Breaking News :

Saturday, March 02
.

தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர் ஆலயம், தெப்பத்துப்பட்டி, மதுரை


பொக்கிஷம் காக்கும் முனி... 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில்!

மதுரை, சைவம் தழைத்த மண். திரும்பும் திசையெங்கும் சிவாலயங்கள் கொண்ட மண். பல ஆயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த கோயில்கள் உள்ள மண்.

ஈசன் பல்வேறு திருவிளையாடல்கள் நிகழ்த்தி மக்களுக்கு அருள்பாலித்த மண். இதை உணர்த்தும் வகையில் மதுரையில் மட்டுமல்ல மதுரையைச் சுற்றிலும் இருக்கும் பல்வேறு பழைமைவாய்ந்த கோயில்கள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு கோயிலும் பழைமையும் வரலாறும் வழிபாட்டுச் சிறப்பும் கொண்ட ஆலயங்கள்தாம். அப்படி ஓர் ஆலயம் மதுரைக்கு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியில் அமைந்துள்ளது.

10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பாண்டியர்காலக் கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

மேலும் இறைவனின் சித்தப்படி தந்தைக்குத் தெரியாமல் மகன் ஒருவன் எழுப்பிய திருக்கோயில் இது என்கிற வரலாற்றையும் சொல்கிறது தலபுராணம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் திருப்பணி செய்யாத பாண்டிய மன்னர்களே இல்லை.

அப்படி ஒரு மன்னர் திருப்பணியினை மேற்கொண்டபோது திருப்பணிக்கு வேண்டிய கற்களை உசிலம்பட்டியிலிருந்து எடுத்துவர ஏற்பாடு செய்தான். உசிலம்பட்டியிலிருந்து தெப்பத்துப்பட்டி வழியாகத்தான் கற்களை ஏற்றிய வண்டிகள் வரவேண்டும்.

கற்களைச் சுமந்துவரும் வண்டியில் பூட்டிய கால்நடைகளும் அதைப் பராமரித்து ஓட்டிவரும் வீரர்களும் நீண்ட பயணத்தால் சோர்ந்துபோகாமல் இருக்க, தெப்பத்துப்பட்டியில் ஒரு சத்திரத்தை ஏற்படுத்த விரும்பினார் மன்னர்.

அங்கு அவர்களுக்கு எப்போதும் உணவும் நீரும் ஓய்விடமும் இருக்குமாறு ஏற்பாடு செய்தார். இதில் குறை நேர்ந்தால் மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணியில் தாமதம் ஏற்படும் என்பதால் இந்தப் பணியை நிர்வகிக்கத் தன் மகனையே அங்கு பொறுப்பில் அமர்த்தினார்.

சிலநாள்கள் கழிந்தன. ஒருநாள் மன்னனின் மகனுக்கு சொப்பனம் போன்ற ஒரு காட்சி. அதில் சிவபெருமான் தோன்றித் தனக்கு ஓர் ஆலயம் எழுப்புமாறு கூறியதுபோன்ற ஒரு நிகழ்வு.

இதைக் கனவா நனவா என்று அவன் ஆராய்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால் அவனின் சிலிர்த்திருந்த தேகம் அது நிச்சயம் தெய்வ சித்தமே என்பதை உணர்ந்து விட்டான்.

எந்த இடத்தில் தனக்கு அப்படி ஓர் எண்ணம் தோன்றியதோ அந்த இடத்திலேயே ஈசனுக்கு ஒரு கோயில் கட்ட முடிவு செய்து அதைச் செய்தும் முடித்தான். அப்படி எழுப்பப் பட்டதுதான் தெப்பத்துப்பட்டியில் இருக்கும் பொக்கிஷ நாதர் கோயில்.

இங்கு அருள் தரும் ஈசன் மாறுபட்ட சதுர வடிவ லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். இப்படி சதுர வடிவ ஆவுடையாருடன் இருக்கும் சிவலிங்கங்கள் அனைத்தையும் ரிஷிகள் வழிபட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன.

கருவறையின் வெளிப்புறத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய மூர்த்திகள் சந்நிதிகொண்டு அருள்கிறார்கள்.

கலைநயம் கொண்ட சிற்பங்களுடன் அமைந்த 40 கல் தூண்கள் இந்தக் கோயிலைத் தாங்கி நிற்கின்றன.

கருவறையின் வெளிப்புறத்தைச் சுற்றிலும் முப்பத்தெட்டு யாளிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நட்சத்திரங்களைக் குறிக்கும் சின்னங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

கோயிலின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த விநாயகருக்குப் பின்புறம் அக்னி பகவான் அமைந்திருப்பது இந்தத் தலத்தின் விசேஷம்.

