Breaking News :

Monday, February 10
.

ஏழு குருபகவான்களை கொண்டு விளங்கும் உத்தமர் திருக்கோவில்!


அருள்மிகு உத்தமர் திருக்கோவில் திருச்சிராப்பள்ளியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலமாகும். ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம் இதுவாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.

தல வரலாறு :

சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை.

அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பு லோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.

அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது  பூரணமாக நிரம்பி சிவனின் பசியை நீக்கியது. இதனால் தாயார்  ''பூரணவல்லி" என்ற பெயரும் பெற்றாள். பெருமாளும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.
தல பெருமை :

புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமாதலால், உத்தமர் கோவில் எனப் புகழ் பெற்றது. பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன.

பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார்.

ஏழு குருபகவான் :
பிரம்மகுரு
விஷ்ணுகுரு
சிவகுரு
சக்திகுரு
சுப்ரமயணிகுரு
தேவகுரு பிரஹஸ்பதி
அசுரகுரு சுக்ராச்சார்யார்

ஆகிய ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் தலம். பிரம்மாவின் இடப்புறம் தனிசன்னதியில் ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கும் தலம்.
தல சிறப்பு :

மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன், அருகருகே தனித்தனி சன்னதிகளில் அமைந்து அருளும் திருத்தலம் இந்தியாவில் இது ஒன்றே.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.