Breaking News :

Friday, April 19
.

சப்த கன்னிகளும் விரத வழிபாடும்


சப்த கன்னிகளை ஆடி மாதத்தில் வணங்கும்போது தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்.
சிவன் கோவில்களிலும் சப்த கன்னிகளுக்கு தனி இடம் உண்டு.
கன்னி தெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை புராண வரலாறுகள் சப்த கன்னிகள் வழிபாட்டின் வாயிலாகவும் நமக்கு உணர்த்துகிறது. பூலோக வாசிகளின் கவலைகளை தீர்க்கவே அவதரித்தவர்கள் சப்த கன்னிகள்.

சந்தோஷம் நிலைக்கச் செய்யும் இவர்கள் பராசக்தியின் அம்சங்களாக, அவளிடமிருந்து தோன்றியவர்கள். இந்த சப்த கன்னிகள் என்னும் ஏழு பேரின் தோற்றத்தை புராண வரலாறுகள் இரண்டு சம்பவங்களாக கூறுகிறது. புராண வரலாற்றில் இருவேறு விதங்களில் சப்த கன்னிகளின் தோற்றம் பற்றி விவரித்துள்ளனர்.

முதல் வரலாறாக மனித கருவில் பிறக்காத வலிமையற்ற பெண்களால் தங்கள் மரணம் நிகழவேண்டுமென்ற வரம் பெற்ற அசுரர்களின் ஆணவத்தை அழிக்க பராசக்தியின் சொரூபமாக உருவாக்கப்பட்டவர்கள் சப்த கன்னிகள். இரண்டாவது வரலாறாக, அந்தகாசுரன் எனும் அசுரனுடன் சிவபெருமான் போரிட்டார். காயம்பட்ட அந்தகாசுரனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தில் இருந்து அவன் பெற்ற வரத்தின்படி பல்லாயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றினர்.

அவர்களை அழிக்கும் பொருட்டு சிவன் தன் வாய் அக்னியில் இருந்து யோகேஸ்வரி எனும் சக்தியையும் வெளிப்படுத்தினார். யோகேஸ்வரி மகேஸ்வரியை உருவாக்கினாள். அந்த மகேஸ்வரிக்குத் துணையாக பிரம்மா பிரம்மியையும், விஷ்ணு வைஷ்ணவியையும் இந்திரன் இந்திராணியையும், முருகன் கவுமாரியையும், வராகமூர்த்தி வராகியையும், எமன் சாமுண்டியையும் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. மகேஸ்வரி, பிராம்மி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகை களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

*#மகேஸ்வரி: பரமேஸ்வரனின் அம்சமானவள். இவள் சிவனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டவள். சாந்த சொருபிணி- கோபம் மற்றும் உடலின் பித்தத்தை நீக்கி சுகம் தருபவள்.*

*#பிரம்மி: சரஸ்வதியின் அம்சமாக பிரம்மனிடம் இருந்து தோன்றியவள். இவள் கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற வைப்பவள். சிந்தித்து செயல்படும் மூளையின் திறனை அதிகரித்து வெற்றியைத் தருபவள். தோல் நோய் இருப்பவர்கள் இவளை வழிபட்டால் நல்ல குணம் தெரியும்.*

*#கவுமாரி: முருகனின் அம்சமான இவள் சஷ்டி என்றும், தேவசேனா என்றும் அழைக்கப்படுபவள். குழந்தைப் பேறு அருள்பவள். செவ்வாய் தோஷம் அகலவும், வீடு, மனை வாங்க விற்க எற்படும் பிரச்சினைகளுக்கு இவளை வழிபடலாம். உடல், உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் அகலும்.*

*#வைஷ்ணவி: நாராயணி எனப்படும் இவள் திருமாலின் அம்சம். திருமாலின் வடிவில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருபவள். வறுமையை விரட்டுவதில் வல்லவள்.*

*#வராகி: சிவன், விஷ்ணு, சக்தி ஆகிய மூவரின் அம்சமும் கொண்ட இவள், வராக மூர்த்தியின் அம்சமாக தோன்றியவள். பெரும் வலிமையை பெற்றவள். கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் துவம்சம் செய்யக்கூடியவள். இவளை வழிபட தடைகள் மற்றும் துன்பங்கள் அகலும். திருமணத்தடை அகலும்.*

*#இந்திராணி: மகாலட்சுமியை போன்ற அழகானவள். செல்வச் செழிப்பை தரும் இவளை வழிபட கடன் பிரச்சினைகள் தீரும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழந்த வேலையை திரும்ப பெறலாம். அல்லது புதிய வேலை கிடைக்கும்.*

*#சாமுண்டி: வீரத்திற்கு அதிபதியான இவளை மனதில் நினைத்து வணங்கினாலே யானை பலம் கிட்டும்.தீய சக்திகள் அண்டாது. நரம்பு தொடர்பான பிரச்சினைகள் அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும்.*

கன்னி வழிபாடு நடத்தும் வழக்கம் இல்லாத குடும்பத்தினர் அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட உருவெடுத்த சப்த கன்னிகளை ஆடி மாதத்தில் வணங்கும்போது காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் சப்த கன்னிகளுக்கு தனி இடம் உண்டு.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.