Breaking News :

Monday, February 10
.

முதுகெலும்பையே ஆயுதமாக்கிக் கொடுத்து உயிரை விட்ட ததீசி முனிவர்?


கங்கைக் கரையில் லோபமுத்ரா என்ற தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார் ததீசி.அவரின் தவ பலன் காரணமாகத் தைத்திரியர்கள்,அரக்கர்கள்,அசுரர்கள் அச்சத்தால் அவர் ஆசிரமத்திற்குள் நுழைய மாட்டார்கள்.அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற தேவர்கள் ததீசி முனிவரிடம் வந்து இனிமேல் எங்களுக்கு ஆயுதங்கள் தேவையில்லை நாங்கள் வந்து கேட்கும் வரை பத்திரமாக வைத்திருங்கள் என்று கூறி விட்டுச் சென்றனர்.இதை அறிந்த லோபமுத்ரா "நீங்கள் செய்தது சரியல்ல. அசுரர்கள் இதை அறிந்தால் உங்களை பகையாகக் கொள்வார்கள் "என்று கூறினாள்.அதை மதிக்கவில்லை முனிவர்.நாளடைவில் ஆயுதங்கள் அனைத்தும் துறுபிடித்து தன் மந்திர சக்தியை இழக்கலாயின.

இதையுணர்ந்த முனிவர் அதை கங்கை நீரில் கழுவி அத்தண்ணீரைக் குடித்து விட்டார்.அதனால் ஆயுதங்களின் மந்திர சக்தி அனைத்தும் அவருடைய முதுகெலும்பிற்குச் சென்று விட்டது. சிறுது நாள் சென்றவுடன் தேவர்கள் வந்து ஆயுதத்தைக் கேட்டனர்.உடனே முனிவர் தான் உயிரை விடுவதாகவும் தன் முதுகெலும்பை எடுத்து வேண்டிய ஆயுதம் செய்து கொள்ளுமாறுக் கூறி உயிரை விட்டார்.விஸ்வகார்மா முதுகெலும்பை எடுத்து முதலில் வஜ்ராயுதம் செய்ய அதை எடுத்துக் கொண்டுதேவர்கள் சென்று விட்டனர்.இதையறிந்த லோபமுத்ரா ஒரு மகனைப் பெற்றெடுத்து விட்டு அத்திமரத்திடம் அவனை ஒப்படைத்து விட்டு உயிரை விட்டாள்.அத்திமரத்தால் வளர்கப்பட்டதால் அம்மகன் வடமொழிச் சொல்லான பிப்பலா என்ற பெயரைப் பெற்றான்.அத்திமரத்தால் தன் தாய் தந்தையருக்கு நேர்ந்த கொடுமையை அறிந்தவன் தேவர்களை அழிக்க எண்ணம் கொண்டு சிவனை நோக்கி தவம் இருந்தான்.

அதனால் மகிழ்ந்த சிவன்  தன் மூன்றாதுகண் மூலம் ஒரு கொடியபூதத்தை உண்டாக்கிக் கொடுத்தார்.அவன் அப்பூதத்திடம் தேவர்களைஅழிக்க ஆணையிட அப்பூதம் அவனை அழிக்கத் தொடங்கியது.அவன் காரணம் வினவ அப்பூதம் நீயும் ஒரு தேவனே அதனால் முதலில் உன்னை அழிக்கிறேன் என்றது.மீண்டும் அவன் சிவபெருமானைச் சரணடைய "எது நடக்க வேண்டுமோ அது நடந்து விட்டது. தேவர்களைஅழிப்பதால் உனக்கு லாபம் இல்லை" என்று கூறினார். ததீசியும் லோபமுத்திரையும் மகனுக்குக் காட்சி கொடுத்து வாழ்த்தினர்
உடலுறுப்பு தானம் செய்த முனிவர் !!

சிறப்பு :
இந்திய அரசின் உயர் விருதான பரம் வீர் சக்ராவின் மேல் இவரது முதுகெலும்பின் படமே உள்ளதென்பது சிறப்பான செய்தியாகும். இந்த விருது நம் தேசத்தைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கு வழங்கபடும் ஒரு விருதாகும்.

