Breaking News :

Thursday, September 12
.

ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம், திருவெண்காடு


21 தலைமுறை பாவங்கள் தீர வேண்டுமா? நீங்கள் வணங்க வேண்டிய தலம் திருவெண்காடு!!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. யுகம் பல கண்ட கோயில் இது. நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றானது திருவெண்காடு. இத்தலத்திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவங்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.
இத்தலத்து இறைவனுக்கு, திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். இலிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
பிரம்மனிடம் பெற்ற வரத்தால், மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து, சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட, சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரனை அகோர மூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிடப தேவரை சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.
நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது.

திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்த கோவில் பற்றி 20 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
1. திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
2. வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும், தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும், அன்னையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார்.
3. இத்தலத்தில் புதன், தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.
4. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.
5. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.
6. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

7. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.
8. திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
9. சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.

10. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோரமூர்த்தியை இக்கோயிலில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை “ஆதி சிதம்பரம்” என்பார்கள். திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
11. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.
📷
12. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார். இது 43 வது உருவம் ஆகும். இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம். பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார்.
13. மூலவரைப் போலவே உற்சவரும் உள்ளார். நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
14. அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது. இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.
15. திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.
16. அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.

17. இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

18. திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.
18. திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

20. இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள். திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கித் தவம் இருந்து அவரைத் தன் கணவனாகப் பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள். நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம். கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும். பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.
21. இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.
22. இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.

23. சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் “சுவேதன காளி” என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். காட்சியில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.
24. காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

25. துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.
26. திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து “அம்மா” என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது. இதனால் அம்மன் “பிள்ளையிடுக்கி அம்மன்” ஆனாள்.
27. இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தர வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
28. நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.

29. இங்குள்ள நடராஜரை “ஆடவல்லான்” என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. ஸ்படிக லிங்கமும், இரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும், நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
30. பட்டினத்தார், இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.
31. இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார் என நம்புகின்றனர்.
32. திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.
33. சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது!!

34. நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டுப் பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம்.
35. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் எல்லாமே மூன்று. காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.‌
36. இத்தலத்திலுள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில், தலைக்கு பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்யவேண்டும். அதன்பின் சந்திரத் தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன.

37. இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினர்க்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்கள் நம்புவதால் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.