Breaking News :

Thursday, December 05
.

அருள்மிகு தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்க ஸ்வாமி கோவில் வந்தவாசி


தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்க ஸ்வாமி கோயில் (ஞானானந்த கிரி பீடம்).

மஹாராஷ்டிராவிலுள்ள பண்டரீபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலுள்ளது.

இங்கு ஸ்ரீ ரகுமாயி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்க ஸ்வாமியை தரிசிக்கலாம். ஞானானந்த ஸ்வாமிகளின் சீடர் ஹரிதாஸ்  கிரி ஸ்வாமிகளால்  அமைக்கப்பட்ட இந்தக் கோவில்,  நாமானந்தகிரி ஸ்வாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள்  தென்னாங்கூரில் ஸ்ரீ ரகுமாயி ஸமேதராக ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சந்நிதி ஏற்படுத்தினார். பண்டரிபுரத்தில் தனக்குக் கிடைத்த விக்ரஹத்தையும் வைத்து வழிபாடுகளும் நாமசங்கீர்த்தனமும் நடைபெற வழிவகை செய்தார்.

யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள்  அனைவரும் இங்கு  குடிகொண்டிருப்பது விசேஷம்.

ஸ்ரீ பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்ராமத்தினால்  ஆன விக்ரஹம். மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயிலில் யந்திர வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.
ஸ்ரீசக்ரத்தின் அதிதேவதைகள் மஹா ஷோடஸி என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர்.

யந்திர வழிபாடான ஸ்ரீ சக்ரத்திற்கு மஹா மேரு அமைப்பை ஏற்படுத்தி பூஜை செய்து வருவது மாபெரும் பலனை தரக்கூடியது. இந்த மஹாமேரு தான் மஹா ஷோடஸியாக  இந்த ஸ்தலத்தில் விளங்குகிறது.

ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவுகள்  உள்ளனவோ  அத்தனை பிரிவிற்கும்  உள்ள தெய்வங்களான மஹா ஷோடஸி,  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி,  ஸ்ரீ சரஸ்வதி,  ஸ்ரீ லக்ஷ்மி,  பிரம்மா,  ஸ்ரீ விஷ்ணு,  ஸ்ரீ  ருத்ரன்,  ஸ்ரீ ஈஸ்வரன்,  ஸ்ரீ விநாயகர்.  பாலா,  ஸ்ரீ அன்னபூரணி,  அஸ்வாரூடா,  ராஜமாதங்கி,  வராஹி,  பிரத்யங்கரா,  சரபேஸ்வரர்,  சக்ரத்தாழ்வார்,  யோக நரசிம்ஹர்,  அகோரமூர்த்தி வனதுர்க்கை,  தக்ஷிணாமூர்த்தி,  சுப்ரமணியர்,  பிராஹ்மி,  மகேஸ்வரி,  கௌமாரி,  வைஷ்ணவி,  மாகேந்திரி ஆகியோர் இந்த ஸ்தலத்தில்  விக்ரஹ வடிவில் இருப்பது மிகவும் விசேஷம்.

ஸ்தல விருக்ஷம்  தமால மரம் மதுராவிலேயே  அதிகம் காணக் கிடைக்கும் விசேஷமான மரம்.  வடமாநிலங்களில் காணப்படும் இந்த விருக்ஷம் அதிசயமாக தென்னாட்டில்  இந்த ஸ்தலத்தில் அமைந்துள்ளது சிறப்பு.

ஹிந்து புராணங்களின்படி,  கிருஷ்ணர் இந்த மரத்தின் கீழ் இன்று புல்லாங்குழல் வாசிப்பதாகவும் கோபியர் மட்டுமின்றி ராதையும் அதைக்கேட்டு அதில் லயிப்பதாகவும் கூறுகின்றன.தென்னாங்கூர் ஷடாரண்யம் என்று வழங்கப்பட்ட ஆற்காடு க்ஷேத்திரங்களில் முக்கியமான ஒன்று.

இந்தப் பீடத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது போன்றே கோபுரம் அமைந்திருக்கிறது.
இந்த கோபுர தரிசனம் நமக்குப் பூரிக்குச் சென்ற புண்ணியத்தையும், இந்தப் பீடத்தில் ஸ்ரீ ரகுமாயி ஸமேதராகக் காட்சி தரும் ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் நமக்குப் பண்டரிபுரம் சென்ற புண்ணியத்தையும் ஒருசேரத் தருகின்றன.

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 06 கி.மீ தூரத்திலும் காஞ்சிபுரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது தென்னாங்கூர்.

ஓம் நமோ நாராயணாய நம!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.