Breaking News :

Friday, October 04
.

அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில், விருத்தாசலம்


இங்கு பெருமாள்  சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தானே தோன்றிய மூர்த்திகளை கொண்ட வைணவத் தலங்கள் எட்டு. 1. ஸ்ரீ ரங்கம் 2.ஸ்ரீ முஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை 5. சாளக்கிராமம் 6. புஷ்கரம் 7. நைமிசாரண்யம் 8. பத்ரிகாச்ரமம்.

ஸ்ரீ பூவராகசுவாமி சன்னதி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி.

விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ்ரீமுஷ்ணம் என்னும் திருத்தலம். ஆதி வராஹ பெருமாள் திவ்யமான காட்டுப்பன்றி ரூபத்தில் எழுந்தருளியுள்ளார் இங்கே.

ஸனக, ஸனந்தன, ஸநாதன, ஸனத்குமார என்னும் நான்கு குமாரர்களும் ஒருநாள் நாராயணரை தரிசிப்பதற்காக   க்ஷீராப்தி என்கிற திருப்பாற்கடல் சென்றனர். அப்போது வாயிற் பாதுகாவலர்களான ஜயன், விஜயன் ஆகிய இருவரும் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் கோபம் அடைந்த நான்கு குமாரர்கள் ஜெயன், விஜயனை பௌதிக உலகில் பிறக்கும்படி சபித்தனர். இச்செய்தியை அறிந்த நாராயணர் வைகுண்டத்தின் நுழைவாயிலுக்கு விரைந்தார். ஜயன், விஜயனின் எஜமானர் என்கிற முறையில் தன் சேவகர்களின் தவறுக்காக நாராயணர் நான்கு குமாரர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டார்.

அதன் பின், ஜயன், விஜயனிடம், பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு எனது எதிரியாக பிறக்க விருப்பப்படுகிறீர்களா, ஏழு பிறவிகளுக்கு எனது பக்தர்களாக  இருக்க விருப்பப்படுகிறீர்களா?" எனக் கேட்டார் க்ஷீராப்தியில் இருக்கும் நாராயணரை ஏழு பிறவிகளுக்கு பிரிந்திருப்பதை விட மூன்று பிறவியில் எதிரியாக செயல்பட்டு விரைவாக   க்ஷீராப்திக்கே  வந்து விடும் நோக்கத்தில், அவர்கள் இருவரும் அசுரர்களாகச் செயல்பட முன் வந்தனர்.

அப்போது, நான்கு குமாரர்களின் சாபம் தன்னால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் தன்னுடைய விருப்பமும் அதுவே என்றும் நாராயணர் தெரிவித்தார். பகவான் நாராயணரின் திட்டத்தைத் தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த நான்கு குமாரர்கள், நுழைவாயிலில் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதும் பகவானின் விருப்பமே என உணர்ந்தனர்.

மூன்று பிறவி அசுரர்கள்

வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான ஜயன், விஜயன் முதற் பிறவியில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்றும், இரண்டாவது பிறவியில் இராவணன், கும்பகர்ணன் என்றும், மூன்றாவது பிறவியில் சிசுபாலன், தண்டவக்ரன் என்றும் பிறப்பெடுத்தனர்.

வைகுண்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே பக்தர்கள் என்பதால், நாராயணரால் அங்கே யாரிடமும் சண்டையிட முடியாது. அதே சமயம், யாரிடமாவது சண்டையிட வேண்டும் எனும் பகவான் நாராயணரின் விருப்பம், அவர்  இப்பூவுலகில் அவதரிக்கும்போது நிறைவேறுகிறது.
அதாவது, தன்னிடம் கடுமையாக சண்டையிடுவதற்குத் தகுதி வாய்ந்த நபர்களை பகவான் நாராயணரே தேர்ந்தெடுக்கிறார்.

இருப்பினும், ஜயன், விஜயன் ஆகிய இருவரும் பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு அசுரர்களாக செயல்பட்ட நிகழ்ச்சி, பிரம்மாவின் நாளில் ஒருமுறை மட்டுமே நடைபெற்ற நிகழ்ச்சியாகும். அதாவது, பகவான் பௌதிக உலகில் அவதரிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஜயன், விஜயன் தோன்றுவதில்லை. பகவானுடன் போரிடும் அளவிற்கு தகுதி வாய்ந்த அசுரர்கள் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிரிகளாகச் செயல்படுகின்றனர்.

ஹிரண்யாக்ஷன் பிரம்மாவிடம் வரம் பெறுதல்
ஜயன், விஜயன் ஆகிய இருவரும் தங்களது முதல் பிறவியில், கஷ்யபரின் இரு மகன்களாகப் பிறந்தனர். கஷ்யபர் அவர்களுக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என பெயரிட்டார். இந்த இரு அசுர சகோதரர்களும் பௌதிக உலகில் பிறந்தபோது, இயற்கையின் சீற்றங்களான பூகம்பம், பலத்த காற்று, அசுப கிரகங்கள் பலம் பெறுதல், சூரிய சந்திர கிரகணங்கள் மாறி மாறி தோன்றுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன.

