Breaking News :

Tuesday, December 03
.

காலுடைந்த சனிஸ்வரனுக்கு காகம் வாகனமான கதை!


சித்திரை திருதியையில் ஒரு உத்தமமான விளாமரத்தடியில் இறைவன் நின்று உலகை உயிர்ப்பித்தார். அந்த இடம் "ஆதிபுரி' எனப்பட்டது.

"ஒரு பிரளயகால முடிவில் புவியில் அனைத்தும் அழித்து மீண்டும் உற்பத்தி செய்யவும், மனித இனத்தைத் தழைக்கச் செய்யவும் தகுந்த இடத்தை ஈசன் உருவாக்கினார்.  

"இறைவன் தோன்றியதால் குற்றமற்ற உயர்ந்த இடம்' எனும் பொருளில், "அட்சயபுரி' என்றும் அழைக்கப்பட்டது. இறைவன் "அட்சயபுரீஸ்வரர்' . இறைவி "அபிவிருத்திநாயகி'. இந்தத் தலம் அபிவிருத்தி தலமாகவும், அட்சய திருதியை தலமாகவும் விளங்கி வருகிறது.

சூரியன் மனைவி சமுக்ஞை மகன் எமனுக்கும், மற்றொரு மனைவி சாயாதேவிக்கு பிறந்த சனிக்கும் அடிக்கடி சண்டை உண்டானது. சனியின் ஒரு காலை எமன் ஊனப்படுத்த, ஊனம் நீங்க சனி மனித உருவில் புவியில் இறைவனைத் தேடி அலைந்தார்.

சித்திரை மாதத்தில் பூச நட்சத்திரம், வளர்பிறை திருதியை திதியுடன் கூடிய சனிக்கிழமையன்று, விளாமரங்கள் அடர்ந்து சிவனும் உமையும் குடி கொண்டிருந்த வனப் பகுதியில் ஊனமான காலுடன் சனி நுழைந்தார்.

அங்கிருந்த மரத்தின் வேர் தடுக்கி அடுத்திருந்த ஆழ்ந்த பள்ளத்தில் விழ "ஈசா' என அலறினார். ஈசன் அருளால் பள்ளத்தில் பலயுகங்களாக மறைந்திருந்த "ஞானவாவி' தீர்த்தம் பீறிட்டுக் கிளம்பியது. அட்சயபுரீஸ்வரர் அருள் பெருக, சனியின் ஊனமும் நீங்கியது.

சனியை தீர்த்தம் மேலே உயர்த்திக் கொண்டு வர, ஊனத்தை அங்கிருந்த காகம் ஏற்றுகொண்டது. அன்றுமுதல் சனீஸ்வரன் காகத்தை வாகனமாக ஏற்றுகொண்டார்.

ஈசன் அருளியதன்பேரில், மந்தா, ஜேஷ்டா தேவியருடன் சனி பகவான் அருள் வழங்குகிறார். விளங்குளத்தில் பக்தர்கள் நீராடி, ஈசனை வழிபடுவோர் அல்லல் நீங்கி வாழ்வில் நலம் பெறுகின்றனர்."

"அட்சயபுரீஸ்வரர்' என்ற பெயரில் லிங்க வடிவில் கிழக்கு நோக்கிய கருவறையில் ஏகதள வேசர விமானத்தில் எழுந்தருளினார். உமையன்னை மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்தையும் தனி சந்நிதியில் அபிவிருத்திநாயகியாக தெற்கு நோக்கி நின்று பெருகச் செய்தாள்.

மந்தா, ஜேஷ்டா தேவியரை மணந்த மங்களநாயகன் சனையீச்சரனை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி எழுந்தருளச் செய்தார்.

உலகம் தோன்றிய முதலில் பெரிய சனீஸ்வரனாக இருந்ததால், "ஆதி பிருஹத் சனீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். தலவரலாறுப்படி, "அக்ஷ்யர்}நிறைவானவர்' என்ற பெயர் இறைவனுக்குண்டு.

"பூசமருங்கர்' எனும் சித்தர் இறைவனைத் தேடி எங்கும் காணாமல் இறுதியாகக் கண்டு வழிபட்டதலம் இது. சனிப் பரணி சித்தர் இத்தலத்தில் தோன்றி பலபிறவிகளிலும் தொடர்ந்த பித்ரு தோஷம் முதல் அனைத்து சாபங்களும் நீங்க இங்கு வழிபட்டார். இந்தத் தலம் பூசநட்சத்திர பரிகாரத் தலமாகும்.

முதலாம் பராக்கிரம பாண்டியனின், காலக் கல்வெட்டுகள் இருப்பதில் இருந்து பிற்காலச்சோழர் கால கோயிலாக இருக்கலாம். இந்தக் கோயில் கல்வெட்டுகளில் "வடவெள்ளாற்று விளங்குளம்' எனவும் ஈசன் "திருவிளாமுடைய தம்பிரான்' எனவும் குறிக்கப்படுகிறது.

பிரார்த்தனையாக எந்தவித தோஷங்களும் நீங்கவும், சனி உபாதைகள் அகலவும், திருமணம் கை கூடவும், தொட்டது துலங்கவும், துலங்கியது அபிவிருத்தியாகவும், தொன்மையான விளங்குளம் அட்சயபுரீஸ்வரர்} அபிவிருத்தி நாயகி மற்றும் மங்கள சனீஸ்வரரை வணங்கி பலன் பெறுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பட்டுக்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் விளங்குளம் அமைந்துள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.