Breaking News :

Thursday, September 12
.

ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதினால் என்ன பலன்?


*ஸ்ரீ ராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கிட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர்.

உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.

‘ராம” என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி ‘மரா” என்றே முதலில் உச்சரித்தார் ‘மரா” என்றாலும், ‘ராம” என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள்.

ஸ்ரீராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தானும் தாக்கிக் கொண்டாள். ‘ரமா” என்று அவளுக்கு பெயருண்டு. ‘ரமா” என்றால் ‘ஸ்ரீலட்சுமி”.

ஸ்ரீலட்சுமி கடாட்சத்தை வழங்குவது ஸ்ரீராம மந்திரம்.

ஸ்ரீராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி) உண்டாகும்.
ஸ்ரீராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

‘ரா” என்றால் ‘இல்லை” ‘மன்’ என்றால் ‘தலைவன்’. இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.

முதன் முதலில்ஸ்ரீ ராமநாமம் எழுதியவர் யார் ?

ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை
சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் அனுமன் தான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை.

வெற்றிக் களிப்பில் தேவியின் முன்னர் பணிந்து அம்மா! என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார்.

சீதையின் முன் மணலில் ‘ஸ்ரீராமஜெயம்” என்று எழுதிக் காண்பித்தார். அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டார்.

முதன் முதலில் ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எழுதியவர் அனுமன் தான்!

அன்று முதல் லிகித நாமஜெபம் என்ற பெயரில் ராம நாமத்தை பனை ஓலை மற்றும் காகிதத்தில் எழுதும் பழக்கம் கொண்டனர்.

ஸ்ரீராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும்.
குறிவைக்கத் தைக்கும் ராமசரம் என்பார்கள்.

ஸ்ரீராமபாணம் எப்படி இலக்கை நோக்கிப் பாயுமோ, அதுபோல ஸ்ரீராமநாமம் உங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வல்லமை கொண்டது. நம்பிக்கை யுடன் செய்தால் பலன் நிச்சயம். குறைந்தது ஒருநாளைக்கு 108 முறை எழுதுவது அவசியம்.

சீதையை அசோகவனத்தில் சந்தித்து வந்த அனுமன், ராமனிடம் கண்டேன் சீதையை என்று சொல்லியபடி தெற்கு நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கைகளில் சூடாமணியை பெற்றதும் ஸ்ரீராமரின் கண்களில் கண்ணீர் மல்கியது.

பிரபு! தேவி கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களின் திருநாமத்தை மறந்தால் தான் கஷ்டம் வரும். பிராட்டியோ எப்போதும் தங்கள் பெயரையே, (ராமநாமம்) ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு கஷ்டம் என்பதே கிடையாது, என்று அனுமன் அவருக்கு ஆறுதல் அளித்தார்.

ஸ்ரீராமர் அவரை ஆரத்தழுவி, அனுமான்! உன்னிடம் நான்பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?, என்றார்.
அனுமனின் உடல் அப்படியே சிலிர்த்துப் போனது. பகவானே! என்ன சொல்லிவிட்டீர்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்! என்று ஸ்ரீராமரின் திருவடிகளில் சரணடைந்தார். அப்போது கருணையுடன் அனுமன் தலையை கோதியபடி ஸ்ரீராமர் ஆசி வழங்கினார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.