Breaking News :

Wednesday, November 29
.

அருள்மிகு துங்கநாதர் திருக்கோயில்,துங்கநாத்,உத்தர்காண்ட் மாநிலம்.


உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள சிவப்பரம்பொருளின் ஆலயம்.!! 
[ சுமார் 3680 மீ ]...

ஐயன் ஈசனுக்கு ஐந்து கேதார் கோயில்கள்

பரமேஸ்வரன் கொலுவிருக்கும் கேதார் கோயில்கள் ஐந்து. இவற்றில் கேதார்நாத் கோயில் பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரியும். பிற நான்கு கேதார்கள் எவை, எங்கிருக்கின்றன அவை?

ஈசனின் உடல்பாகங்களில் ஐந்தாக அவை வர்ணிக்கப்படுகின்றன:

கேதார்நாத் - ஈசனின் உடல்;
துங்கநாத் - ஈசனின் புஜம்;
ருத்ரநாத் - ஈசனின் முகம்;
மத்மஹேஷ்வர் - ஈசனின் தொப்புள்;
கபிலேஷ்வர் - ஈசனின் தலைமுடி.

குருக்ஷேத்திர யுத்தத்தில் தங்களுடைய சகோதரர்களையே கொன்றுவிட்டோமே என பஞ்ச பாண்டவர்கள் வருந்தியபோது,

வியாசர்தான் அவர்களிடம் 

‘சிவனின் உடற் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் அவருக்குக் கோயில் கட்டுங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து காப்பாற்றுவார்’ 

என கூறியதாகவும், அதனை ஏற்றுதான் பஞ்ச பாண்டவர்களும் ஆளுக்கு ஒரு ஆலயமாக கட்டினர் எனவும் இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உலகின் உயரமான சிவாலயம் துங்கநாத்தான். 

பஞ்ச கேதாரங்களில் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள தலமும் இதுதான். மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தில் ஆதி சங்கர பகவத் பாதாள் அன்னை பார்வதியை அழகிய சடையுடன் கூடிய மலைமகளை, (ரம்ய கபர்த்தினி சைலஸுதே)

சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே.....

அதாவது இமயமலையின் சிகரங்களில் துள்ளி விளையாடுபவள் என்று  குறிப்பிடுகின்றார்.

துங்கம் என்பால் சிகரம். அந்த சிகரங்களுக்கெல்லாம் ஈசர் துங்கநாத்தில் நமக்காக அருள் பாலிக்கின்றார். 

துங்கம் என்றால் கரம் என்றும் பொருள் இங்கு ஐயன் கர ரூபமாக வணங்கப்படுகின்றார்.   

இங்கிருந்துதான் ஆகாஷ்காமினி நதி உருவாகி பாய்கின்றாள்  சந்திரசிலா பனி சிகரத்தின் அடிவாரத்தில் சுமார் 3680 மீ உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

சந்திர சிலாவில்தான் இராமபிரான் தவம் செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

  இங்கிருந்து கொண்டல்கள் கொஞ்சும்   மஞ்சு திகழும் பஞ்சசுலி, நந்தாதேவி, தூனாகிரி, நீலகண்ட், கேதார்நாத் மற்றும் பந்தர்பூஞ்ச் சிகரங்களை காணலாம்.

துங்கநாத் கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் பாதையில் ஊக்கிமட்டிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், சோப்டாவிலிருந்து 5கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் இக்கோவிலை கட்டி சிவபெருமானை வழிபட்டான் என்பது ஐதீகம். 

துங்கநாத ஆலயத்தில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாக இடப்பக்கம் சற்று சாய்ந்தவாறு அருட்காட்சி தருகின்றார். 

இத்தலத்தில் ஐயனின் பாஹூ அதாவது தோள்(புஜங்கள்- கரம்) வெளிப்பட்டன.

இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகின்றார். 

அஷ்ட உலோகத்தால் ஆன வியாசர் மற்றும் கால பைரவரின் சிலைகள் உள்ளன.   இக்கோவிலில் அம்மை மலைமகள் பார்வதிக்கு ஒரு தனி சன்னதி உள்ளது.

இங்குதான் இராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

மற்ற கேதாரங்களை ஒப்பிடுகையில் துங்கநாத்தை அடைய 5 கி.மீ தூரம்தான் நடைப்பயணம் செய்ய வேண்டும். 

ஆனால் பல இடங்களில்  பாதை செங்குத்தாக உள்ளது. வழி முழுவதும். பசுமையான ஆல்பைன் மர காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ரோடன்டென் (rhodenton) எனப்படும் அழகிய மலர் புதர்களும், மற்றும் இமயமலைக்கே உரிய பல அரிய மலர்களும் நீர் வீழ்ச்சிகளும் நிறைந்து காணப்படுகின்றது 

மேலே ஏற சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஆகும்.

ஆதி சங்கரர் 8ம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. மற்ற கேதார் கோயில்களில், தென்னிந்திய அர்ச்சகர்கள்தான் காலம் காலமாக இறைப்பணி செய்து வருகிறார்கள். 

ஆனால், துங்கநாத் கோயிலில் மட்டும் மாகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அப்பணியை மேற்கொள்கிறார்கள்.

குளிர்காலம் வந்தால் இங்குள்ள உற்சவரும், அர்ச்சகரும் 18 கி.மீ. தூரத்தில் உள்ள முக்திநாத்துக்கு வந்து விடுவர். 

கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால் நந்தாதேவி, நீலகாந்த், கேதார்நாத் உட்பட பல இமயமலைப் பகுதிகளைப் பார்க்கலாம்.

தரிசனம் செய்ய ஏற்ற காலம் மே மாதம் முதல் அக்டோபர் முடிய.....!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.