Breaking News :

Thursday, April 18
.

ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்ற சப்தஸ்தானப் பெருவிழா.... 


சோழமண்டலத்தில் ஆண்டு தோறும் சிறப்புற நிகழும் திருவிழாக்களுள் மிக முக்கியமானது - திருஐயாறு சப்த ஸ்தானப் பெருவிழா.. சப்த ஸ்தானப்பெருவிழா சித்ரா பௌர்ணமியை அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று நிகழ்வது.

பங்குனியில் திருமழபாடியில் நிகழ்ந்த ஸ்ரீ நந்தியம்பெருமான் திருமணத்தின் தொடர்ச்சியாக நிகழ்வது...நந்தீசன் திருமணத்தைத் தரிசிக்க வந்த ஏனைய முனிவர்கள் மாப்பிள்ளையையும் பெண்ணையும் தத்தம் ஊர்களுக்கு வந்தருளுமாறு அழைத்ததாகவும் -

அதன் பொருட்டு செம்பொற்சோதியாகிய ஐயாறப்பரும் அன்னை அறம் வளர்த்த நாயகியும் - புதுமணத் தம்பதிகளைத் தாமே அழைத்து வருவதாக வாக்களித்ததாக ஐதீகம்... புதுமணத் தம்பதிகளைத் தனியே அனுப்ப மனமில்லை போலிருக்கிறது - ஐயனுக்கும் அம்பிகைக்கும்...

திருஐயாற்றில் சித்திரைத் திருவிழா முடிந்த கையோடு - அடுத்த விசாகத்தன்று -  விடியற்காலையில் ஸ்வாமியும் அம்பிகையும் வெட்டி வேர் பல்லக்கிலும் நந்தீசனும்  சுயம்பிரகாஷிணி தேவியும் மற்றொரு பல்லக்கிலும் எழுந்தருளி திருஐயாற்றின் நான்கு வீதிகளிலும் வலம் வருவர்..

அதையடுத்து - காவிரியின் பூசப் படித்துறை மண்டபத்தில் வீற்றிருந்து கட்டளைதாரர் மண்டகப்படி உபசாரங்களை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து திருப்பழனத்துக்குப் புறப்படுவர்...திருப்பழனத்தில் ஸ்ரீ ஆபத்சகாய மூர்த்தி - ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பிகையுடன் ஊர்மக்கள் எதிர்கொண்டழைப்பர்...

அங்கே மாலை மரியாதைகளை ஏற்று கொண்டு அங்கிருந்து திருச்சோற்றுத் துறைக்குப் புறப்படுவர்...திருஐயாறு மற்றும் திருப்பழனத்துப் பல்லக்குகள் திருச்சோற்றுத்துறைக்கு எழுந்தருள மதியம் ஆகிவிடும்...

காவிரியைக் கடந்த நிலையில் திருச்சோற்றுத்துறை ஸ்ரீ ஓதவனேஸ்வரரும் ஸ்ரீ அன்னபூரணி அம்பிகையும் எதிர் கொண்டு அழைப்பர்..

அங்கே தான் வீட்டுக்கு வீடு கல்யாண விருந்து...

தமிழகத்தில் எந்தத் திருவிழாவிலும் காணப்படாத அற்புதம் இது..

திருச்சோற்றுத் துறையில் அவரவர் பொருளாதார நிலைக்கு அவரவர் வீடும் கல்யாணக் கோலம் பூண்டிருக்கும்...

பல்லக்குகளுடன் நடந்து வரும் பக்தர்களை -  தங்கள் இல்லத்தில் உணவு உண்பதற்கு வருமாறு அழைக்கும் பாசத்துக்கு நிகர் வேறு ஏதுமில்லை...

திருச்சோற்றுத் துறையிலிருந்து திருவேதிக்குடிக்குப் புறப்படும்போது
திருஐயாறு மற்றும் திருப்பழனத்துப் பல்லக்குகளுடன் திருச்சோற்றுத்துறை பல்லக்கும் புறப்படும்...

திருவேதிகுடியில் - ஸ்ரீ வேதபுரீஸ்வரரும் ஸ்ரீ மங்கையர்க்கரசி அம்பிகையும் எதிர்கொண்டழைத்து மாலை மரியாதை ஆராதனைகள் நிகழும்...

அங்கிருந்து திருக்கண்டியூருக்குப் புறப்படும்போது
திருஐயாறு திருப்பழனம் மற்றும் திருச்சோற்றுத்துறை பல்லக்குகளுடன்
திருவேதிகுடி பல்லக்கும் புறப்படும்...

திருக்கண்டியூரில் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரரும் ஸ்ரீ மங்களாம்பிகையும்
வரவேற்க அங்கே மகத்தான கோலாகலம்...

அங்கே மாப்பிள்ளை பெண்ணுக்கு கட்டுசோறு உபசாரம் பிரசித்தம்...

அதன் பின் அங்கிருந்து
திருஐயாறு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை மற்றும் திருவேதிகுடி பல்லக்குகளுடன் திருக்கண்டியூர் பல்லக்கும் புறப்படும்...

முன்னிரவுப் பொழுதில் திருப்பூந்துருத்தியை நெருங்க -
ஸ்ரீபுஷ்பவன நாதரும் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பிகையும் எதிர்கொள்வர்..

இங்கே பல்லக்கில் வரும் மூர்த்திகளுக்கு புதிய மாலைகளுடன் அலங்காரம் செய்யப்படும்... ஆராதனை தரிசனத்துக்குப் பின் புறப்படும் போது -

திருஐயாறு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதிகுடி மற்றும் திருக்கண்டியூர் பல்லக்குகளுடன் திருப்பூந்துருத்தி பல்லக்கும் புறப்படும்...

குடமுருட்டி ஆற்றில் பெரிய அளவில் வாணவேடிக்கை நிகழ திருநெய்த்தானம் ஸ்ரீ நெய்யாடியப்பர் - ஸ்ரீ பாலாம்பிகை வரவேற்பு அளிப்பர்..

அங்கே சிறப்பான ஆராதனைக்குப் பிறகு புறப்படும் வேளையில்

திருஐயாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், மற்றும் திருப்பூந்துருத்தி பல்லக்குகளுடன் திருநெய்த்தானத்தின் பல்லக்கும் புறப்படும்...

ஆறு ஊர் பல்லக்குகளும் (திருவையாற்றுடன் ஏழூர்) திருஐயாற்றை நெருங்கும்போது பொழுது விடிந்திருக்கும் ...

கீழைக் கோபுர வாசலில் ஈசனுக்கும் அம்பிகைக்கும் பதுமை மாலையிட எல்லா மூர்த்திகளுக்கும் புஷ்பாஞ்சலியுடன் மகா தீப ஆராதனை நிகழும்..

அந்த வேளையில் ஐயாறப்பரின் பல்லக்கு பண்டரங்கக்கூத்து நிகழ்த்தும்..

பண்டரங்கக் கூத்து நிகழ்த்தியபடியே ஸ்வாமியின் மூலஸ்தான ப்ரவேசம்..

அத்துடன் ஏனைய திருத்தலங்களின் மூர்த்திகள் தத்தம் திருக்கோயில்களுக்கு
புறப்படுவர்....

இது தான் சப்தஸ்தானப் பெருவிழா...

ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்ற ஆனந்தத் திருவிழா..

ராஜராஜ சோழ மாமன்னனின் பெருந்தேவியாகிய உலகமாதேவியார் தான்
இத்திருவிழாவினைத் தொடங்கி வைத்ததாக சொல்லப்படுகின்றது...

ஆயிரம் ஆண்டுகளாக எவ்வித தடங்கலும் இன்றி
இத்திருவிழா நடைபெறுவதே இதன் சிறப்பு...

ஆனால் - இப்போது பற்பல மாற்றங்கள்... திருப்பழனத்திலிருந்து திருசோற்றுத் துறைக்கு பல்லக்குகள் வரும்போதே ஆகி விடுகின்றது...

எல்லாப் பல்லக்குகளும் இரவைக் கடந்து திருஐயாற்றை நெருங்கும்போது உச்சிப் பொழுதைக் கடந்து மாலைப் பொழுது ஆகி  விடுகின்றது...

மறுநாள் 17.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை,  திருஐயாற்றில் பொம்மை பூப்போடும் நிகழ்வு...  மிக மிக சிறப்பாக நிகழும்.... 

வருக...  பேரானந்தம் (பெருக) பெறுக...தகவள் சிவ செந்தில் அண்ணா...

ஆரூரா...நடராஜா.. ஆரூரா...


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.