 நரி ஊளையிடுதல், பயத்தில் மாடுகள் உறைந்து போகுதல் போன்ற அபசகுனங்களும் தென்பட்டன.

ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரும் கடுந்தவம் மேற்கொண்டு, ஏறக்குறைய சாகா வரத்தைப் போன்ற ஒரு வரத்தை பிம்மாவிடம் பெற்று, கர்வத்தினால் மூவுலகையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர்.

 ஹிரண்யாக்ஷனின் வருகையைக் கண்ட இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் தங்கள் லோகத்தை கைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர்.

இந்திர லோகமும் காலியாக இருப்பதை கண்ட ஹிரண்யாக்ஷன் தேவர்கள் சண்டை போடாமலேயே தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டனர் என எண்ணி பெருமிதம் கொண்டான்.

சுவர்க்க லோகத்தை விட்டு ஹிரண்யாக்ஷன் சமுத்திரத்தினுள் சென்றபோது, அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பயத்தில் நீரை விட்டு வெளியே சென்றன.
பின் வருண தேவரின் தலைநகரான விபாவரிக்கு சென்ற ஹிரண்யாக்ஷன் வருண தேவரைத் தன்னுடன் சண்டையிடும்படி கேட்டுக் கொண்டான்.

 ஹிரண்யாக்ஷனின் கர்வத்தைக் கண்ட வருண தேவர், தனக்கு வயதாகி விட்டதென்றும், விஷ்ணுவே சண்டையிடுவதற்குத் தகுதியான நபர் என்றும் அவனிடம் தெரிவித்தார். பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்தை நாரதரின் மூலமாக அறிந்து கொண்ட ஹிரண்யாக்ஷன் அவரைத் தேடி புறப்பட்டான்.

பூமியை மீட்ட வராஹர்

ஹிரண்யாக்ஷன் பூலோகத்தை கர்போதக கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்து பிரம்மாவை நாடினர். பிரம்மா பூலோகத்தை எவ்வாறு மீட்க முடியும் என தியானித்த போது அவருடைய வலது நாசியில் இருந்து கட்டை விரல் அளவிலான பன்றி ரூபம் வெளிப்பட்டது.

அந்த திவ்யமான பன்றி அவதாரம் தன் உருவத்தின் அளவை அதிகரித்து கொண்டே செல்வதைப் பார்த்த தேவர்கள் அதிசயித்தனர். பகவான் விஷ்ணுவே பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என உணர்ந்த தேவர்கள் அச்சத்தைக் கைவிட்டு உறுமிக் கொண்டிருந்த வராஹரைப் பார்த்து துதி பாடினர்.

இயல்பாக பன்றிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பதால், கர்போதக கடலுக்குள் இருக்கும் பூமியை மீட்கும் பொருட்டு, வராஹர் நுகர்ந்து கொண்டே நீருக்கடியில் சென்றார். பூலோகத்தையே தன் சிறு கோரைப்பற்களால் தாங்குமளவிற்கு வராஹரின் உடல் பெரிதாக இருந்தது. ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிகவும் சாதுர்யமாக வராஹர் அதனைத் தன் கோரைப்பற்களால் சுமந்து நீருக்கு வெளியில் எடுத்து வந்து தன் அசிந்திய சக்தியினால் மிதக்க வைத்தார்.

கடுமையான யுத்தம்

கடலுக்குள் மூழ்கடித்த பூமியை ஒரு பன்றி சுமந்து கொண்டு நீருக்கு வெளியே வருவதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் பாம்பைப் போல சீறினான். தன் கையில் இருந்த கதையினால் வராஹரைத் தாக்க ஹிரண்யாக்ஷன் முயன்றான். அப்போது வராஹருக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் கடுமையான போர் மூண்டது.

 சில சமயம் ஹிரண்யாக்ஷனின் கை ஓங்குவதைக் கண்ட தேவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் வராஹரின் கையில் இருந்த கதையை கீழே தள்ளிய ஹிரண்யாக்ஷன் வராஹரை நிராயுதபாணியாக ஆக்கிவிட்டான்.

அதனால் கடுங்கோபம் அடைந்த வராஹர் உடனடியாக சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் உடனடியாக ஆகாயத்திற்கு பறந்த வண்ணம் கதையினால் வராஹரைத் தாக்க முன் வந்தான். கதை, சூலம் ஆகிய ஆயுதங்கள் மட்டுமின்றி அவர்கள் இருவரும் கைகளாலும் சண்டையிட்டனர்.

