Breaking News :

Sunday, May 19
.

திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில் : (மயிலாடுதுறை மாவட்டம்)


வெள்ளடைநாதர் கோயில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும்.

இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம், பால்கிணறு தீர்த்தமும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 13வது சிவத்தலமாகும். இத்தலத்தின் இறைவன்: வெள்ளடைநாதர், இறைவி: காவியங்கண்ணி.

பொதிசோறு வழங்கும் விழா :

சுந்தரருக்கு பொதி சோறு வழங்கும் விழா இத்தலத்தின் சிறப்பாகும். வெயிலின் காரணமாகவும், தண்ணீரின் தாகத்துடனும், பசியாலும் வந்த சுந்தரருக்கும், அவருடன் வந்த அடியார்களுக்கும் சிவபெருமான், வேதியர் வடிவில் தோன்றி, பெரிய பந்தல் ஏற்பாடு செய்து அவர்களை களைப்பாறச் செய்ததோடு, சுவையான குளிர்ந்த நீரையும், பசி தீர பொதி சோற்றினையும் தந்தருளினார். இதனை நினைவுகூரும் வகையில் இக்கோயிலில் சுந்தரருக்கு பொதிசோறு வழங்கும் விழா ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. அப்போது பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து மூலவருக்கும், சுந்தரருக்கும் சிறப்புப்பூசைகள் செய்யப்படுகின்றன.  இவ்விழாவினை கட்டமது படைப்பு விழா என்றும் கூறுவர்.  நாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோற்றினை திருப்பைஞ்ஞீலி கோயிலில் கொடுத்தார்.

தல வரலாறு - சம்பந்தரின் பாவங்களைப் போக்குதல்

சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள், கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு, சமணர்களைக் கழுவேற்றிய பாவம் நீங்க, சம்பந்தர் காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்குச் செல்ல அருளும்படி, சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார்.

சம்பந்தருக்குக் காட்சி தந்த சிவன், அவரை காசிக்குச் செல்ல வேண்டாம் என்றும், திருக்குருகாவூர் வெள்ளடையில் அவருக்குக் கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்குவந்த சம்பந்தர், சிவனை வேண்டினார். அவருக்குக் காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையைப் பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார்.

இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு, பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று, இறைவனுக்குத் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில், இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாள்களில் இந்தத் தீர்த்தம் திறக்கப்படுவதில்லை.

ஆண்டுதோறும், பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராட பெருமளவில் வருகிறார்கள். மேலும், தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஞானசம்பந்தரின் பாவங்களைப் போக்கிய இத்தலத்தில், இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், நமது பாவங்களும் தொலைந்துபோகும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.

இத்தலத்துக்கான சுந்தரிரன் பதிகம்
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.

திருச்சிற்றம்பலம் ... நமச்சிவாயம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.