Breaking News :

Wednesday, October 16
.

'என்னை வைகுண்டத்துக்கு அழைச்சுக்கோ பகவானே'!


'பதம் அநுத்தமம்’ என்றொரு சொல் உண்டு. பதம் என்றால் இடம்; அநுத்தமம் என்றால், அதை விட வேறில்லை என்று அர்த்தம். அதாவது, நாம் அடைக்கலம் அடைவதற்கு பரந்தாமன் குடிகொண்டிருக்கிற வைகுண்டத்தைவிட ஆகச் சிறந்த இடம் வேறில்லை என்று பொருள்!

நிறைவில் இறைவனிடம் அப்படித்தான் வேண்டுகிறோம். ஆனால், ஆரம்பத்தில்... பகவானின் திருமேனியில் சிலிர்த்துப் போகிறோம்; அப்பேர்ப்பட்ட பொன்னான திருமேனி உடையவன் ஸ்ரீபகவான். அதனால்தான் அவனுக்கு 'ஸ்வர்ண வர்ணஹா’ எனும் திருநாமம் அமைந்தது.

'என்ன இது குழப்பம்! கண்ணபிரான் நீலமேக சியாமளன் ஆயிற்றே... அவனுடைய நிறம் கறுப்பும் நீலமும் கலந்தது அல்லவா! அப்படியிருக்க, ஸ்வர்ண வர்ணம் என்று சொல்லி அதைக் கொண்டே திருநாமம் சூட்டியிருக்கிறார்களே..?!' என்று குழப்பம் அடைகிறீர்களா?

ஸ்வர்ணம் என்றால் பொன்; ஸ்வர்ண வர்ணம் என்றால் பொன்னின் நிறம் என்று அர்த்தம். ஆனால், கண்ணபிரான் நீல வண்ணம் கொண்டவன்தான். ஆனால், அவன் திருமேனி எந்த நிறத்தில் இருந்தால் என்ன... அவன் பொன்னின் நிறத்தைப் போல ஜொலிஜொலிக்கிறான்; தங்க நிறத்தில் தகதகக்கிறான். அதாவது, தங்க நிறத்தைப்போல் ஒளி கொண்டு திகழ்கிறான் என்று அர்த்தம்.

'சரி... கண்களும் தலைமுடியும் கறுப்பு நிறத்தில்தானே இருக்கும்? அதுவுமா தங்க நிறத்தில் காட்சி தந்தது?!' என்கிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில், தலைமுடியை 'அப்படிப் பண்ணிக்கிறேன்... இப்படி செஞ்சுக்கறேன்’ என்கிறார்கள். 'ப்ளீச்' பண்ணிக்கொண்டு, செம்பட்டை நிறத்தில் முடியை மாற்றிக்  கொள்கிறார்கள். அப்படி முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்காக ஏகப்பட்ட செலவுகளைச் செய்கிறார்கள்.

ஆனால், கருமை நிறக் கண்ணனான பரமாத்மாவின் தலைமுடியும் கண்களும் கறுப்பு நிறமாகத்தான் தெரிந்தன. அதேநேரம், கண்ணபிரானின் மேனியெங்கும் ஒருவித ஒளி படர்ந்து, பரவியிருந்தது. கறுப்பு நிறத்தில்கூட, தங்க நிற ஒளி பிரகாசமாக ஜொலித்தபடி காட்சி தந்ததாம்!

இன்னொரு விஷயம்... சாஸ்திரப்படி மீசை வைத்துக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால், ஆயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் மீசை வைத்திருந்தானாம் ஸ்ரீகண்ணபிரான். 108 திவ்விய தேசங்களில், எத்தனையோ திருக்கோலங்களில் பகவான் திருக்காட்சி தந்தாலும், பெரிய மீசையுடன் ஸ்ரீவேங்கடகிருஷ்ணனாக, ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளாகக் காட்சி தருவது திருவல்லிக்கேணி திருத்தலத்தில்தான்!

சென்னை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதியின் திவ்வியமான மேனியைத் தரிசித்தால், அவன் ஸ்வர்ண வர்ணன் என்பதை அறிந்து சிலிர்ப்பீர்கள். 'பரஞ்ஜோதி’ அல்லவா பரம்பொருள்!

அதேபோல், 'வீரஹ’ எனும் திருநாமமும் அவனுக்கு உண்டு.  வீரமானவன் என்று அர்த்தம்.

அந்த வீரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் செயல் மூலமாகவே உணர்த்தியிருக்கிறான்.

போஜனப் பாத்திரத்தில் மிச்சம் வைக்கவேண்டும்; தீர்த்தப் பாத்திரத்தில் மிச்சம் வைக்கக்கூடாது என்பார்கள். அதாவது, சாப்பிடுகிற இலையில் மிச்சம் வைத்தால், அவற்றை நாயோ பூனையோ சாப்பிடும். ஆகவே, மீதம் வைக்க வேண்டும். உணவு முடிந்ததும் பக்கத்தில் வைத்திருக்கிற சொம்புத் தண்ணீரை மீதம் வைக்காமல் குடித்தால்தான், அந்தத் தண்ணீரானது உணவைக் கரைக்கவும் செரிக்கவும் வைப்பதற்கு பேருதவி செய்யும்!

அதேபோல், மிச்சம் வைக்கக்கூடாத முக்கியமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா? சத்ருக்கள் எனப்படும் எதிரிகளை ஒருபோதும் மிச்சம் வைக்கவே கூடாது! எதிரிகளில் மிச்சசொச்சமாக ஒருவரேனும் இருந்துவிட்டால், அவரால் நமக்கு எப்போது வேண்டுமானாலும் தொல்லைகள் நேரலாம்.

ஸ்ரீராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமும் இதுதான்!
அதாவது, ஒவ்வொரு முறையும் ஒருவரை மிச்சம் வைத்துக்கொண்டே வந்து, அவர்களால் தொல்லைகளையும் அனுபவித்து, பிறகு அழித்தொழித்தான் ஸ்ரீராமபிரான். எல்லோரையும் அழித்தபோது மாரீசனை மட்டும் விட்டுவிட்டான் ஸ்ரீராமன். பிறகு, அவனால் வந்த விளைவைச் சந்தித்தான். அதேபோல், சூர்ப்பணகையைக் கொல்லாமல், அவள் காது - மூக்கை மட்டும் சேதப்படுத்தி அனுப்பி வைத்தான். அவளும் அழுதுகொண்டே அண்ணனிடம் சென்று முறையிட்டாள்.

இப்படி... எதிரிகளை மிச்சம் வைத்து, அதனால் தொல்லைகளை அனுபவித்த பிறகுதான் அழித்தான் ஸ்ரீராமன். ஆனால் ஸ்ரீகண்ண பரமாத்மா,
துரியோதானாதிகள் ஒருவரைக்கூட விடாமல் அழித்தொழித்தான். அதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு 'வீரஹ’ எனும் திருநாமம் அமைந்ததுபோலும்!
அப்படி வீரனாக, முறுக்கு மீசை கொண்ட சூரனாக இருந்தாலும், கண்ணனைப் போல கருணையாளன் வேறு எவருமில்லை.

'பணமும் பத்தா இருக்கணும்; குணமும் முத்தா இருக்கணும்’ என்பார்கள். இங்கே பணத்தைப் பார்க்கவேண்டாம்; குணத்தைப் பார்ப்போம்.

ஸ்ரீகிருஷ்ணனுக்கு 'ஹேமாங்கஹ’ எனும் திருநாமம் உண்டு. ஹேமம் என்றால் சுத்தமான, சாத்விகமான திருமேனியைக் கொண்டவன் என்று அர்த்தம். சுத்தமான திருமேனி கொண்ட கிருஷ்ணரைத் தரிசிக்க தரிசிக்க... அவனையே அனவரதமும் நினைந்துருக உருக... நம் மனமும் சுத்தமாகும். நமக்கு உள்ளேயும் சாத்விக குணம் பரவும்! அதனால்தான் 'கண்ணா கண்ணா...' என்றோ, 'கிருஷ்ணா கிருஷ்ணா...' என்றோ நாம் அடிக்கடி உச்சரிக்கிறோம்.

வீரன் என்று குறிக்கும் வகையில் ஒரு திருநாமம்; எதிர்மறையாக, அமைதியான சாத்விக மேனி கொண்டவன் என்று குறிப்பிடும்படியாகவும் ஒரு திருநாமம். இவை தவிர, எல்லோருக்கும் தெரிந்த அவனுடைய இயல்பான குணத்தைக் கொண்டும் ஒரு திருநாமம் உண்டு. ஆம்... விஷமங்கள் செய்வதில் சூரனான

கண்ணபிரானுக்கு 'விஷமஹ’ எனும் திருநாமமும் உண்டு!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.