Breaking News :

Tuesday, December 03
.

திருக்கடையூர் கோயிலில் வழிபடுவது எப்படி?


1. திருக்கடையூர் திருத்தலம்  நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழித் தடத்தில் சுமார் 23 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது.

2. கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம்,
பாபவிமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் என்பது உள்பட திருக்கடையூருக்கு பல புராதண பெயர்கள் உண்டு.

3. மார்க்கண்டேயருக்காக இத்தலத்து ஈசன், எமனை உதைத்து தள்ளியதால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

4. பிரம்மன் இத்தலத்தில் உபதேசம் பெற்றார்.
5. ஆதியில் இத்தலத்தின் தல விருட்சமாக வில்வம் இருந்தது. தற்போது மார்க்கண்டேயரால் நடப்பட்ட பிஞ்சில மரம் (சாதி மல்லிப் பூ மரம்) தல விருட்சமாக உள்ளது.

6. இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
7. திருமால், பிரம்மன், மார்க்கண்டேயர், அகத்தியர், எமன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

8. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
9. குங்குலிய கலய நாயனார், காரி நாயனார் இருவரும் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள், சேவைகள், திருப்பணிகள் செய்தனர்.

10. அப்பர், சுந்தரர் இருவரும் ஒரு சேர எழுந்தருளி, இறைவனை தொழுது குங்கிலிய நாயனாரின் திருமடத்தில் தங்கி இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.
11. மார்க்கண்டேயர் இறையருள் பெற்ற 108 தலங்களில் இது 108வது தலமாகும். அமிர்தகடேசுவரரை கண்ட பிறகு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.

12. பூமாதேவி இத்தலத்தில்தான் முழுமையான அனுக்ரகம் பெற்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.

13. சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம், உக்ரக சாந்தி, பீமரத சாந்தி ஆகியவை செய்ய தமிழ்நாட்டில் இத்தலம் மட்டுமே 100 சதவீதம் ஏற்ற தலமாக உள்ளது.

14. இத்தலத்தில் நடக்கும் பெரிய விழாக்களில் கார்த்திகை மாதம் நடக்கும் சோமவார விழா மிகவும் சிறப்பானது. சோமவாரத்தில் 1008 சங்கா பிஷேகம் நடப்பதை காண கண் கோடி வேண்டும் என்பார்கள்.

15. திருக்கடையூர் தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பணிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது.

16. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் அமைந் திருந்ததாக பாடல்கள் உள்ளன. ஆனால் இப்போது மாதவி வாழ்ந்த வீடு என்று எந்த ஒரு வீட்டையும் சுட்டிக்காட்ட இயலவில்லை.

17. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் திராவிட கட்டிடக்கலையை பின் பற்றி கட்டப்பட்டுள்ளது.
18. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம்
 47வது தலமாக போற்றப்படுகிறது.

19. திருக்கடையூர் ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.
20. மிகச் சிறந்த பரிகாரத் தலமான திருக்கடையூர் தலத்தை 04364-287429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
                                                                      
பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி.

வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு அமிர்தகடம் வந்தது முதல் ஈசன் அமிர்தகடேஸ்வரர் என்றும் பெயர் பெற்றார்.

திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை.

புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.