமாகிய வேல் எல்லாவற்றையும் வெல்கின்றது. எனவே அது வெற்றிவேல், அவ்வேலை தாங்கிய வெற்றிவேல் முருகனை இடையறாது வணங்குவோர்க்கு ஞானம் பெருகும். வினைகள் பட்டொழியும். இதைத் தான் வேலூண்டு வினையில்லை என்பர்.

 

 இங்கு ஞான பண்டிதனாகிய முருகப்பெருமான் வேலை விடாது தாங்கியுள்ளார். ஞான சக்தியாக விளங்குவதால் இத்தலம் சக்திமலை எனப் பெயர் பெற்றது. இங்கு துதித்து தியானிப்பவர்களுக்கு மனத் தெளிவு பிறக்கிறது.பள்ளி செல்லும் குழந்தைகள் இத்தலத்திற்கு வந்து துதித்து தியானத்தில் ஈடுபடுகின்றனர். மன அமைதிபெறுவதால் படிப்பில் முழு கவனம் செலுத்தி நன்கு கற்றிட ஏதுவாகிறது.

 

ஒருமுறை வாரியார் சுவாமிகள் இக்கோவிலுக்கு விஜயம் செய்தார். அச்சமயத்தில் கருவறையில் முருகன் சிலை மட்டுமே இருந்தது. வேறு மண்டபங்களோ அல்லது பிற சந்நதிகளோ இல்லை. வாரியார் சுவாமிகள் வெளியூர் செல்லும் போது தினமும் தான் பூஜிக்கும் முருகனை ஒரு பெட்டியில் வைத்து தன்னுடன் எடுத்துச் செல்வார். தங்கும் இடங்களில் தினசரி அம்முருகனுக்கு அபிஷேகம் ஆராதனைகளைச் செய்வது வழக்கம்.

 

 அந்த முருகனை இக்கோவிலில் வைத்து பூஜித்து வழிபட்டார். வெற்றிவேல் முருகன் வாரியார் சுவாமிகளை ஆட்கொண்டார். மனமுருகி தொழுதபின் இக்கோவில் சான்னித்யம் உள்ள தலம். நிச்சயம் பெரிய கோவிலாக உருவாகும். தங்கத் தேர் ஓடும் அளவிற்கு முன்னேற்றம் அடையும் என வாழ்த்தினார். சுவாமிகள் இன்று நம்மிடையே இல்லை. அவர் வாக்கு பொய்க்கவில்லை. அவர் வாழ்த்திய படியே வெற்றிவேல் முருகன் கோவில் சிறப்புடன் விளங்கி, தைப்பூச திருவிழாவின் போது மரத்திலான தேர் ஓடுகிறது.இத்தலம் மலைப்பிரதேசத்தில் உள்ளதால் நம் நாட்டவர் கோடை விடுமுறை சமயத்தில் மட்டுமே பெருந்திரளாக வருவர். 

 

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள், ஒருமுறை இத்தலத்திற்கு வந்தால், தொடர்ந்து கோத்தகிரிக்கு வரும் போதெல்லாம் வரத்தவறுவதில்லை. காரணம் இத்தலத்தில் வியபிக்கும் தெய்வீக அதிர்வுகளும் மன அமைதியும் கிடைக்கும். இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரும் இங்கு வந்து முருகனைத் துதித்து, நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்ந்து மன அமைதியுடன் திரும்புகின்றனர். வெளிநாட்டவர் கோடை காலத்தில் மட்டுமல்லாது வருட முழுவதும் வருகின்றனர்.

சிறப்பம்சங்கள் : மூலவர் இடது பாகத்தில் மயில் பீலி இருப்பதும் அபூர்வமாகக் காணப்படுவதாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.