Breaking News :

Wednesday, November 06
.

கண்பார்வை பிரச்னை போக்கும் வெள்ளீஸ்வரர் கோவில், மாங்காடு


திருமால் வாமன அவதாரத்தின் போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார்.

அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் “தானம் கொடுக்காதே” என்று கூறுகிறார்.

வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார்.

வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையைஇழந்துவிட்டது.

தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதையாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது. பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு திருமால் “இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.

நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன்விழிக்கு பார்வை கிடைக்கும்” என்று கூறினார். பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிரதீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார்.

இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.

தேவியின் திருக்கரம் பற்றி அழைத்துவர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார். தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன.
சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார்.

இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடுந்தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவனாவார்.

சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார்.

“உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது” எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு
அமர்ந்து விட்டார்.

சுக்கிரமுனிவர் தாம் தவம் செய்த வெள்ளீஸ்வரராகிய லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை செய்து வந்தார். மாங்காட்டின் நடுவே பிலத்தில் கன்னிப்பெண் கடுந்தவம் செய்வதை அறிந்து, அவள் இறைவியே என்பதை உணர்ந்து அம்மையின் அருகில் சென்று வணங்கினார்.

இறைவன் தனக்கு காட்சி கொடுத்த வரலாற்றையும் தன்பெயர் தாங்கி வீற்றிருப்பதையும் சிவனின் கருணைப் பொழிவையும் எடுத்துரைத்து, வெள்ளீஸ்வரரை சென்று தரிசனம் செய்து பின்னர் இறைவன் கட்டளைப்படி காஞ்சி மாநகர் சென்று திருமணம் செய்து கொண்டாள்
ஈசன் சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒருகண்பார்வை மாறுகண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள்.

சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு. எனவே அவருக்கு அருள் புரிந்ததையட்டி ‘வெள்ளீசுவரர்’ என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம். அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு. அதையட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் ‘பார்கவேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.