உலகத்தில் முதன்முறை உடலுறுப்பு தானம் செய்தவர் ததீசி முனிவர் ஆவார். ஒருவரின் உயிர் உடலை விட்டு நீங்கிவிட்டாலும், அவரின் உடலுறுப்புகள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டும் என்ற ஆழ்ந்த தத்துவத்தை ததீசி முனிவர் நமக்கு கற்றுத் தருகின்றார். வேதகால மகரிஷிகளுள் ஒருவர் தான் ததீசி முனிவர். சிவபுராணம் உட்பட மற்றசில புராணங்களில் ததீசி முனிவர் தியாகப் பேரொளியாகப் போற்றப்படுகின்றார்.

வரலாறு :
பாரத தேசத்தின் வடக்குப் பகுதியில் பெரும் செழிப்பை ஏற்படுத்தி ஓடிக் கொண்டிருந்தது சரஸ்வதி நதி. இந்த நதிக்கரையின் ஓரிடத்தில் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார் ததீசி முனிவர். அவர் செய்த தவம் இறைவனின் அடியை பற்றும் நன்நோக்கத்திற்காகவே இருந்தது. ஆனால் அவரது கடுமையான தவத்தைக் கண்டு இந்திரன் அஞ்சினான்.

முனிவர்களின் கடும்தவம் அவர்களுக்கு மாபெரும் சக்தியைத் தரும். அந்தச் சக்தியைப் பெரும்பாலும் முனிவர்கள், மனிதகுல நன்மைக்கும், தன்னுடைய ஆத்மலாபத்திற்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால், இந்திரனுக்கோ ‘எங்கே அவர்கள் அந்தச் சக்தியைக் கொண்டு, தன் இந்திரப் பதவியைப் பறித்துக் கொண்டுவிடுவார்களோ?’ என்று ஒரு பயம் எப்போதும் இருந்தது.
எனவே ததீசியின் தவத்தைக் கலைக்க இந்திரன் பல சூழ்ச்சிகள் செய்தான். தன்னுடைய வஞ்சக செயல்களால் முனிவருக்கு நிறைய தொந்தரவுகள் கொடுத்து வந்தான். இருந்தபோதிலும் அவர் அத்தனை சவால்களையும் கடந்துவந்தார். தன்னுடைய தவ வலிமையால் சால்புத்தன்மை பெற்று மற்ற முனிவர்களின் மத்தியில் மரியாதைக்கு உரியவரானார்.

அப்பொழுது ஒரு சமயம், விருத்திராசூரன் எனும் அசுரனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. அந்த யுத்தம் தொடங்கியது முதல், அசுரர்களின் கையே ஓங்கியிருந்தது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மூண்ட போரில் விருத்திராசூரன் வென்றான். தேவலோகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்திரன், விஷ்ணுபெருமானிடம் சரண்புகுந்தான். விருத்திராசூரனை வெற்றிக் கொள்ள ததீசி முனிவரின் முதுகெலும்பால் ஆன ஆயுதத்தால் மட்டுமே இயலும் என விஷ்ணுபெருமான் கூறினார்.

இந்திரனும் மற்ற தேவர்களும் உடனடியாக ததீசி முனிவரின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டனர். அங்கு இந்திரன் ததீசி முனிவரிடம் எல்லாவற்றையும் எடுத்துக் கூறினான். விருத்திராசூரனை அழிக்க அவரின் முதுகெலும்பு தேவைபடுகின்றது என வேண்டினான். இந்திரன் தனக்கு செய்த தீமைகளை எல்லாம் மறந்துவிட்டு, இந்திரனின் வேண்டுகோளுக்கு ததீசி முனிவர் ஒப்புதல் தெரிவித்தார். ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து தன் உடலில் இருந்து உயிரை வெளியேற்றினார். பின்னர் ததீசி முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் உருவாக்கப்பட்டது. இந்திரனும் விருத்திராசூரனை வென்று தேவலோகத்தை அடைந்தான்.

தியாகம், தானம் மற்றும் மன்னிக்கும் குணம் ஆகியவற்றிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் ததீசி முனிவர். நாமும் நம்முடைய வாழ்க்கையில் இம்மூன்று குணங்களையும் வளர்த்துக் கொண்டு இறைவனின் நல்லாசியைப் பெறுவோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.