Breaking News :

Friday, April 19
.

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது ஏன்?


புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால், கூடுதல் பலன் கிடைக்கும்.

 இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது, புரட்டாசி. புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர், மகாவிஷ்ணு. எனவேதான் புதன் கிரகத்தின் அருளைப் பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது. மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் புதனுக்குரிய வீடு, கன்னி ராசி.  சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில்தான். 
 
எனவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன. புதன் கிரகத்திற்கு நட்பானவர், சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், பெருமாள் வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

 புரட்டாசி மாதத்தை, எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
 
 ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அது முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலாவது, பெருமாளுக்குரிய பூஜைகளை செய்து வழிபடுவதோடு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.
 
 புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.