Breaking News :

Wednesday, December 04
.

தமிழகத்தில் காசி எங்குள்ளது?


எல்லா ஊர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றது என்றாலும், சில ஊர்களுக்கு மகான்களாலோ, அறிஞர்களாலோ மிகப்பெரிய சிறப்பு  ஏற்பட்டு விடுகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாக விளங்குவது காஞ்சிபுரம்.

ஏனெனில், இங்கு தான் உலகாளும்  ஈஸ்வரியான காமாட்சியும், நடமாடும் தெய்வமான காஞ்சி மகாப்பெரியவரும் அருளாட்சி செய்கின்றனர்.
நகரங்களில் மிகவும் சிறந்தது காஞ்சி  என்பதை நகரேஷு காஞ்சி என்ற வடமொழிச் சொல் குறிப்பிடுகிறது.

பாரதத்தில், அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்துவார்), காசி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகை ஆகிய வடமாநில ஊர்களுடன் தென்னகத்தின் காஞ்சிபுரம் உட்பட ஏழு இடங்கள் மோட்சத்தை தரும் மோட்சபுரிகள் என  அழைக்கப்படுகின்றன.

உலகம் அழியும் காலத்தில், ஒரு சில ஊர்கள் மட்டும் அழியாது என புராணங்கள் கூறுகின்றன.

அதில் சிவனால் பாதுகாக்க ப்படும் தலம் கும்பகோணம்.
அன்னை காமாட்சியால் பாதுகாக்கப்படும் தலம் காஞ்சிபுரம்.
எனவே இந்த ஊரை பிரளயஜித் க்ஷேத்ரம் என்பர். பிரளயம் என்றால் உலக அழிவு. ஜித் என்றால் வெற்றி.

இங்கிருக்கும் காமாட்சி மூன்று தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள்.
ஸ்ரீதேவியான லட்சுமி, வாக்தேவியான சரஸ்வதி, சவுபாக்கிய தேவதையான  அம்பாள் ஆகியோர் வாசம் செய்யும்  ஊர் இது.
இவ்வூரை விட்டு, இவர்கள் ஒருநாளும் பிரிவதில்லை என்ற அந்தஸ்தைக் கொண்டது.

புண்ணிய  பாரதத்தின் நாபி (தொப்புள்) ஸ்தலமாக விளங்குவது காஞ்சிபுரம்.

பிரம்மா செய்த வேள்வியின் போது, அவிர்பாகம் ஏற்ற திருமால், சங்கு சக்கர  கதாதாரியாய் இவ்வூரில் தங்கி அருள்பாலிக்கிறார்.
இவ்வூரின் வரதராஜப் பெருமாள், உலகளந்த பெருமாள் கோயில்கள் பிரம்மாண்டமானவை.

இது பஞ்சபூத க்ஷேத்ரங்களில் பிருத்வி(நிலம்) தலமாகவும் விளங்குகிறது.
இங்குள்ள கைலாசநாதர் கோவில் கருவறையைச் சுற்றி வரும்போது,  சொர்க்க பிரதட்சணம் என்ற வாசல் வழியாக வெளியே வருவர்.
இப்படி  வெளியேறுபவர்களுக்கு மறுஜென்மம் ஏற்படாது என்பர்.
இங்குள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலுள்ள இஷ்டசித்தி தீர்த்த நீரைத் தெளித்தாலே  போதும். தீர்க்காயுள் கிடைக்கும்.

தேனம்பாக்கத்திலுள்ள சிவாஸ்தானம் கோயிலில் மிகப்பெரிய விசேஷம்.
சிவபார்வதியின் நடுவில் முருகன் இருந்தால் சோமாஸ்கந்தர் என அழைப்போம்.

இங்கே முருகனுக்கு பதிலாக விநாயகர் நடுவில் இருக்கிறார்.
காஞ்சிப்பெரியவர் விருப்பமுடன் இங்கு  தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த சிறப்பு பெற்ற இடம் இது.

கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த பூமி இது.
அவரால் புகழப்பட்ட  குமரக்கடவுள் அருளும் குமரக்கோட்டம் கோயில் இங்கு தான் உள்ளது.

காஞ்சிபுரத்தை சத்யவிரத க்ஷேத்ரம் என்றும் புகழ்வர்.
உண்மை  குடியிருக்கும் ஊர் இது.
எந்த உண்மை! சாட்சாத் காமாட்சியே
நம்மைக் காக்க வல்லவள் என்ற உண்மை!

இதுபோன்ற தலங்களில் செய்யும் தானம்,  பிராயச்சித்தம், அனுஷ்டிக்கும் விரதங்களுக்கு நூறு மடங்கு புண்ணியம் அதிகம்.

எனவே தமிழகத்தின் காசி என்றால் அது  காஞ்சிபுரம் தான்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.