யோகேஷ்வர வராஹரிடம் ஹிரண்யாக்ஷன் பல மாயாஜால வித்தைகளை அரங்கேற்றினான். சுதர்சன சக்கரத்தை ஏவிய வராஹ பகவான் அனைத்து மாயாஜாலங்களையும் நொடிப் பொழுதில் அழித்தார். தன் மாயாஜால வேலைகள் பலிக்கவில்லை என்பதை உணர்ந்த ஹிரண்யாக்ஷன் தனது பலமான இரு கைகளால் பகவானைத் தழுவி நசுக்க முன் வந்தான்.

வராஹ பகவான் அவனது காதில் பலமாக அறைவிட்டபோது, ஹிரண்யாக்ஷன் விழி பிதுங்கி, கை உடைந்து, வேரோடு பெயர்த்தெடுத்த மரத்தை போன்று கீழே விழுந்தான்.
பிரம்மாவும் இதர தேவர்களும் அங்கு விரைந்து பூமழை பொழிந்தனர்.

 ஹிரண்யாக்ஷனின் உயிர் பிரியாத நிலையில் பகவான் வராஹரின் திருப்பாதம் அவனது நெஞ்சில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பிரம்மா, யாருக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டமான மரணம் கிட்டும் என எண்ணி வியந்தார். யோகிகளும் ஞானிகளும் பகவானின் திருப்பாதங்களைத் தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த அசுரனுக்கோ பகவான் வராஹரின் திருப்பாதங்கள் உடலில் தொட்ட வண்ணம் உடலை நீக்கும் பாக்கியம் கிட்டியது.

கோயிலின் அமைப்பு

ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகிய க்ஷேத்திரங்களுடன் இணைந்து, ஸ்ரீமுஷ்ணம் எட்டு முக்கிய சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது...
பூவராஹ சுவாமி திருக்கோயிலின் முகப்பானது கம்பீரமான எழில்மிகு ராஜகோபுரத்தின் அமைப்பைக் கொண்டுள்ளது. கோயிலில் இருக்கும் மூல விக்ரஹத்தை தரிசிக்கும் முன் ஸ்ரீநிவாஸ பெருமாளையும் அவரது திருவடிகளையும் தரிசித்து செல்ல வேண்டும். கோயிலின் தென் கிழக்கு திசையில் அரச மரமும் நித்ய புஷ்கரணியும் அமைந்துள்ளது.

இக்கோயிலில் முதன்மையான விக்ரஹத்திற்கு மேல் பாவன விமானம் அமையப் பெற்றுள்ளது. வராஹ பெருமாள் ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வெடுத்த போது அவர் உடல் வியர்வையே நித்ய புஷ்கரிணி என்னும் புனித தீர்த்தமாக மாறிவிட்டது.

ஹிரண்யாக்ஷனை வதம் செய்த பின்னர், பகவான் வராஹரின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி ஆனந்தக் கண்ணீரானது அரச மரமாக உருவெடுத்தது. இக்கோயிலில் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், வேணு தீர்த்தம், மிருத்யுஞ்சய தீர்த்தம் என பல தீர்த்தங்கள் விசேஷமாக காணப்படுகின்றன.

பூவராஹ சுவாமி

பூவராஹ சுவாமி முதன்மையான விக்ரஹமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தன் இடுப்பில் இருக்கும் சங்கு, சக்கரத்தைத் தன் இரு கைகளால் மறைத்த வண்ணம், உடல் மேற்கு திசையை நோக்கியும், முகம் தெற்கு திசையை நோக்கியும் அமையப்பெற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இங்கு யக்ஞ வராஹர் உற்சவ மூர்த்தியாகவும், தாயார் அம்புஜ வல்லியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

கடலில் இருந்து பூமியை வெளியே கொண்டு வந்து தேவர்களின் துயரைத் துடைத்து மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் செல்ல வராஹர் எண்ணியதாகவும், பூதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாகவும் நாரத புராணம் கூறுகின்றது.

 பூதேவியுடன் கூடி வசிப்பதால் வராஹப் பெருமாளுக்கு பூவராஹன் என்று பெயர். நான்கு தலை கொண்ட பிரம்மா இங்கு தினந்தோறும் பூவராஹ சுவாமியை தரிசிக்கிறார் என்பது கோயில் ஐதிகம். தினந்தோறும் இக்கோயிலில் கஜேந்திர மோஷம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் புராணத்தைப் பாராயணம் செய்கின்றனர்.

நித்ய புஷ்கரிணியில் ஸ்நானம் செய்த பின்னர் அரச மரத்தின் கீழ் அல்லது புறக்கரையில் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் சன்னதி ஸேவிப்பது  விசேஷமானதாகும்.  இக்கோயிலில் வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். பகவான் திவ்யமான காட்டுப் பன்றி ரூபத்தில் எழுந்தருளிய எம்பெருமான் கோரைக்கிழங்கு அமுது செய்தருள்கிறார்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்...

ஓம் நமோ நாராயணா நமஹா...
ஓம் நமோ நாராயணா நமஹா...

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.