இது தவிர, மூலவரை நோக்கி நந்தி அமர்ந்திருக்கிறார். வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமானும், ஆண்டிச்சாமி போன்ற 22 பரிவார தெய்வங்களும் இந்த ஆலயத்தில் அருள்கின்றனர். முன்புறத்தில், கற்களால் கட்டப்பட்ட கிணறு, கோயிலுக்கு அழகு சேர்க்கிறது.
பொக்கிஷம் காக்கும் முனி.

பொக்கிஷநாதரான சிவலிங்கமானது திருகக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்குள்ள மக்கள் எல்லோரும் இக்கோயிலை ‘ஓட்டைக் கோயில்’ என்றே இதுநாள்வரை குறிப்பிட்டுள்ளனர். காரணம் கருவறையின் மேற்கூறையில் ஒருவர் புகுந்து செல்லும் அளவுக்கு ஓர் ஓட்டை அமைந்துள்ளது. அதனாலேயே இந்தக் கோயிலை ஓட்டைக் கோயில் என்று அழைத்துவந்தனர்.

ஈசனின் பெயர் பொக்கிஷநாதர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இங்கு சுவாரஸ்யமான ஒரு செய்தியும் பிரசித்தமாக இருக்கிறது.

இந்தக் கோயிலில் பொக்கிஷங்கள் இருப்பதாகவும், அதை முனி ஒன்று காவல் காத்து வருகிறது என்றும் யாரேனும் கோயிலுக்குள் புகுந்து அதைத் திருட முயன்றால் முனி அவர்களை அடித்துக் கொன்றுவிடும் என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள்.

சுவாமியும் திருகும் வடிவில் அமைந்திருப்பதும் பொக்கிஷம் தொடர்பான ஒரு சூட்சுமமே என்று பேசிக்கொள்கிறார்கள்.

பாண்டிய மன்னனின் மகன் இந்த ஊரில் தங்கி இருந்தபோது, பொக்கிஷத்தைக் காப்பாற்றுவதற்காகக் கட்டிய கோயில் இது என்பதனால் இந்த இறைவனுக்குப் ‘பொக்கிஷநாதர்’ என்ற திருப்பெயர் மிகவும் பொருத்தம் என்கிறார்கள் பக்தர்கள்.

முனிபயத்தால் இந்தக் கோயிலுக்குள் செல்வதற்குக் கூடப் பலகாலம் மக்கள் பயந்து கொண்டிருந்தனர். பின்னர் அடியவர்களின் முயற்சியால் ஆலயம் தூய்மை செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

பொக்கிஷம் இருக்கிறது என்ற தகவல் கிடைத்தால் போதாதா... அதைக் கவர்ந்து செல்லப் பல்வேறு முயற்சிகள் நடைபெறுமே... அப்படி இங்கே பல கொள்ளைகளும் நடந்திருக்கின்றன.

இந்தக் கோயிலிலிருந்து சிற்ப நுட்பம் மிகுந்த பல சிலைகள் களவாடப்பட்டிருக்கின்றன. தற்காலத்தில்தான் ஊர்மக்களின் தீவிர முயற்சியால் 'நற்துணை' என்ற பெயரில் திருப்பணிகள் நடத்திக் கோயிலைப் பராமரிக்கத் தொடங்கினர்.

இந்த ஈசனை வணங்கி வேண்டிக்கொண்டால் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை. பொக்கிஷ நாதர் தம் அருள் செல்வத்தால் நம் வறுமையை நீக்கியருள்வார் என்கிறார்கள் பக்தர்கள்.

அதேபோன்று குருவித் துறை குருபகவான் கோயிலும் பொக்கிஷ நாதர் கோயிலும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.

எனவே இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் பொக்கிஷ நாதரையும் வணங்கி வழிபடுவதன் மூலம் குரு தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.
பொக்கிஷநாதரை வழிபட்டுக் கோயிலுக்குப் பின்னால் நின்று தரிசித்தால் நாகமலை உச்சியில் இருக்கும் பாறை லிங்கம்போன்ற தோற்றம் தரும். எனவே மலையாக அமைந்திருக்கும் அந்த லிங்கத்தையும் இங்கிருந்தே வணங்கி வழிபடுவது விசேஷம் என்கிறார்கள் அடியவர்கள்.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் இருந்து உத்தமநாயக்கனூர் செல்லும் வழியில், 20-வது கி.மீ-ல் உள்ளது தெப்பத்துப்பட்டி கிராமம். இங்கு செல்லப் பேருந்து வசதிகள் உண்டு.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.