திருப்பூரிலிருந்து, ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி. மீ. தொலைவில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் இருக்கின்ற சுக்ரீஸ்வரர் கோயில்தான், நான்கு யுகங்களை கண்ட அதிசய கோயிலாக திகழ்கின்றது.
இராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு சிவபெருமானை வேண்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.
சுக்ரீவன் வழிபட்டதற்கு ஆதாரமாக, கோயிலின் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. அதன் காரணமாக இங்கிருக்கும் இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகின்றார்.
சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரரால் பாடல் பெற்ற இக்கோயில், 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக இருக்கலாம் என்று கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு கூறுகின்றது.
2,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில் என்று இக்கோயில் குறித்து தொல்லியல் துறை கூறுகின்றது. ஆனால், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதா யுகத்தில், காவல் தெய்வங்களாலும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனாலும் இக்கோயில் வணங்கப்பட்டது.
8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபர யுகத்தில் வெள்ளை யானையான ஐராவதத்தாலும் வணங்கப்பட்டது. 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்கள், அரசர்கள் போன்றோர்களால் வணங்கப்பட்டு நான்கு யுகங்களை கண்ட கோயில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் இக்கோயிலில் உள்ளன.
கோயிலின் அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்காக தொல்லியல் துறையினர் கோயில் கற்களை பிரித்து பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோயிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோயில் அமைந்துள்ளது.
அதன் காரணமாகவே பல ஆயிரம் ஆண்டுகளானாலும், பூமிக்கடியில் கோயில் இறங்காமல், கட்டியபடியே வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கட்டுமானங்கள் அப்படியே உள்ளன.
எந்த சிவன் கோயிலிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மன் உள்ளார். பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோயிலில் அமைந்துள்ளதாக கோயில் வரலாறு கூறுகின்றது.
அதேபோல் எங்கும் இல்லாத வகையாக, இக்கோயிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளதால், மூலவரை, நேரடியாக வந்து தரிசிக்க முடியாது. மூலவர் சன்னதிக்கு எதிரே வழியின்றி தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். சிதம்பரம், பேரூர் ஆகியவற்றில் உள்ள சிவன் கோயில்கள் போன்று சிறப்பான வேலைப்பாடு மற்றும் சக்தியுடன் கூடிய கோயிலாக சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது.