Breaking News :

Sunday, July 20
.

அருள்மிகு பிராணநாத சுவாமி, திருமங்கலக்குடி


சுவாமி : அருள்மிகு பிராணநாத சுவாமி.   
அம்பாள் : அருள்மிகு மங்களாம்பிகை.      

தீர்த்தம்: மங்கள தீர்த்தம். பிரகாரத்தில் சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.
இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.    சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது.

தனிச்சிறப்பு. 

அம்மன்  மங்களாம்பிகை (அ) மங்களநாயகி. தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார். 

தல வரலாறு : பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப்பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப செலவிட்டார். இதை அறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார். இறக்கும் போது அவர் தனது மனைவியிடம் "நான் இறந்தவுடன் என் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். 

அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள்.

ஊர் எல்லை அருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, "பிராணனைக் கொடுத்த பிராண நாதா" என்று போற்றி வழிபட்டார்.

பிராணனைக் கொடுத்ததால் இறைவன் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகை என்றும் போற்றப்படுகின்றனர்.    
    
அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம்,  "எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்" என்று வேண்ட அவ்வாறே அருளினர். 

அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது.       
மங்காளம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீர்க்க சுமங்கலி பிராப்தமும், விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிவாள். 
மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.       
            
தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும்.  

 மேலும் இத்திருக்கோவிலில் உள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் நிவர்த்தி ஆகும்.       
            
நவகிரகங்கள் சிவனை வழிபட்டு தமது தோஷம் நீங்கிய தலம்.  "நவகிரகங்களுக்கு இங்கு சன்னிதி இல்லை."  
நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில்,   திருமங்கலக்குடி பிராணநாத சுவாமி திருக்கோயில்.

இத்தலத்தை வழிபட்ட பின்னர் சூரியனார் கோயிலுக்குச் செல்வது மரபு.

கும்பகோணம் பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது மயிலாடுதுறை சாலைஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.          

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.