Breaking News :

Wednesday, December 04
.

சிவனையே நடுங்க வைத்த சித்தர் கருவூரார்!


ஆதியை அசைத்துப் பார்த்தவர், இன்றைக்கும் அரசியல்வாதிகளுக்கு #சிம்மசொப்பனமாக இருக்கிறார் சித்தர் கருவூரார்.

சிவனுக்கு பெரும் தொண்டு செய்து, தஞ்சை பெரிய கோயிலை கட்டி முடித்து, பெரும் நிலப்பரப்பை ஆண்ட சோழப் பேரரசன் #ராஜராஜ சோழனுக்கு குருவாக இருந்து வழி நடத்தினார். முடிவில் தம் சொல் கேளாமல் சென்றதால், ராஜராஜ சோழனை தம்முடைய மகிமையின் சித்தர் பிரசன்னத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டார். இப்போது  வரைக்கும் ராஜராஜ சோழனின் சமாதியை காண முடியாமல் போய்விட்டது.

உண்மையும், நேர்மையும் இல்லாமல் அதிகார பலத்துடன் தான் சூட்சமமாக வாசம் பண்ணும் தஞ்சை பெரிய கோயிலுக்குள் வரும் அரசியல்வாதிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

இன்றைக்கு இந்தியாவில் எல்லாவற்றுக்கும் தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கும் அவர்களுடைய பதவி முடியும் பொழுது இவருடைய சூட்சும சரீரம் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று தங்கள் பரிசுத்தத்தை மக்கள் முன் பறைசாற்ற வேண்டும் என்ற ஒரு வேண்டுகோள் வைக்கலாம்.

கரைபடாத கரத்துக்கு சொந்தக்காரர், இந்து மதத்தின் காவலர் என்று சொல்பவர்கள் எல்லாம் கருவூரார் சித்தரிடம் சென்று தங்கள் பரிசுத்தத்தை சோதித்து உலகத்துக்கு பறைசாற்ற வேண்டும் என்று சொல்லலாம்.

கருவூரார் சித்தரின் வரலாறு

கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த்தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர்  என்ன என்பது தெரியவில்லை. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்ற கருவூரார், யோக சித்திகள் கைவரப் பெற்றவர். #போகமுனிவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றவர். சித்திகள் பல பெற்றிருந்தாலும் உலக வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார்.

எண்ணற்ற பல அற்புதங்களை இவர் செய்திருக்கிறார் என்றாலும், இவருடைய செயல்களைக் கண்டு, மக்கள் இவரை பித்தர் என்றே அழைத்தனர். கொங்கு தேசம், வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு முதலிய இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் #திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவர் திருநெல்வேலி #நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தார்.

அப்போது  நிவேதன காலம், இறைவனை "நெல்லையப்பா" என்று மூன்று முறை அழைத்தும் இறைவனின் தரிசனம்  கிடைக்கவில்லை. “அட, இங்கே நெல்லையப்பன் இல்லையாப்பா?” என்று இவர் நகைப்புடன்  கூறவும், சுற்றி #எருக்கும், வேண்டாத புல் பூண்டுகளும் முளைத்துக் கோவிலை  மறைத்து நின்றன. அங்கிருந்து திரும்பியும் பாராமல் நடந்தார் சித்தர், "சித்தனின் கோவம் சிவனையும்  நடுங்க வைத்தது".

கருவூரார் மானூரை அடையும்போது நெல்லையப்பர் வழிமறித்தார். “அப்பனே, உனக்கு  இத்தனை கோபம் ஆகாது  நீ என்னைக் காண வந்தபோது நைவேத்திய நேரம். நான்  உன்னுடைய குரலுக்கு செவிசாய்த்தும் பதில் சொல்ல முடியாமல் போயிற்று” என்று பக்குவமாய் சொன்னார். "சரி, போனது போகட்டும், திரும்பிவா திருநெல்வேலிக்கு" என்று  இதமாக அழைத்தார். கருவூரார் சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு  அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு வழங்கினார் இறைவன். கருவூரார்த்தேவர் நெல்லையில் இருந்து திருக்குற்றாலம் சென்று அங்குச் சிலநாள் தங்கியிருந்து, பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து அருள்பெற்றார்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சை பெருவுடையார் கோயிலும், நெல்லை நெல்லையப்பர் கோயிலிலும் கருவூரார் சித்தரின் சூட்சுமம் அதிகமாக உண்டு.
நெல்லையப்பர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை கட்டி தழுவிக் கொண்டிருக்கும் பொழுது சூட்சமம் ஆனார் என்றும், தஞ்சை பெரிய கோயில்களிலும் சூட்சுமமாக இருக்கிறார், என்றும்  திருகாளகஸ்தியில் ஜீவசமாதி அடைந்தார் என்றும் நம்பப்படுகிறது.

செம்பு, பித்தளை, பஞ்சலோகம் போன்ற உலோகங்களால் தொழில் செய்பவர்கள் கருவூரார் சித்தரை வழிபட்டு தொழிலில் நேர்மை உடன் வெற்றி அடையலாம்.
கன்னிக்கு கரு ( குழந்தை ) உருவாக தடை இருப்பவர்கள் அஸ்தம் நட்சத்திரம் அன்று கருவூரார் சித்திரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் தடை விலகி குழந்தை பேரு உண்டாகும்.

கருவூரார் சித்தரின் ஜென்ம நட்சத்திரம் அஸ்தம் இருப்பது கன்னி ராசி கால புருஷனுக்கு நோய் ஸ்தானம் மற்றும் அடிவயறு பிரச்சனைகள்.

நன்றி:  நாஞ்சில் மலர்  எஸ். மணிபாபு, ஜோதிட ஆராய்ச்சியாளர்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.