Breaking News :

Friday, April 19
.

ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரரை வணங்கினால் முன்னோர் சாபம் நீங்கும்!


ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், திருக்காஞ்சி, புதுச்சேரி

புதுச்சேரியில் திருகாசி எனும் திருக்காஞ்சி ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் வரலாறு சிறப்பு  கோவில். இக்கோவில் புதுச்சேரி வில்லியனூர் என்னும் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது. செஞ்சியாறு, கிளிஞ்சியாறு, வராக நதி எனப்படும் சங்கராபரணி நதி இந்த ஆலயத்தின் தீர்த்தமாகும்.

இந்த கோவிலின் கருவறை தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களின் கருவறைகளை போன்றே உள்ளது. ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரரின் லிங்கம் பதினாறு பட்டைகளைக் கொண்ட ஷோடசலிங்கம். இந்த சிவ லிங்கத்தை வணங்கினால் முன்னோர் சாபம் நீங்கும் என நம்பிக்கை. நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு உள்ளிட்ட பதினாறு செல்வங்களையும் வழங்கும் என்பதும் ஐதீகம். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை ஸ்ரீ அகஸ்திய மாமுனிவர் தன்னுடைய திருக்கரத்தால் பிரதிஷ்டை செய்தார்.

பண்டைய காலத்தில் அந்தணன் ஒருவர் இறந்த தன் தந்தையின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக அஸ்திப் பானையைத் தலையில் சுமந்து சென்றான். வழிப் பயணம் நெடுந்தூரமாக இருப்பதால்  துணைக்கு நண்பனையும் அழைத்துச் சென்றான். திருக்காஞ்சியை அவன் கடக்கும் போது, இயற்கை உபாதை ஏற்பட்டதால்,தன்னுடன் வந்த நண்பனிடம் பானையைத் தந்து திறந்து பார்க்காமல் இருக்க சொல்லிச் சென்றான். ஆனாலும், அவனது நண்பன் அந்த பானையைத் திறந்து பார்த்துவிட்டான். பானையின் உள்ளே இருந்த பொருளைக் பார்த்துவிட்டு மீண்டும் முன்பைப் போலவே வைத்துவிட்டான்.

காசியை அடைந்த அந்தணன் கங்கைக் கரையில் அஸ்தியைக் கரைக்க பானையைத் திறந்தபோது அருகே இருந்த நண்பன் அதிர்ச்சியுற்றான். இதே சாம்பல் திருக்காஞ்சியில் பார்த்தபோது பூக்களாய் இருந்த அதிசயத்தைக் கூறினான். சாம்பல் பூக்களாய் மாறிய அதிசயத்தையும், அந்த இடம் எத்தனை சக்தி வாய்ந்த தலமாயிருக்க வேண்டும் என்பதை நினைத்த அந்தணன், இதை மறுபடியும் சோதித்து செய்துவிடலாம் என  முடிவு செய்து, அந்த அஸ்திக் கலசத்துடன் மீண்டும் திருக்காஞ்சியை அடைந்தான்.

அப்போதுதான் உண்மை அவனுக்குப் புரிந்தது. காசிக்கு எடுத்து சென்ற அஸ்தி திருக்காஞ்சி எல்லையில் புஷ்பமாக மாறியிருந்தது. காசியில் செய்யும் பிதுர் கர்மாக்களை இங்கே செய்யலாம் என்ற அசரீரி கேட்டுக் கடவுளின் சித்தத்தையும் அறிந்துகொண்டான்.

இந்த தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மாசிமகம் சிறப்பு வாய்ந்ததாகும். மாசி மகத் திருவிழாவில் நீத்தார் கடன் செய்வது மிகவும் சிறப்பானது. காமாட்சி, மீனாட்சி இரு அம்மன்களைக் கொண்ட இந்தத் தலத்தினுள் மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பார். தல விருட்சம் வில்வம்.

சங்கராபரணி ஆறு புதுச்சேரி அருகே கிழக்காகத் திரும்பிக் கடலை நோக்கிச் செல்லும்போது,  திருக்காஞ்சியில் வடக்கு நோக்கித் திரும்பி அதன் பிறகு கிழக்கே நோக்கி திரும்பி வங்கக்கடலில் சேருகின்றது. இது மிகவும்  அரிதானது. மாசி மகத்தன்று சுற்றுப் பகுதியில் உள்ள 35 கோயில்களில் உள்ள சுவாமிகளுக்கு இங்கு தீர்த்தவாரி நடைபெறும். மாசி மாதம் முழுவதும் இந்த தீர்த்தத்தில் புண்ணிய நீராடலாம்.

பயணம்: புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூரில் இருந்து திருக்காஞ்சி செல்லலாம்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.