Breaking News :

Thursday, December 05
.

பிரதோஷ வரலாறு


தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானையின்) மீது அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார்.

தேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது போலும். எப்போது பார்த்தாலும் ''பிடி, சாபம்!'' என்று சொல்லும் துர்வாசர், தன் கையில் இருந்த மலர் மாலையை, மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவனிடம் கொடுத்தார்.

தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான். துர்வாசரின் கண்கள் சுருங்கின.

யானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது.

வெடித்தார் துர்வாசர். ''தேவேந்திரா! அவ்வளவு ஆணவமா உனக்கு? வெறுக்கை (செல்வத்தின்) மேல், வெறுக்கை (வெறுப்பு) கொண்டவர்கள் நாங்கள். லட்சுமிதேவியின் அருள் கடாட்சம் உனக்கு இன்னும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில், அந்த தேவியின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன். ஆனால், செல்வச் செருக்கில் ஊர்வலம் வரும் நீயோ, அதை அலட்சியப்படுத்தி விட்டாய். உன் ஆணவத்துக்குக் காரணமான அந்தச் செல்வம் முழுவதையும் நீ இழக்கக் கடவாய்!'' என சாபம் கொடுத்தார்.

உத்தமர் சாபம் உடனே பலித்தது. தேவேந்திரனது செல்வங்கள் அவனை விட்டு நீங்கி மறைந்தன. பாற்கடலைக் கடைந்தால்தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெற முடியும் என்ற நிலை தேவேந்திரனுக்கு. ஆகவே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று.

திருப்பாற்கடலில் எல்லா விதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது.

சோதனை போல, மத்தான மந்தர மலை கடலுக்குள் அமிழத் தொடங்கியது. உடனே மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, அதைத் தாங்கி, மூழ்காதபடி தடுத்தார். பழையபடியே கடலைக் கடைந்தார்கள். அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது. ஆலகால விஷம் எழுந்தது. அதன் கடுமையைத் தாங்க முடியாத அனைவரும் அங்கிருந்து ஓடி, நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள்.

''ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே! உமையருபாகா! கங்காதரா! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும் ஸ்வாமி... அபயம்... அபயம்!'' என்று வேண்டினர்.

சிவபெருமான் திரும்பினார். அருகில் இருந்த அவரின் மறு வடிவான சுந்தரரைப் பார்த்தார்: ''கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு வா!'' என்றார்.

இந்த இடத்தில் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், '''சுந்தரா! அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொண்டு வா!’ என்றார் பரம்பொருளான சிவபெருமான்!'' என அழகாக நயம்படக் கூறுவார்.

விஷத்தைக் கொண்டு வந்தார் சுந்தரர். ஆல(க)£ல விஷத்தைக் கொண்டு வந்ததால் அவர், 'ஆல(க)£ல சுந்தரர்’ எனப்பட்டார். விஷத்தை வாங்கிய சிவபெருமான் அதை உண்டார். தன் கழுத்திலேயே அதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு '(திரு)நீலகண்டர்’, 'ஸ்ரீகண்டன்’ என்ற திருநாமங்கள் உண்டாயின.

(சிவபெருமான் விஷத்தை உண்டபோது, 'அகில உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால், உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும். விஷம், வெளியே வந்து விட்டாலோ, தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள். யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகால விஷத்தால் உண்டாகக் கூடாது!’ என்ற கருணை உள்ளத்துடன் அம்பிகை, சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள். விஷம் அங்கேயே நின்று விட்டது என்றும் சொல்வது உண்டு.)

அனைவரும் மனக் கலக்கம் தீர்ந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.

மற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் உட்பட அனைவரும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே 'பிரதோஷ வேளை’ எனப்படுகிறது.

ரஜனீ-பிரதோஷம்

பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.

வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.

தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.


பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.

பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.

மகா பிரதோஷம்: சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.


மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!

இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.

ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.

பிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். 'சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.

நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்?

குழந்தை இல்லாக் குறை நீங்குவதற்காக சிலாத முனிவர் என்பவர், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்தார். சிந்தை குவிந்த அவரது தவம், அரனை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

''சிலாதா! என்ன வேண்டும் கேள்!'' என்றார் சிவபெருமான்.
''தெய்வமே... நீயே எனக்குப் பிள்ளையாக வர வேண்டும்!'' _ சிலாதர்.

''என் அம்சமாக உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும். கவலையை விடு!'' என்று அருள் புரிந்து மறைந்தார் சிவபெருமான்.

இறைவனின் வாக்குப்படி சிலாதருக்கு ஓர் ஆண் குழந்தை அவதரித்தது. அந்தக் குழந்தையே 'நந்தி’.
சிவத்தை நோக்கி தவத்தைச் செய்த நந்தி, சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருக்கும் பேறு பெற்றார். வாயிற்காவல் தொழிலைப் பெற்று, ஒரு கணத்துக்கு (சிவ கணங்களில் ஒரு பிரிவு) தலைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்.

தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ''பயப்படாதீர்கள்!'' என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ''அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!'' என்றார் (இப்படியும் சொல்வதுண்டு).

ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார்.

அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ''ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?'' என எகத்தாளமாகப் பேசினார்.

உடனே சிவபெருமான், ''நந்தி! இங்கு வா!'' என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து,  ''இதை முகர்ந்து பார்!'' என்றார்.


நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார்.

உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ''ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!'' என வேண்டினாள்.
''உமாதேவி!

ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!'' என்றார் சிவபெருமான்.

அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார்.
அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.